1ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளரின் 08.12.2025 ஆம் திகதிய அறிக்கையிடலின் பிரகாரம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டம் 100% முன்னேற்றத்தை காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது என இன்றைய தினம் (24.12.2025) நடைபெற்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். மேலும், அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றியமைக்கு எம்முடன் பூரணமாக ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும், பிரதேச மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பிரதேச செயலாளர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, பிரதேச செயலாளர்களுக்கு உறுதுணையாக செயற்பட்ட பிரதி ,உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் விடய உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தும் யாழ் மாவட்டம் முன்னிலையில் திகழ்வதற்கு பூரண ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் வழங்கப்பட்டு வரும் வழிகாட்டுதல்களுக்கும் தமது நன்றியினைத் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் நேர்த்தியான முறையில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவிப்பதாகவும், அரசாங்க அதிபர் அவர்கள் 03 தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர் எனவும், அவரின் சிறப்பான நிர்வாக செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தில் எமது மாவட்டம் முன்னிலை பெற்றதையிட்டு - ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் மகிழ்ச்சி யடைவதாகவும் தெரிவித்தார். மேலும் எமது அரசாங்கம் அரசாங்க உத்தியோகத்தர்கள் மீதான எதுவித பழிவாங்கல்களும் மேற்கொள்வதில்லை என்ற கொள்கைக்கு அமைவாக செயற்பட்டுவருவதாகவும், அண்மையில் "டித்வா" புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து எமது நாடு பழைய நிலையினைக்காட்டிலும், மேலும் முன்னேற்ற அடைய வேண்டும் என்பதே ஜனாதிபதி அவர்களின் இலக்கு என்றும், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வரும் ஜனாதிபதி அவர்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு நல்கி எமது நாட்டை முன்னேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் முதலாம் இடம் பெற்றமைக்காக அரசாங்க அதிபர் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரின் மெச்சுரை வழங்கப்பட்டது. மேலும் இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாவட்ட அபிவிருத்தித்திட்டம், கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார கிராமிய அபிவிருத்தித்திட்டம், வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தித்திட்டம் ஆகிய திட்டங்களின் முடிவுறுத்திய,முடிவுறத்தாத திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
1அண்மையில் ஏற்பட்ட “டித்வா”வெள்ள அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (24.12.2025)காலை 10.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அனர்த்த நிலைமைகளில் கடமையாற்றிய சகல திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியான மக்களுக்கு சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் 25000.00 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றளவான பணிகள் செவ்வனே செய்யப்படுகிறது எனவும், எனினும் ஒரு சில உத்தியோகத்தர்களின் கவனயீனங்களால் சில சம்பவங்களும் இடம்பெற்றதனையும் குறிப்பிட்டார். மேலும், அனர்த்தத்திற்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கூட்டம் அதிமேதகு சனாதிபதி அவர்களின் தலைமையில் சனாதிபதி செயலகத்தில்கடந்த சனிக்கிழமை (20.12.2025) காலை 09.30 தொடக்கம் மாலை 04.30 மணி வரை நடைபெற்றது எனவும், அக் கூட்டத்தில் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஒவ்வொரு துறைசார் விடயங்களாகவும், மாவட்ட ரீதியான முழுமையான விபரங்களையும் அதிமேதகு சனாதிபதி அவர்கள் கேட்டறிந்து கொண்டார் எனவும், இக் கூட்டத்தில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் ஒரு வார காலத்திற்குள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உட்கட்டுமானங்களின் சேத விபரங்கள் உள்ளிட்ட முழுமையாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதனை அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இன்றைய கூட்டத்தில் அனர்த்தத்தினால் தங்கள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட வீதி, இறங்குதுறை, விவசாயம், கடற்றொழி்ல் உள்ளடங்கிலான உட்கட்டுமான பாதிப்புக்களை ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். மேலும், சரியான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் பேணுவதன் அவசியத்தினை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு உரிய நேரத்தில் அறிக்கையிடலின் அவசியத்தினையும் வலியுறுத்தி, அனைவரையும் கூட்டுப் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட உட்கட்டுமான சேத விபரங்களை கேட்டறிந்ததுடன் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்களும் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமானகெளரவ எஸ். கபிலன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11
1சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (23.12.2025) மு.ப 09.00 மணிக்கு அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இவ்வருடத்திற்குரிய இறுதி நிகழ்வாக இவ் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய பல பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது எனவும், குறிப்பாக தீவுப்பகுதி நோக்கிய பயணம் வெற்றியளிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாகவும் தீவுப் பகுதியில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கியதன் அடிப்படையில் இவ் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தீவுப்பகுதி மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் எனவும், இலங்கையிலேயே கடல்கடந்த பிரதேசங்களையும் கொண்ட மாவட்டமாக எமது மாவட்டம் காணப்படுகிறது எனவும், குறிப்பாக நெடுந்தீவு, எழுவைதீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு மக்கள் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைப்பாடுகளை உடையவர்களாக காணப்படுகின்றனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இப் பிரதேசத்தை சேர்ந்த பலர் புலம்பெயர்ந்த பிரதேசத்தில் நல்ல நிலைமைகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் எனவும், இப் பிரதேசத்தை சேர்ந்த பலர் தங்களின் விடாமுயற்சி, அயராத உழைப்பின் பயனாக பொருளாதார ரீதியாக பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர் எனவும், இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பொருத்தமான தளபாடம் மின்மை, பொருத்தமான ஆசிரிய ஆளணி வளமின்மை என பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும், ஒரு மனிதனை முழு மனிதனாக ஆக்கும் கல்விச்சாலைகள் முன்னேற்றப்பபட வேண்டியவை எனவும், ஆதலால் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் இதற்கான தமது அர்ப்பணிப்பை மேற்கொள்வார்களாக இருந்தால் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், நெடுஞ்சாலை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் தீவுப்பகுதி வீதி புனரமைப்பிற்காக ரூபா 250 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளார் எனவும், மிக கஷ்டத்தின் மத்தியில் கடல் கடந்த தீவுக்கான திட்டங்களை நிறைவேற்ற கௌரவ தவிசாளர், பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைவரதும் ஒத்துழைப்புடன் இப்பிரதேசத்தில் ரூபா 40 மில்லியன் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்திற்காக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், எமது மாவட்டத்தில் கடமையாற்ற கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம் எமக்கு கடவுளால் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் எனவும், இந்த வருடம் இன்றைய நாளில் அரசாங்க அதிபராக கடமையாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது எனவும், அதேபோல் சகல உத்தியோகத்தர்களுக்கும்கிடைத்த இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்கே கஷ்டப்பட்ட, தேவைப்பாடுடைய மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அனலைதீவுப் பிரதேசம் கல்வி, பொருளாதார , சமூக பண்பாட்டு விழுமியங்களிலே ஒரு சிறந்த பிரதேசமாக காணப்படுகிறது எனவும், அந்த வகையில் இங்குள்ள பிள்ளைகள் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயமாக மிளிர வேண்டும் எனவும், எனவே அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மூலமாக ஊக்குவிப்பை வழங்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் எனவும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் எனவும், எமக்கு கிடைத்த உதவிப் பொருட்களை தீவுப் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைத்திருந்ததாகவும், வறுமையானவர்களை ஊக்கப்படுத்தி ஆரோக்கியமான சமுதாயமாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது எனவும், இந் நடமாடும் சேவை மூலம் அதனை ஓரளவு நிவர்த்தி செய்ய முயற்சித்திருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இங்கு வந்து இங்குள்ளவர்களுக்கு சேவையாற்றி செல்வதன் மூலம் இங்குள்ள அனைவரும் தமது தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியுமென தெரிவித்ததுடன், அனலைதீவுப் பிரதேச வளர்ச்சியில் தொடர்ந்து பங்கெடுப்போம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பானசேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், துணி பை, முதியவர்களுக்கான அத்தியாவசியப் பொதிகள், மரக்கன்றுகள் என்பன வழங்கப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் மரக்கன்றும் நாட்டப்பட்டது. இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்றுறை பிரதேச சபை கெளரவ தவிசாளர், ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதேச இணைப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், கிராம அலுவலர்கள், மற்றும் பிரதேச செயலகத்தினுடைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
1 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
10அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியவர்களின் மூலம் மனிதத்துவம் நிலைத்திருப்பதை உணர்வதாக ஒளிவிழா நிகழ்வில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் பிரதி புள்ளிவிபர பணிப்பாளருமான திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (23.12.2025) பி. ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகி எழிமையாக நடைபெற்றது . நத்தார் தீப ஒளியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் போசகருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, ஆசியுரையினை அகவொளி உளவளத்துணை மற்றும் உளவியலுக்கான நிலையத்தின் பணிப்பாளர் அருட்பணி எம். அன்ரன் ஜொராட் அவர்களும், கிறிஸ்துமஸ் செய்தியை தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீன பேராயர் அருட்பணி கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களும் வழங்கினார்கள்.