யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்களின் கெளரவிப்பு நிகழ்வு நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளருமான திரு. மனுவல் வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (22.04.2026) பி.ப 03.00 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபரும் நலன்புரி சங்கத்தின் போசகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையினை நிகழ்த்திய அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம் ஏனைய சக திணைக்களங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் முன்னுதாரணமாக செயற்பட்டு வருகின்றது எனவும், அந்த வகையில் நலன்புரிச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி நோக்கும் போது
மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள், அரசசேவையில் 25 வருட சேவையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் - தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட இருக்கின்றார்கள் எனவும், இம் முறை மாவட்டச் செயலக உத்தியோகத்தர் திரு. அனுரகாந்தன் அவர்களின் மகனும் ஹாட்லிக் கல்லூரி மாணவனுமான செல்வன் அ. விஸ்வகாந்தன் மாவட்ட ரீதியாக கணிதப் பிரிவில் முதல்நிலை பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயம் எனவும், அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியாக சாதனை பெறுகின்ற பிள்ளைகளையும் கெளரவிக்கின்ற நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோளையும் முன்வைத்தார். மேலும், மாவட்டச் செயலகம் ஓர் குடும்பமாக இணைந்து மேற்கொண்ட நலன்புரிக்கழகத்திற்கு நன்றிகளை தெரிவித்தவுடன், கெளரவம் பெறுபவர்கள் அனைவரது வாழ்வும் ஒளிமயமானதாக இருக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வில் ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் தமது அனுபவப் பகிர்வினை வழங்கினார்கள். இறுதியாக மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள், அரசசேவையில் 25 வருட சேவையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்கள், 2024 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 36
 
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டான்மைகளை ஏற்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. விசாரணைக் குழுக்களால் வழங்கப்படும் பரிந்துரைகளைத் திறம்படச் செயற்படுத்துவதற்கு, காணாமல் போனோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் குறித்த ஒரு முழுமையான புரிதல் தேவைப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, OMP யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளுடன் ஒரு கலந்தாய்வு நிகழ்வினை காணமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக தலைமையக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (23.04.2026) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களுக்கு காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் (OMP) சட்டத்தின் அம்சங்கள், சிவில் அமைப்புக்களின் பங்களிப்புகள் மற்றும் OMP யுடன் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வழிகள் குறித்து தெளிவூட்டல்களை வழங்கி வழிகாட்டுவதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இக் கலந்தாய்வில் பின்வருவோரால் பின்வரும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
01.காணாமல் போனோர் அலுவலகத்தின்(OMP) பங்கு, அதிகாரம் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக
திரு. ஏ. என். நுவான் அவர்களால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
02.காணாமல் போனவர்கள் பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டம், தற்போதைய நிலைமை மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்தும் உறுப்பினர் திரு. மீராக் ரஹீம் அவர்களால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
03.காணாமல் போன நபர்களின் குடும்பங்களின் தேவைகளை OMP பிரதிநிதியால் கண்டறிந்து புரிந்துகொள்ளுதல் தொடர்பாக உறுப்பினர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களாலும் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
04.காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ் தொடர்பான விளக்கத்தினை வடமாகாண பிரதி பதிவாளர் நாயகம் செல்வி ஆனந்தி ஜெயரத்னம் அவர்கள் வழங்கினார்.
மேலும், உளவியல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடப்பட்டதுடன், இது கேள்வி பதிலுடன் கூடிய கலந்துரையாடலாகவும் அமைந்திருந்தது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சிவில் சமூக அமைப்புகள் கலந்துரையாடுவதற்கான தனி அமர்வுகளாகவும் அமைந்திருந்ததுடன், OMP பிரதிநிதியின் ஒத்துழைப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்தாய்வு நடைபெற்றது. இக் கலந்தாய்வில் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், காணாமல் போன ஆட்கள் அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் திரு. த.செல்வகுமார், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. ம கண்ணதாசன், திருமதி. சிவாஜினி புலேந்திரகுமார், திருமதி திவ்யா கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலகர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய நல்லிணக்க அபிவிருத்தி உத்தியவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9
 
நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்றைய தினம் (22.04.2026) சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் தலைமையில் நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் முக்கிய அம்சமாக மறைந்த குரு மகா சந்நிதானத்தின் திருவுருவச் சிலை கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் குரு மகா சந்நிதானத்தின் நினைவைப் போற்றும் வகையிலான 'சிறப்பு மலர்' உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திவேல்நம்பி, வலம்புரி நாளிதழ் பிரதம ஆசிரியர் திரு. ந. விஜயசுந்தரம் உள்ளிட்டவர்களால் சிறப்புரைகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,
தமிழும் சைவமும் தழைத்தோங்குகின்ற நல்லூர் பிரதேசத்தினுடைய அடையாளமாக நல்லை ஆதீனமும் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு மாற்று கருத்துக்கு இடமில்லை எனவும், யாழ் மாவட்ட செயலக நிகழ்வுகளில் சமயத் தலைவராக மறைந்த ஆதீன சுவாமி அவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் வழங்குவதுடன் மாவட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் கூறுபவராகவும் விளங்கியவர் எனத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆன்மீகம் சார்ந்து பிரதேசத்தை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லலாம் என்ற பல்வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துபவராகவும் விளங்கியவர் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், சுவாமிகளின் மறைவு இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவருடைய வெற்றிடம் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவ் இடைவெளியினை நிரப்ப வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருப்பதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பெருமைகள்மற்றும் மரபுகள் நிலைத்து நிற்க மாவட்டச் செயலகம் அதற்கு துணையாக நிற்கும் எனவும் தெரிவித்தார். மேலும், இந் நிகழ்வில் சமயப் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் பெருமளவான அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திற்கு அமைய - வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பங்குபற்றுனர்களுடன் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.04.22) பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வரவேற்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்கள், யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டு திட்டத்திற்கமைய அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவ்வாண்டு முதற்கட்டமாக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தொடர்ந்து யாழ் நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பங்குதாரர்களுடன் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் பழைய பேரூந்து நிலையம் தொடர்பாகவும், யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றலில் உள்ள பிரச்சனை தொடர்பாகவும் இதற்கான முன்மொழிவுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கெளரவ அமைச்சர் விரிவாக ஆராய்ந்தார். மேலும், போக்குவரத்து சேவைகளை இலகுபடுத்த யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை (Metro Bus) வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கெளரவ அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கருணைநாதன் இளங்குமரன், கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், மாநகர சபையின் கெளரவ முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ்.கபிலன், அமைச்சரின் இணைப்பாளர் திரு. எஸ்.ஸ்ரீவாகீசன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
 1 2 3 4 5 6 7 8 9 10 11
குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாவது கட்ட புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (22.04.2026) காலை 09.00 மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்கா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு முன்னரான நடைபாதையுடன் கூடிய வீதிப் புனரமைப்பு 299.80 மில்லியன் ரூபாவில் - பெருந் திட்டத்திற்கமைய (Master Plan) அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகள் இன்றைய உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக குறித்த இறங்குதுறை புதிய தோற்றத்துடன் நீண்ட காலத்திற்கு பின் இரண்டாம் 984 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது. மேலும் குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் கெளரவ அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முதலாம் கட்ட புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆராய்ந்தனர். இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும்யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 13