வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. புத்திக்க சிறிவர்த்தன அவர்கள் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (12.01.2026)அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ஜே. ஏ. சந்திரசேன அவர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜீ. பி. ஜெயமஹ, யாழ்ப்பாண பொலீஸ் தலைமைப்பீட அதிகாரி திரு. பாலித செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அரசாங்க அதிபர் அவர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.12) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து, வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்களை சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்களுக்கான கொடுப்பனவு தேவைப்படுபவர்களுக்கான எண்ணிக்கை தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களிடம் கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10
2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.01.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அபிவிருத்தி திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை ஏற்று நிறைவேற்றிய மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அனைத்து தர உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், கடந்த வருடம் நிறைவேற்றிய அபிவிருத்தித் திட்டங்களை அனுபவமாகக் கொண்டு இவ்வாண்டு மேலும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இவ்வாண்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
 
 
1 2 3 4 4 5 6 7 8 9 10 11
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.01.2026) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு இ. நாகராஜன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இலங்கை இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளும் பெரும் திருவிழாவாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், கடந்த வருடம் 9,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்தியாவிருந்து 4364 பக்தர்கள் உள்ளடங்கலாக 7,464 பக்தர்கள் வரை கலந்துகொண்டார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், கச்சத்தீவு மனிதர்கள் இல்லாத தனித்தீவாக இருப்பதனால் சகல ஏற்பாடுகளுடன் நடப்பாண்டு திருவிழா கடந்த ஆண்டு திருவிழா ஒழுங்கமைப்பினைக் காட்டிலும் மேலும் புனிதமாக சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும், கடந்த ஆண்டு ஏதாவது சில குறைபாடுகள் இருப்பின் அதனை இக் கலந்துரையாடலில் தெரிவித்து, அவை குறித்து அதிக கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது அமையவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், திருவிழாவுக்கு சகலரது ஒத்துழைப்பு பிரதானமானதென சுட்டிக்காட்டியத்துடன், இத் திருவிழா சிறப்புற நடைபெற அனைவரும் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இந்திய மற்றும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டுமென அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி - ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. மேற்படி கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பிரதானமாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான வசதிகளை மேற்கொள்ளுதல்.
2.குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4.பக்தர்களுக்கு 28 ஆம் திகதி காலை உணவு இலவசமாக வழங்குவகும் தீர்மானிக்கப்பட்டது.
5.கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில் ஒரு அம்புலன்ஸ் படகும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் 02 அம்புலன்ஸ் வண்டிகள் குறிகட்டுவானிலும் தயார் நிலையில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு படைகளின் அதிகாரி, யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் செயற்றிட்ட மதிப்பீட்டு கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.01.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்ட தொடர்ச்சியாக தேசிய ரீதியாக பெற்று வரும் சாதனைகளை குறிப்பிட்டு உத்தியோகத்தர்களை பாராட்டியதுடன், சமூக பாதுகாப்பு சபையின் திட்ட நடைமுறைப்படுத்தலில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிற்கும் வழங்கப்பட்ட இலக்குகளை எந்தளவில் பிரதேச செயலகங்கள் அடைந்திருந்தமை தொடர்பாக தனித்தனியான கவனம் செலுத்தினார். மேலும், அடைவு மட்டத்தில் திருப்தியற்ற நிலையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இவ் வருடத்திற்கான இலக்குகளை திருப்தியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்கள் வழங்கினார். சிறப்பான அடிப்படையில் அடைவு மட்டங்களை அடைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க அதிபரினால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் 13 வது தடவையாக யாழ்ப்பாணம் மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலிடம் (பணச்சேகரிப்பு அடிப்படையில்) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட மாகாண சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் பங்குபற்றினார்கள்.
 
1 2 3 4 6 7 8 9 10 11