அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (07.04.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இடமாற்றம் உள்ளடங்கிலான நிர்வாகப் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடியதுடன், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் அரசாங்க அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். இக் கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன், சகல பிரதேச செயலக சமுர்த்தி தலமையக முகாமையாளர்கள், மாவட்டச் செயலக சமுர்த்தி விடய முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.04.2026) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகையில் காணி வழங்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விரிவாக ஆராயப்பட்டு, சில காணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனைய காணிகளுக்கான சாத்தியப்பாட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாயத்ததிணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10
சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. “செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, “சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்” என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது. இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே “சுரகிமு லங்கா” திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும். எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 
1 2 3 4
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(07.04.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த 13.11.2025 நடைபெற்ற விவசாய குழுக் கூட்டம், உணவுப்பாதுகாப்பு கூட்டம் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதை நோக்காக கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த செயற்பாடுகளில் எவ்வாறான விடயங்களை கையாள வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் இக் கூட்டத்தில் ஆராய்வதுடன், மாவட்ட விவசாய அபிவிருத்தியில் மாவட்ட உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் எவ்வாறான சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆராய்வதுடன், விவசாயிகள் விவசாயத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கியதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய தேவைகளை தன்னிறைவு எட்டக்கூடியதாக உள்ளமையும் மாவட்டத்திற்கு வெளியே ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகவும் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, மாவட்ட விவசாயிகளுக்கான பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்குரிய ஆலோசனைகளையும், விவசாயிகளை தமது கருத்துக்களையும் முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. தொடர்ந்து விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்து கொண்டிருந்த வங்கி முகாமையாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.மேலும் பாதீனிய ஒழிப்பு செயற்றிட்டத்தினை பிரதேச செயலாளர் மட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். மேலும் நீரிழிவு நோயாளர்களுக்கு சிறுகுறிஞ்சா செடியினை மருந்தாக பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி வருகின்ற யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் கார்த்திகேசு குலநாயகம் அவர்களால் சிறுகுறிஞ்சாவினை எவ்வாறு நீரிழிவு நோயாளர்களுக்கு மருந்தாக பயன்படுத்துவது, அதன் பயன்பாடுகள் தொடர்பிலும் Natura(Pvt) Ltd நிறுவனத்தின்
சிறுகுறிஞ்சா செடியின் கொள்வனவு திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ திரு. எஸ்.கபிலன் ,மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திரு.எஸ்.ஜே.அரசகேசரி, திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள், துறைசார் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
நடப்பாண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (31.03.2026) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இவ் வருடத்துக்கான முதலாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டமாக இது அமைந்ததுள்ளதாகவும், கணக்காய்வு முகாமைத்துவ நடவடிக்கைகளின் நோக்கம் வினைத்திறனான செயற்பாட்டிற்கானதே எனவும், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக உள்ளகக் கணக்காய்வு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு அதனுடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதனை ஒத்த அதற்கு நிகரான செயற்பாடுகளை பிரதேச செயலகங்களில் முன்னெடுக்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது எனவும், உள்ளகக் கணக்காய்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் நோக்கம் தேசிய கணக்காய்வு முகாமைத்துவத்திற்கு செல்ல முன்னர் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு ஆற்றுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும், அதற்கான சரியான வழிமுறையை பின்பற்ற வேண்டும் எனவும், கணக்காய்வு தொடர்பான ஐய வினாக்கள் எழும்போது அதற்கு விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் பொறுப்பு கூற வேண்டும் எனவும், சரியான நிதி நடைமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக சரியான நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. பிரபாகரன், சிரேஷ்ட உதவி கணக்காய்வு அத்தியட்சகர் திரு. ஜெரூஸ் ஆகியோர் நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாகவும், கணக்காய்வு அத்தியட்சகர் திருமதி பிரேமதாஸ, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி பொன்ராணி பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு எஸ்.ரமேஷ்குமார் ஆகியோரும் பங்குபற்றி னார்கள். இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. மேலும், இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள், துறை சார்ந்த கிளைகளின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 13