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட அனர்த்த சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எளிமையான முறையில் ஒளிவிழாவினை கொண்டாடுவது என்ற நலன்புரிக் கழகத்தின் தீர்மானமானத்திற்கமைய இன்றைய ஒளிவிழா நடைபெறுவதாகவும், அனர்த்தங்கள் எமது வாழ்வோடு பின்னிப்பி ணைந்துள்ளது எனவும், அதிலிருந்து நாம் மீண்டெழுந்து வாழப் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில் ஒவ்வொரு மனிதனின் உணர்வும் இருந்ததாகவும், இதன் மூலம் மனிதத்துவம் இன்னும் வாழ்வதாகவும் இதனையே பாலன் பிறப்பு உணர்த்துவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், எமது உத்தியோகத்தர்கள் நேரகாலம் பார்க்காமல், விடுமுறை நாட்கள் பார்க்காமல் உலர் உணவுப் பொருட்களை பாரவூர்திகளிலிருந்து இறக்கவும், அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதிலும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியதனை இச் சந்தர்ப்பத்தில் தெரிவிப்பது பொருத்தமாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும், 2025 ஆம் ஆண்டு மக்கள் பணி செய்வதற்கு இறைவன் நல்ல சந்தர்ப்பம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஏழைகளின் கண்ணீரை துடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், இன்றைய தினம் கடல் கடந்த அனலைதீவு, கடந்த வாரம் எழுவைதீவு மற்றும் நயினாதீவில் அங்குள்ள மக்களைத் தேடிச் சென்று நடமாடும் சேவை மூலம் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததில் மகிழ்வடைவதாகவும், எமது பணி மக்கள் நலன் சாா்ந்த விடயங்களையும் அவர்கள் தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதாகவும் இருக்கும் பட்சத்தில் அதன் பிரதிபலிப்பு அனைவரினதும் வாழ்விலும் ஒளிமயமாகவிருக்கும் என அரசாங்க அதிபர் தெரிவித்து, அனைவருக்கும் தமது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களின் வரவேற்பு நடனம், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்கள், பாடல்கள், நாடகம், நாதஸ்வர கச்சேரி மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், நன்றியுரை நலன்புரிக் கழகத்தின் செயலாளரும், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளருமான திருமதி கி. தயாபரி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக நத்தாா் தாத்தா வருகையுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கிறிஸ்மஸ் நத்தார் இசையுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவு பெற்றது. மேலும் குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 4 5 6 7 8 8 9 10 13 14 15 16 17 18 19 20 2122 24 25
12"எண்ணம் நிறைந்த ஓவியம் - சித்துவிலி சித்தம்" தேசிய ரீதியான போட்டியில் மாவட்ட மட்டத்தில் சித்திரம், பதாதை மற்றும் காா்ட்டூன் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.12.2025) மு. ப. 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் 2025 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான கௌரவிப்பு நடைபெறுவது மகிழ்சிக்குரிய விடயம் எனவும், மாணவர்களின் கலை ஆர்வம் குறைவடைந்துவருவதாகவும், இவ்வாறான ஓவியப் போட்டிகள் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது எனவும், குறிப்பிட்டார். மேலும், இன்றைய சூழலின் போக்கு மாற்றமடைந்து வருவதாகவும், ஆதலால், சிறுவர்களை நாளை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் உள்ளது எனவும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கலைத்துறைகளில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், இதன் ஊடாக மாணவர்களின் மனம் இயல்பாகவே ஆற்றுப்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் ஒளிமயமான வாழ்க்கையினை நோக்கிச் செல்ல கலைகள் முதன்மையாக விளங்குவதாகவும் தெரிவித்ததுடன், இத்தகைய போட்டிகள் நல்ல சிந்தனைகளையும், நல்ல உணர்வுகளையும் ஏற்படுத்தும் செயற்பாடாக அமையும் எனவும் தெரிவித்தாா்.
மேலும், தற்போதைய சமூகம் எதனைச் செய்தாலும் எதிர்க்கும் மனோபாவம் ஓங்கியிருப்பதாகவும், முட்டுக்கட்டை போடுவதும் கவலையளிப்பதாகவும், பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்து பிள்ளைகளின் எதிர்காலம் காலம் ஒளிமயமாக இருக்க தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு சிறுவர்களுக்கு உரித்தான உரிமைகள், பாதுகாப்பு மற்றும் துர்நடத்தைகளை தடுக்கும் முறைகள் பற்றி மக்களுக்கு தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் கல்வியறிவூட்டல் ஆகிய பிரிவுகளை அமுல்படுத்துவதற்காக சித்துவலி சித்தம் போட்டியில் சித்திரம், பதாதை மற்றும் கார்ட்டூன் வருடாந்தம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்படுகின்றது, அந்த வகையில் 05 ஆவது தடவை யாக இவ் போட்டி நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை சித்திரம், பதாதை மற்றும் காா்ட்டூன் போட்டிகளில் பங்கு பற்றி மாவட்ட மட்ட சித்திரப் போட்டியில் 24 மாணவர்களும், பதாதை போட்டியில் 11 மாணவர்களும் மற்றும் கார்ட்டூன் போட்டியில் 01 மாணவரும் வெற்றி பெற்றிருந்தார்கள் என்பதுடன், போட்டியில் வெற்றி பெற்ற பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பதக்கம் அணிவித்து, சான்றிதழ்களும் வழங்கப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களினால் கெளரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் மாகாண கல்வித் திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.ராஜன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட, பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள், மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டார்கள்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13