சாவகச்சேரி சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் திறப்பு விழா சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. எவ். சி. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.02.2026 ) பி.ப 05.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (குறுநிதி) திரு. மகேஷ் பெர்ணாண்டோ அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதுடன் விருந்தினர்களால் ஆரோக்கிய உணவகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான சிப்தொர புலமைப் பரிசில் கொடுப்பனவும், தேசிய வலுவூட்டல் பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

நெல்லியடி சமுர்த்தி சமுதாய அடிப்படைவங்கிக் கட்டடம் திறப்பு விழா பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.02.2026 ) பி.ப 03.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினரும், கரவெட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ,சமுர்த்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (குறுநிதி) திரு. மகேஷ் பெர்ணாண்டோ அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதுடன் விருந்தினர்களால் வங்கி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு.F.C. சத்தியசோதி அவர்களும் ,சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களளை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (06.02.2026) மு. ப 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள், அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய, 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் காலத்திற்கு பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்த அடையாளம் காண வேண்டும் எனவும், இதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் உருவாக வேண்டும் எனவும், இதன் மூலம் வறுமையற்ற நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளவர்களின் அறிவினை பகிர்ந்து கொள்வதே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும், வறுமை ஒழிப்பு, கிளீன் ஸ்ரீலங்கா, டியிற்றல் மயமாக்கல் என்ற அரசாங்க கொள்கையுடன் இணைந்தவகையில் சுற்றுலாத்துறைசார்ந்த திட்டங்கள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற அபிவிருத்தித் திட்டங்களையும் அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த சிறப்பான பெரிய திட்டத்திற்கான முன்மொழிவினை கோரியதாகவும், அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது நடைமுறைக்கு சாத்தியமான நிலைத்திருக்கக் கூடிய திட்டங்களை அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நிலைத்திருக்கக் கூடி பயனுறுதி வாய்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்கு உண்டு எனவும், திட்டங்கள் தோல்வி அடையாமல் இருப்பதனை அரசாங்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் ஆரம்ப கட்டமாக ஆராயப்பட்டு பல கருத்துக்கள் ஆரோக்கியமாக பகிரப்பட்டன. இக் கலந்துரையாடலில் வடமாகாண பிரஜாசக்தி தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் திரு. எஸ். கபிலன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் கெளரவ அமைச்சர் அவர்களின் இணைப்பாளர் திரு. எஸ். சிறிவாகீசன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், மாவட்ட பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.


யாழ்ப்பாண மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இணையத்தின் தலைவர் திரு.ந.சுகிர்தராஜ் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (06.02.2026) காலை 10.30 மணிக்கு தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன் அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சமுர்த்தி வங்கி சுன்னாகமும் இணைந்து நடாத்தும் தேசிய பொங்கல் விழா உடுவில் பிரதேச செயலாளர் திருமதி பிறேமினி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.02.2026 ) காலை 09.00 மணிக்கு சுன்னாகம் சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (குறுநிதி) திரு. மகேஷ் பெர்ணாண்டோ அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உரையாற்றுகையில், யாழ்ப்பாண மாவட்டம் சமுர்த்தி சார்ந்த செயற்பாடுகள் மிக நீண்ட காலமாக மிகச் சிறப்பான நிலையை அடைந்து வருவதாகவும், அதற்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் விசேட அம்சமாக தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட சுன்னாகம் சமுர்த்தி வங்கியில் பொங்கல் நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருப்பது மேலும் மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும், சுன்னாகம் சமுர்த்தி வங்கியினை பொறுத்தவரை நீண்ட காலமாக குறிப்பாக ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரையும் போட்டி நிகழ்ச்சிகளிலும் 2025 ஆம் ஆண்டு போட்டிகளிலும் உயர்ந்த நிலையில் காணப்படுவது வரவேற்கத்தக்க விடயம் எனவும், 2025 ஆம் ஆண்டு சமுர்த்தி கணிப்புகளின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டம் 33 சமுர்த்தி வங்கிகளும் இலாபகரமாக இயங்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி யான விடயம் என்பதுடன் வினைத்திறனாக செயற்பாட்டை காட்டி நிற்பதாகத் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்தகைய மதிப்புகளை சமுர்த்தி திணைக்களம் பெற்றுக் கொண்டிருப்பது அதனுடைய பிரதிபலன் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்தாலும் வெளிப்பாடு அதனை நம்பி இருக்கும் மக்களுக்கு கிடைப்பது தான் மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் சமுர்த்தி சார்ந்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டவர்களில் வறுமைக்குட்பட்டவர்களாகவும் நலிவுற்ற மக்களாகவும் காணப்படுவதாகவும், எனினும் கொடுப்பனவு முறைமை மாற்றப்பட்டு அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதிலும் ஏற்கனவே சமுர்த்தி பயனாளிகள் அதற்குள் உள்வாங்கப்பட்டிருப்பது சிறப்புக்குரிய விடயம் எனவும் தெரிவித்தார். மேலும், இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து அரச கொள்கைத் திட்டங்களிலும், டித்வா புயல் வெள்ள அனர்த்தம் மற்றும் பிரஜாசக்தி திட்டங்களிலும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு அதனூடாகவே மதிப்பீட்டு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனூடாக அப்பணியின் உயர்ச்சி நிலையை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கிராம மட்டத்தில் ஆற்றுகின்ற செயற்பாடுகள் ஒவ்வொரு பாமர மக்களின் வாழ்விலும் மேம்பாட்டை அடையச் செய்யக்கூடியதாக - அதற்கான மாற்றத்திற்கான புள்ளியாக நாம் செயற்பட வேண்டும் எனவும்,
சமுர்த்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் ஆற்றிய செயற்பாடுகளுக்கான கௌரவம் தேசிய ரீதியில் கௌரவத்தை பெறுவதற்கு வழி வகுத்ததாகவும் யாழ்ப்பாணம் மாவட்டம் முதல் நிலை பெற்றமைக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள்,மாவட்ட பணிப்பாளர் மற்றும் அதனுடன் இணைந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் சரியான முறையில் ஆற்றுப்படுத்தி செயற்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அரச சார்ந்த செயற்பாடுகளில் மக்கள் நலன் சார்ந்ததாக காணப்படும் போது செயற்பாட்டு முறைமை க்குரியவர்களாக மாற்றப்பட வேண்டும் எனவும், சரியான முறையில் வழிப்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளவதன் மூலம் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடடைய செய்து அனைத்து மக்களது வாழ்விலும் சுபீட்சத்தை ஏற்படுத்த முடியும் எனவும் இதற்கு மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலாளர் முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு இணங்க அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை கூறி அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு கொடிதின சேகரிப்பில் அதிக நிதியினை சேகரித்த முதல் 06 உத்தியோகத்தர்களுக்கான விருதுகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் கடன் நிதி வழங்கல் என்பன பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்களாலும் சிறப்பு விருந்தினர்களாலும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களும் மற்றும் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.






