யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், ஊராட்சி கலந்துரையாடல், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம்(12.05.2026) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி க.தாரணி ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பிரதேச மட்டங்களின் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளை அவை சம்பந்தமான அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி ஆராய்ந்து அது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான களமாக இது அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பல்வேறுபட்ட செயற்திட்டங்களை இத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் சமுர்த்தி சேமிப்பு கணக்கு, மருதங்கேணி பிரதேச வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், மக்களுடைய பிரச்சினைகளை அதிகாரிகளாகிய நாங்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்த வகையில் சாதகமாக பரிசீலித்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை பெற்றுக் கொள்கின்றோம் என்பதுடன் அனைவரும் ஒருங்கிணைந்த வகையிலே செயற்றிட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஏதுநிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் எதிர்நோக்கும் பல்துறைசாா் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஊராட்சி முற்றத்தில் கலந்துரையாடி தீர்வு வழங்குவதை நோக்காக கொண்டு இக்கூட்டம் நாடாத்தப்பட்டது. இதில் ஊராட்சி முற்ற கூட்டத்தின் நோக்கம், மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சமுர்த்தி சேமிப்புக்கணக்கு, வணிக நிலையங்களில் விலைப்பட்டியல், வெதுப்பக உணவுப் பொருட்களின் தரம் மற்றும் நிறை, மருதங்கேணி வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் அழகுக்கலை, நெடுந்தீவு போக்குவரத்து, விவசாய நிலங்களை பாதுகாத்தல் தொடர்பான விடயங்களும் மாவட்ட ரீதியில் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் திருமதி ம.தமிழ்செல்வி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், தொடர்புடைய அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட குடிசார் அமைப்புகளின் சம்மேளன உறுப்பினர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.
 
 
1 2 3 4 5 6 7
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டமானது அரசாங்க அதிபரும் பண்பாட்டு பேரவையின் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.05.2026) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு, அரசாங்க அதிபர் அவர்களினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழாவினை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
2.பண்பாட்டுப் பெருவிழாவில் வெளியிடவுள்ள யாழ்ப்பாண இதழ் - 05 ற்கான தலைப்பு தீர்மானிக்கப்பட்டது. " நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்" தலைப்பே தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும்,
இதழுக்கான ஆக்கங்களை பொது மக்களிடமிருந்து எதிர்வரும் யூன் மாதம் 30 ஆம் திகதிற்கு முன்னர் பெற்றுக்கொள்ளநடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் நூலுக்கான ஆலோசனைக் குழு, மதிப்பீட்டுக் குழு மற்றும் மலர்குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
3.பண்பாட்டு விழாவில் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியான கலை நிகழ்வுகளை நடாத்த ஒழுங்கு செய்யுமாறும் கலாசார உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணலினி விஜயரத்தினம், மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் இன்றைய தினம்(06.05.2026) மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. அம்பலவாணர் சோதிநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி கஜானி பார்த்தீபன் அவர்களும், கெளரவ விருந்தினராக Fairmed Foundation இணைப்பாளர் டாக்டர் நயனி சூரியாராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் விருந்தினர்களால் கண்காட்சிக் கூடங்கள் நடாவினை வெட்டி ஆரம்பிக்கப்பட்டு பார்வையிடப்பட்டதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனத்தினைத் தொடர்ந்து, வரவேற்புரை உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா் ஷினி அவர்களாலும், தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது. தொடர்ந்து இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தனது