போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்திவரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட போக்குவரது ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(25.02.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் திரு. பி.ஏ. சந்திரபால, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், போக்குவரத்து பிரச்சனையினை சரியாக கையாளுதல் வேண்டும், நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமாக விளங்குவதாகவும், பாடசாலை பிள்ளைகளின் போக்குவரத்து தேவைப்பாடுகளை ஆராய்ந்து தீர்வு காணும் களமாக இக் கூட்டத்தினைபயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அந்த வகையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து மானியத் திட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதனடிப்படையில் 03 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், முதலாவது "சிசுசரிய" பாடசாலை மாணவர்களுக்கான மானியத் திட்டம் அதாவது போதிய மாணவர்கள் இன்றி பாடசாலை சேவையினை முழுமையாக வழங்கமுடியாத வழித்தடங்களுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் மானியத் திட்டம் எனவும், இரண்டாவதாக "கமிசரிய" மானியத் திட்டம் அதாவது கிராமத்திலிருந்து வேலைக்கு மற்றும் வைத்திய தேவையினை நிறைவு செய்வதற்கு நாளாந்தம் கிராமத்திலிருந்து நகருக்கும், நகரத்திலிருந்து கிராமத்திற்கும் சென்று வருவதற்கான போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் மூன்றாவதாக "நிசிசரிய" இரவு இறுதி பேரூந்து சேவையும் அதிகாலை முதலாவதாக ஆரம்பமாகும் பேரூந்து சேவையிற்கான கேள்விக் கோரல் முறையில் குறைந்த கட்டணம் கோரும் பேரூந்துக்கு வழித்தடங்கல் வழங்கப்படும் திட்டமாகவும் அமையும் எனத் தெரிவித்தார். மேலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகளின் தரமான நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தினையும் அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், இக் கூட்டத்தினை எமது மாவட்டத்தில் நடாத்தி மக்களுக்கு தெளிவூட்டல் வழங்குமாறு அறிவித்தல்கள் வழங்கிய போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்து, இச் செயலமர்வில் போக்குவரத்து நெருக்கடிகளையும் ஆராய்ந்து தீர்வுகாணும் களமாகவும் பயன்படுத்த செயலமர்வுக்கு வருகை தந்தவர்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட போக்குவரது ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் தலைமையுரையாற்றிய, வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை பெறுகின்றமை குறைவானதாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், இதற்காக இது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் விழிப்பூட்டும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இதன் ஊடாக இவ் விடயங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் எனவும், இதற்காக அரசாங்கம் ரூபா 4,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை எனவும், பேருந்து சேவை நாட்டின் அத்தியாவசிய சேவை ஆகும் எனவும், இது ஸ்தம்பிதமானால் அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும், வடக்கு மாகாணத்தில் இவ்வாறான மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாகும்எனவும் தெரிவித்தார். மேலும், இவை தொடர்பில் பூரண தெளிவுகளை வழங்கும் நோக்கில் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், இவற்றை எமது எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். உள்ளூர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் குறித்த கலந்துரையாடலும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது. மேலும், மாணவர்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடசாலை பேரூந்து சேவை (Sisu Sariya), கிராமப்புற பேரூந்து சேவை (Gami Sariya), இரவு நேர பேரூந்து சேவை (Nisi Sariya) திட்டங்களின் போக்குவரத்து வழிகாட்டிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
மேலும், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் 'சிசு சரிய' பாடசாலைப் பேருந்து சேவையை அதிக வினைத்திறனுடனும், பயனுள்ள முறையிலும் யாழ் மாவட்டத்தில் விரிவுபடுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பங்குபற்றுனர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் திறந்த வெளிக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது போக்குவரத்து அட்டவணை ஒழுங்குபடுத்தல் மற்றும் சீரமைப்பு, பாதுகாப்பு நடைமுறைகள், பயணிகளின் நலன் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் போன்றன தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ்.கபிலன், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ்.சிவகுமாரன், பிரதேச செயலாளர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் அங்கத்தவர்கள், போக்குவரத்து தொடர்பிலான பல்வேறு சங்கங்களின் அங்கத்தவர்கள், சமூகமட்ட பிரதிநிதிகள் விடைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலைய மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின கூட்டுறவு சேவைகள் பிரதி அமைச்சர் கெளர உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.02.2026) பி. ப 04.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. உபல் சாந்த டி அல்வீஸ், தேசிய விவசாய சந்தை சேவைகள் லிமிடெட் தலைவர் திரு. வசந்த கே. பி. சேனநாயக்க, சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை முகாமையிடும் பொருட்டு நிறுவப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் லிமிடெட் நிறுவனத்தினைக் கூட்டிணைத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான வழிவகைகள் ஆராயப்பட்டதுடன், நாட்டிலுள்ள 18 பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமையினை ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்துவது தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட விவசாய சம்மேளத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர், ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி, சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொருளாதார மத்திய நிலைய கடை