சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் - யாழ்ப்பாணமாவட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கெளரவ கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (11.03.2026) ஆந் திகதி பி.ப 1.30 மணி தொடக்கம் பி.ப 4.30 மணி வரை தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் வட மாகாண சமூக சக்தி இணைப்பாளருமான திரு. எஸ். கபிலன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க. சிவகரன் அவர்கள், வறுமையை ஒழித்து தேசத்தை கட்டி எழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற பிரஜா சக்தி தேசிய வேலைத் திட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்றதுடன், வறுமையை குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கிலான இவ் வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட விழிப்புணர்வு நிகழ்விற்காக அண்ணளவாக 750 இற்கும் மேற்பட்டவர்கள் இங்கு கூடியிருக்கின்றோம் எனவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 435 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 8,700 உறுப்பினர்கள் இவ் வேலைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், வறுமையினை நீக்குவதற்காக
நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், இதனூடாக ஒவ்வொரு பிரதேசத்தின் வறுமையை நீக்கக்கூடியதாக இருக்கும் எனவும், இந்த பிரஜா சக்தி வேலைத் திட்டமானது யாழ் மாவட்டத்தில் உள்ள வறுமை நிலையினை குறைத்து யாழ் மாவட்ட அபிவிருத்தி வேலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு. சம்பத் மந்திரிநாயக்க அவர்கள் சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் நோக்கங்களை தொடர்பில் விளக்கினார். தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், வடமகாண சமூக சக்தியின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ்.கபிலன் அவர்கள் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து "சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கெளரவ கலாநிதி உபாலி பன்னிலகே அவர்கள் சமூக சக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் "சமூக சக்தி” தேசிய வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் சமூக அபிவிருத்தி சபையின உருவாக்கம், மற்றும் அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் "நமது கிராமத்தை நாமே கட்டியெழுப்புவோம்" விழிப்புணர்வு காணொளி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளரும்
"சமூக சக்தி” வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் (கொள்கை உபயோகம்) சாரஞ்சலி மனோகரன் சமூக அபிவிருத்தி சபையின் வகிபாகங்கள் தொடர்பில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமூக அபிவிருத்தி சபையின் தலைவர், செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார். குறித்த வேலைத்திட்டம் வறுமையை ஒழித்து நாட்டு மக்களை அனைத்து வகையிலும் வளமான மனிதர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் “செழுமையான தேசம் பசுமையான வாழ்க்கை” எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இவ் வேலைத் திட்டத்திற்காக யாழ் மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
 
 
19 2 3 4 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (10.03.2026) மு.ப 10.00 மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட பயனாளிகளின் விபரம் IOM நிறுவனத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கான கொடுப்பனவிற்கு அனுமதி பெறும் பொருட்டு பயனாளிகளின் விபரம் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உதவி திட்டம் மற்றும் அவர்கள் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி திருமதி. கிறிஸ்ரின் பாகோ, IOM நிறுவனத்தின் பிரதிநிதி (Emergency Unit) திரு .ரிச்சர்ட், யாழ்ப்பாண மாவட்ட IOM திட்ட இணைப்பாளர் எச். தர்சிகா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ. தர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
போதை ஒழிப்பு தடுப்பு செயற்திட்டம் தொடர்பான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (5.3.2026) பி.ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது "முழு நாடுமே ஒன்றாக" விஷ போதைப் பொருட்களை தடுப்பதற்கான வாரமாக அதிமேதகு சனாதிபதி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் மதுசார மற்றும் போதைப் பொருள் தடுப்பு நிலையத்தின் இணைப்பாளர் எஸ். மோகன்தாஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு போதை ஒழிப்பு செயற்றிட்டம் தொடர்பான விளக்கம் அளித்தனர இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், போதைப் பொருட்களின் செயற்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், அரசாங்கத்தினுடைய கொள்கையின் அடிப்படையில் பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், விஷ போதைப் பொருட்களுடைய ஆபத்து அனைவரையும் பாதிக்கும் நிலை ஏற்படலாம் என்பதால், அதனை முற்றாக நமது நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் எனவும், அதற்கு எல்லோரும் பங்கெடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும் எனவும், அதனை ஒழிக்க எல்லோரும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார். இவ் விழிப்புணர்வு நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி மற்றும் பதவி நிலை உத்யோகத்தர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11
புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை அலுவலர்களுக்கான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் தலைமையில் இன்றைய தினம் (09.03.2026) காலை 09.00 மணிக்கு முகாமைத்துவ திறன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இவ் செயலமர்வில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவைகள் அலுவலகர்களுக்கான 10 நாள் பயிற்சி செயலமர்வு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி அனுசரணையில் மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறுகின்றது எனவும், இதனை சரியாக உத்தியோகத்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், சிறந்த வளவாளர்களால் இச் செயலமர்வு நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இச் செயலமர்வுக்குரிய வழிகாட்டுதல்கள் மேலதிக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. கி. பொ. தனபாலா மற்றும் வளவாளர் திரு ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் பங்குபற்றினார்கள். இச் செயலமர்வில் புதிதாக நியமனம் பெற்ற 60 முகாமைத்துவ சேவைகள் அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7
"ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் ஓய்வூதியத்திற்கு முந்தைய திட்டம் தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.03.2026) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இந் நிகழ்ச்சித்திட்டமானது அரச மற்றும் தனியார் துறைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஓய்விற்கு தயாராகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கு சமூகமயமாதலுக்கு மற்றும் முதுமை பருவத்தினை செயற்திறனாக எதிர்கொள்வதனை இலக்காகக் கொண்டு இச்செயலமர்வு நடாத்தப்பட்டது இதில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF), ஊழியர் சேம நிதியம் (EPF) ,ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளல் தொடர்பான சுய கோவை தயார்படுத்தல், ஓய்வு காலத்தில் உடலியல் உளவியல் நலம்" திட்டமிடப்பட்ட முதுமைப் பருவம்" ஓய்வினை கழிப்பதில் முதியோர் சமூகமயமாதலுக்கு முகம் கொடுக்க வழிகாட்டல் என்பன தொடர்பாக வளவாளர்களால் கருத்துரை இடம் பெற்றது இச் செயலமர்வின் வளவாளர்களாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் பிராந்திய முகாமையாளர் திரு.ஜெ. தமிழழகன், தொழிற் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் திரு. பற்குணராசா பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலக கணக்காளர் திரு.க.ஸ்ரீதரன் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட உத்தியோகத்தர் திரு. ஜி. றஜீவ் ஆகியோர் பங்குபற்றினார்கள். இச் செயலமர்வில் மாவட்ட செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி ஸபெல்மன் பாலகுமாரி 15 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8