உரையில், இவ் மாவட்ட கண்காட்சி நிகழ்வானது நீண்ட காலத்துக்கு பின்னர் அதாவது 10 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவது மகிழ்ச்சியான விடயம் எனவும், பெண்கள் சர்வதேச ரீதியாக இன்றைய உலகில் சாதனை படைத்து வருகின்றார்கள் எனவும், அந்தவகையில் கிராமங்களிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியாக உயர வேண்டும் எனவும், அதற்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் பயிற்சி நெறிகள் மூலம் அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கிராமங்கள் அபிவிருத்தி அடைந்தால் மாவட்டம் அபிவிருத்தி அடையும் அதனைத் தொடர்ந்து மாகாணம் அபிவிருத்தி அடைந்து நாடு அபிவிருத்தி அடையும் எனவும், எனவே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது எனவும் தெரிவித்தார். மேலும், இன்றைய சமூகத்தில் பெண்கள் பிரதான பங்களிப்பினை ஆற்றி வருகின்றார்கள் எனவும், கல்வித் துறையிலும் சரி அரசு துறையிலும் சரி பெண்களின் பங்களிப்பு காத்திரமாக உள்ளது எனவும், கிராமத்தினையும் பெண்களின் பொருளாதாரத்தினையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் அப் பிரதேசம் அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார். மேலும், ஒரு மனித வாழ்க்கையில் ஆடை வடிவமைப்பு, மனப் பொருளியல் மற்றும் அழகுக்கலை முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், மாறி வரும் உலகில் இதன் வடிவங்களோ வகைகளோ மாறினாலும் இம் மூன்றும் மாறாது எனவும், அந்தவகையில், கிராம அபிவிருத்தி திணைக்களம் ஒரு முதுகெலும்பாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். இன்றைய நிகழ்வினை மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்த மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்ரா சுதாகரன் அவர்களுக்கும் அவருடைய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், மேலும் இன்றைய பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்கள் மேலும் தமது திறனை வளர்க்க மேலதிகப் பயிற்சிகளையும் பெற்று சுய தொழிலில் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக வளம் பெற்று சிறக்க தமது வாழ்த்துக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்துக் கொண்டார். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. அம்பலவாணர் சோதிநாதன் தனது உரையில், கிராம அபிவிருத்தி திணைக்களம் பல்வேறு கிராமம் சார்ந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திவருவதாகவும், மகளிருக்கான தொழில்வாண்மைக்காக நீண்ட காலமாக பயிற்சி வழங்கிவருவதாகவும், ஆடை வடிவமைப்பு, அழகு கலை போன்றவற்றுக்கான கேள்வி சமூகத்தில் பெருமளவில் இருக்கின்றது எனவும், அதனால் இவ் வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், 06 மாத பயிற்சி ஒரு வருடமாக நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இப் பயிற்சி நெறி மூலம் கிராம ரீதியாக - சமூகத்தில் பொருளாதார ரீதியாக உயரமுடியும் எனவும் குறிப்பிட்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்து, தமது அமைச்சு சுய தொழிலுக்கும் உதவி வழங்கும் எனவும் தெரிவித்தார்.
பிரதேச செயலக ரீதியாக நடைபெற்ற ஆடை வடிவமைப்பு, கேக் ஐஸ்சிங், அழகுக் கலை, அலங்கார பூக்கள் வடிவமைப்பு, சமையல் கலை உள்ளடங்களாக15 வகையான ஒரு வருட பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ள 237 மாணவர்களுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசில்களும், பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமாச் சான்றிதழ்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், உற்பத்தி பொருட்கள் போட்டியில் முதலாம் இடம் கோப்பாய் சரஸ்வதி தயாரிப்பு சங்கமும், இரண்டாவது இடம் காரைநகர் மத்திய மாதர் அபிவிருத்தி சங்கமும், மூன்றாம் இடம் கரவெட்டி இமையாணன் மத்திய கிராம அபிவிருத்தி சங்கமும் பரிசில்களை பெற்றுக்கொண்டதுடன், ஒட்டு மொத்தமாக இன்றைய கண்காட்சியில் யாழ்ப்பாண பிரதேச செயலகம் அதிகளவில் பங்குபற்றியமைக்கான சிறப்புப் பரிசிலைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. Fairmed Foundation இணைப்பாளர் டாக்டர் நயனி சூரியாராச்சி அவர்களால் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் கேக் ஐசிங் பயிற்சி நெறிக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், இந் நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவர்களின் கோலாட்டம், சிறப்பு நடனங்கள், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வின் இறுதியில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்ரா சுதாகர் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், போதனாசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
 