குத்தகைக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் (24.02.2026) நண்பகல் 12.00 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார். சுவாமி உட்பட குழுவினரை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் மற்றும் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் திரு. ஜெ. விவேகானந்தன் உள்ளிட்ட குழுவினர் சுவாமிகள் தலைமையிலான குழுவினரை வரவேற்றனர். ஆன்மீகத் தொடர்புடைய சிவாலயங்கள் மற்றும் நுவரெலியா சீதை அம்மன் கோவிலுக்கு ஆன்மீக விஜயம் மேற்கொள்வதன் மூலம் இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார விஜயங்களை ஊக்குவிக்கும் முகமாக சுவாமி அவர்களின் விஜயம் அமைந்துள்ளதுடன், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து தரிசனத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா உபகுழுக் கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான உப குழுவினுடைய தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரன்மூர்த்தி றஜீவன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.02.2026) பி.ப 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் வரவேற்புரை யாற்றுகையில், கூட்டத்திற்கு வருகைதந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், பொது நிர்வாக உள்நாட்டவலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக மாவட்டம் தோறும் சுற்றுலாவை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சுற்றுலா மேம்பாடு தொடர்பான உப குழு கூட்டம் ஒன்றை நடாத்துமாறு அமைச்சினால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக, இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை மாவட்டத்தில் முன்னெடுப்பதற்காக அல்லது மேம்படுத்துவதற்காக இன்று கூட்டப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்த இவ் உபகுழு ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புவதாகவும், பிரதேச சபைகள் பிரதேச செயலகங்கள் மற்றும் நகர மற்றும் மாநகர சபைகள் ஆகிய அனைத்து சபைகளும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் பிரதேச அபிவிருத்தியினை மேற்கொண்டு திட்டங்களை மேலும் வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் சுற்றுலாத் துறை தொடர்பாக பல்வேறு முயற்சிகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் முன் நிகழ்ச்சி திட்டங்களை முன் ஏற்பாட்டுடன் தயாரிக்க வேண்டும் எனவும் பிரதேச மட்டத் திட்டங்களை தயாரித்து அதனை முன்னெடுக்கும் போது அந்தப் பிரதேசத்திற்கு அந்த கிராமத்திற்கு அந்த மாவட்டத்திற்கு தேவையான விடயத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார் மேலும், கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 130 மில்லியன் ரூபா நிதி சுற்றுலாவிற்காக ஒதுக்கப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், யாழ் மாவட்ட சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் சுற்றுலா பயணிகளை எவ்வாறு கவரலாம் மற்றும் வேலைவாய்ப்பு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான ஒரு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறும் அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் இச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன்போது தலைமை உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன் அவர்கள், யாழ் மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும், இதற்கு அமைவாக மாவட்டத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் ஊடாக தேசிய வருமானம் மற்றும் உள்ளூர் வருமானத்தை ஈட்டி கொள்ள முடியும் என்பதுடன் தொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்தார். மேலும், யாழ் மாவட்டமானது சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் அதிக செல்வாக்கு செலுத்தப்படும் மாவட்டமாக காணப்படுவதாகவும்,
அமைச்சரவையில் இது தொடர்பாக பல ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையான சுற்றுலா தளங்களாக மாற்ற வேண்டும் என்றும், அண்மையில் உலகளாவிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் சுற்றுலாத்துறை சார்ந்து பிரபல்யமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தினுடைய தொன்மையையும் சிறப்பம்சங்களையும் இணையதளங்களில் காட்சிப்படுத்துமாறும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுடன், மாவட்டத்தின் சிறப்பம்சங்களை உலகளாவிய ரீதியில் பிரபல்யப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர வேண்டும் எனவும், அதற்கான திட்டங்களை முன் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், இதனூடாக அதிக சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாக இருப்பதுடன் நமது இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் இதற்கான காத்திரமான ஆலோசனைகளை அனைவரும் வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பில் காணப்படும் ஆளணி பற்றாக்குறைகளை பூர்த்தி செய்து சுற்றுலாத்துறையை மேலும் வினை திறனாக மேற்கொள்வதன் ஊடாக சுற்றுலா துறையை மேம்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்படும் 9 திட்டங்களுக்கான அனுமதிகள் தொடர்பாகவும் இத் திட்டங்களின் அமுலாக்கலின் சாத்திய நிலைமைகள் மற்றும் நிலையான தன்மை போன்றவை தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுடைய கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலா பணியகத்தின் தலைவர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் சுற்றுலா துறை சார்ந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சபைகளுடைய செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.02.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல்அமைவதாகவும் தெரிவித்து, கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறப்புற அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் அரசாங்க அதிபரால் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், பாதுகாப்பு படைகளின் அதிகாரி லெப். கேணல் கே. எம். சி. எஸ். டி. கருணாதிலக, உதவி பொலிஸ் அத்தியகட்சகர் திரு. கொ. டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை), வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






