நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ அவர்கள் இன்றைய தினம் (04.01.2026) காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக வணக்கத்திற்குரிய விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார். மேலும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் தமது பக்க நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.
 
1 2 3
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் 31.12.2025 ந் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக - விகாராதிபதியுடன் அரசாங்க அதிபர் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.அத் தீர்மானத்திற்கமைய, இன்றைய தினம் (02.01.2025) அரசாங்க அதிபர் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும் அக் கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக பொருத்தமான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் அரசாங்க அதிபர் அவர்களிடம் தெரிவித்தார். வணக்கத்துக்குரிய விகாராதிபதி அவர்களுடன் கலந்துரையாடி பின்னர் திரும்பும் வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.
 
1 2 3
நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. சிவதுரை றஜிந்தன் அவர்கள் இன்றைய தினம் (02.01.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் எதிர்வரும் திங்கட்கிழமை (05.01.2026) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.02) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2026 ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலை மேற்கொள்ளல் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் முன்னாயத்த கலந்துரையாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர் திரு டி.பி.எஸ்.கே . திசநாயக்க ,பிரதிப் பணிப்பாளர் திருமதி கவிதா ஜீவகன், உதவி பணிப்பாளர் திருமதி எஸ் தாரணி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரன்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3
22 யாழ் மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் உத்தியோகத்தர்களுக்கானகெளரவிப்பு நிகழ்வும் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.01) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில், அனைவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து, 2025 ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மீள் பார்வை செய்ய வேண்டும் எனவும், அரசாங்க சேவை என்பது கடவுளால் வழங்கப்பட்ட உயரிய சந்தர்ப்பமாகும் எனவும், அந்த வகையில் ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தர்களும் தமக்குரிய சேவைகளை அர்ப்பணிப்புடன் ஆற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், 634000 சனத்தொகை கொண்ட யாழ் மாவட்டத்தின் மக்களுக்கான அரச சேவையினை ஆற்றுவதற்காக மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் அந்த மக்களுக்கான உயரிய கடமை பொறுப்புக்களை ஆற்றுவதற்கான பொறுப்பும் கையளிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலால் தேசிய ரீதியில் 22 மாவட்டங்கள் பேரிடர் மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டதாகவும், அதனுள் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வழங்கிய அர்ப்பணிப்பான சேவையினை இச் சந்தர்ப்பத்தில் தாம் நினைவுபடுத்தி வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால், பொதுமக்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமத்தினை தவிர்க்க, யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகம் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியதற்கு அமைய, மாவட்டச் செயலகத்தில் குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு - அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டதனையும் இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார். மேலும், இவ் மாவட்டச் செயலக கட்டடம் அமைக்கப்பட்டு 60 ஆவது ஆண்டு நிறைவு பெற்றதனை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டடு அனைவராலும் வரவேற்பு பெற்றதனையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், அவ் நினைவு முத்திரையையும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் கையளித்து பெருமை சேர்த்திருந்தோம் என்பதனையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களான கிளீன் ஸ்ரீலங்கா, வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற திட்டங்கள் உள்ளன எனவும், அந்த வகையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 13 பிரதேச செயலகங்களில் மக்களுக்கான நடமாடும் சேவைகள் சிறப்பாக நடைபெற்றதுடன், விசேடமாக எழுவைதீவு அனலைதீவு மற்றும் நயினாதீவில் உள்ள மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டமையையும் இங்கு குறிப்பிட விரும்புவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு திட்டத்தின் வேலைத் திட்டங்களை நிறைவேற்றியதில் தேசிய ரீதியில் பௌதிக, மற்றும் நிதி முன்னேற்றத்தில் 100 வீதத்தினை காண்பித்து முதலாம் இடத்தினை பெற்றதனையும் தாம் குறிப்பிட விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், வளமான நாடு, அழகான வாழ்க்கை என்கின்ற பயணத்தில் எமக்கு அனைவருக்கும் அவ் இலக்கினை அடைய பாரிய பொறுப்பு உள்ளதாகவும், மக்கள் நலனில் கூடிய அக்கறையை செலுத்தி சரியான முறையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்கான சேவையாக மாற்ற வேண்டும் என்பதனை இலக்காக கொண்டு செயற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தேசிய ரீதியாக யாழ்ப்பாணமானது தமிழர்களின் அடையாள மாவட்டமாக நோக்கப்படுவதாகவும், தேசிய ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு எனவும், அந்த வகையில் எமது யாழ்ப்பாணத்தினுடைய முக்கியத்துவத்தினை அறிந்து - இன்றைய சத்திய பிரமானத்தில் குறிப்பிட்டதற்கு அமைவாக வினைத் திறனுடனும், பயனுறுதியுடனும் செயலூக்கத்துடனும், அதி கூடிய அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் பொது மக்களுக்கு சார்பாக சேவையாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தர்களும் தமக்கு கிடைக்கப் பெற்ற இந்த அரச சேவையினை ஒரு வரப்பிரசாதமாக ஏற்று மக்கள் நலன் நோக்கியதாக மாற்ற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் புதுவருட வாழ்த்துரைகளையும், கடந்து ஆண்டு தமது கிளை சார்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்குக்கான பாராட்டுதல்களையும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு எஸ். ரமேஷ்குமார் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் வழங்கினார்கள். இன்றைய நிகழ்வில் 2025 ஆண்டு முழுவதும் தமது கடமை நாட்களில் 08.30 மணிக்கு முன்பாக வருகைதந்த உத்தியோகத்தர்களும், குறைந்தது 03 நாட்களுக்கு மட்டும் 08.30 மணிக்கு பின்னர் வருகைதந்து ஏனைய நாட்களில் தவறாது 08.30 மணிக்கு முன்பாக வருகைதந்த உத்தியோகத்தர்களும் அரசாங்க அதிபரால் கெளரவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டார்கள் என்பதுடன், பதவிநிலை உத்தியோகத்தர்களும் கெளரவிக்எப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1718 19 20 21 22 23 24 2526 27 28