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், சேதன விவசாயம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தொடக்கவுரையுடன் இன்றைய தினம் (07.05.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இத் தெளிவூட்டல் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சேதன விவசாய கட்டுப்பாட்டு அலகின் பணிப்பாளர் திருமதி. அச்சினி வீரவர்த்தனே, மற்றும் உதவி பணிப்பாளர் திருமதி. வினோயா பெரேரா, விவசாயத் துறை உதவி பணிப்பாளர் டாக்டர். பிரியங்கா திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் ஏற்றுமதி ஊக்குவிப்பு உத்தியோகத்தர் திரு. லசித் ஜெயவர்த்தன, இலங்கை தரநிலை உதவி பணிப்பாளர் திருமதி. கனிஷ்கா டி செல்வா, Ceycert (Pvt) ltd நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் மஞ்சனைகே, டிஜிட்டல் வணிக சுற்றுச்சூழல் மேலாளர் திரு தினிடு வட்டுலந்தா மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடக்கு மாகாண உதவி பணிப்பாளர் திரு.க.கனோஜன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இவ் தெளிவூட்டல் கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,மிக நீண்ட காலமாக இச் சேதன பசளையின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக அதிகளவில் அனைவராலும் உணரப்பட்டும் உரையாடப்பட்டு வருவதாகவும், வடக்கு மாகாணத்தில் 40 பேர் சேதன விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் 12 பேர் ஆவண ரீதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சேதன பசளை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சேதன விவசாய கட்டுப்பாட்டு அலகு அவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஒரு விவசாய உற்பத்தியை வாங்கினால் அது சேதனமா என்பதை உறுதிப்படுத்துவதில் சந்தேகங்கள் இருப்பதாகவும், ஆனால் ஆரோக்கிய ரீதியாக வாழ்வதற்கு சேதன விவசாயம் அவசியம் எனவும், முழுமையாக சேதனப் பசளையை பாவித்து விவசாயத்தில் ஈடுபடலாமா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் இயலுமானவரை சேதனப் பசளையை பயன்படுத்தி கொள்வது அவசியமாகிறது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இத் துறை சார்ந்த அறிவை மேன்மேலும் பெற்றுக்கொள்ள அக்கறையுடன் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், சேதன விவசாயம் தொடர்பான பெறுமதியான கருத்துக்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கருத்தரங்கில் சேதன விவசாயத்தின் முக்கியத்துவம், இலங்கை சேதன தரநிலை தரநிலைப்படுத்தல், சேதனப் பொருட்களை டிஜிட்டல் சந்தைப்படுத்தல், சேதன பசளை விவசாய சான்றிதழ் நடைமுறை, அடுத்த தலைமுறைக்கான சேதன உணவு செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு போக்குகள், சந்தைப்படுத்தல் சாத்தியப்பாடுகள், (NOCU) ஊக்குவிப்பதில் அதன் பங்களிப்பு, இலங்கை ஏற்றுமதியில் சேதன விவசாயத்தின் பங்களிப்பு என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன. இவ் செயலமர்வில் பதனிடுபவர்கள், சேதன மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் , சிறு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7
தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவர் திரு ஆர்.எம். எஸ் பண்டார அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (04.05.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டுவருவதாகவும், அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், குழாய் கிணறுகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்க அதிபரால் தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போது தற்போது யாழ்ப்பாணத்தில் கிணற்று நீரை பரிசோதிப்பது அதிகரித்துள்ளதாகவும், மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் தலைவரால் தெரிவிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் நீர் வளங்கள் சபையின் பொது முகாமையாளர் திரு.மகேஷ் சோமரத்ன, நீர் வளங்கள் சபையின் மாகாண பணிப்பாளர் திரு எம்.எஸ். விமலரத்தின, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3