சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் கோப்பாய் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது கோப்பாய் பிரதேச செயலாளர் திரு. ஈ. தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (11.12.2025) மு.ப 8.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகியது. இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய எண்ணக்கருவுக்கு அமைவாக, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான சேவையினை ஒரே இடத்திலே வழங்குவதனை நோக்காக கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்குரிய சரியான சேவைகளை அல்லது சரியான ஆற்றுப்படுத்தலை வழங்கக்கூடிய ஒரு உயரிய சந்தர்ப்பமாக இவ் நடமாடும் சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான முழுமையான விவரங்களை பெற்று, உறுதிப்படுத்தி, சமர்ப்பிக்கின்ற பொறுப்பு கிராம மட்ட அலுவலர்களைச் சார்ந்திருக்கின்றது எனவும், கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பொறுப்பு அல்லது வகிபாகம் என்பது மிக பெரியது எனவும் குறிப்பாக, கிராம அலுவலர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்ந்தனவாகவே வெள்ள நிவாரணம் மற்றும் கொடுப்பனவு செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனவும் தெரிவித்தார்.மேலும், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மக்களை தேடிச் சென்று சந்தித்து, அவர்களுக்கும் சேவையாற்ற வேண்டிய கடமை உடையவர்களாக இருக்கிறார்கள் எனவும், பல உத்தியோகத்தர்கள் இக் கடமைகளைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர் எனவும், ஒரு சிலர் அவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்காதபோது, அந்த செயற்பாடுகள் ஒட்டுமொத்த பிரதேசத்தையோ அல்லது அல்லது மாவட்டத்தையோ பிரதிபலிப்பதாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தார். இப் பிரதேசத்தில் பல்வேறுபட்ட தாழ் நிலப்பரப்புகள் உள்ளன எனவும், பிரதேசத்தினுடைய பல பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கு உட்படக்கூடிய அல்லது வெள்ள ஆபத்துக்குரிய பிரதேசங்களாக இருக்கின்றன என்பதால், அவ் மக்களுக்குரிய கொடுப்பனவுகளை உரிய முறையிலே பெற்றுக்கொடுப்பதற்கு - கிராம மட்ட உத்தியோகத்தர்களின் உறுதிப்படுத்தல்கள் சரியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட தகுதியான ஒருவருக்கு அரசாங்க கொடுப்பனவு கிடைக்காமல் இருப்பதும், அதே வேளையிலே, தகுதியற்ற ஒருவருக்கு கிடைப்பதும் சமூகத்திலே அல்லது அந்த பிரதேசத்திலே பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும், அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்தின் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் கிடைப்பதற்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் அற்ற வகையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், நிவாரண மற்றும் கொடுப்பனவு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இத்தகைய நடமாடும் சேவைகள் மூலம் தேசிய ரீதியிலே கொழும்புக்கு சென்று பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை இங்கே பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஏற்பாடு இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது எனவும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவைக்குரிய தேசிய அடையாள அட்டைகள் தற்போது அந்த பிரதேச மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன எனவும், இந்த பிரதேசத்தினுடைய, இந்த மாவட்டத்தினுடைய மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் தெரிவித்ததுடன், இன்றைய இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பிரதேச செயலாளருக்கும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் தம்முடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பானசேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ)இ சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்,காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை ( Cataract ) இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், இந் நிகழ்வில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உதவி, காணி பத்திரம், நீண்ட கால படுக்கையில் உள்ளவர்களுக்கான மெத்தை, கட்டில் மற்றும் நுளம்பு வலை என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த தம்பதிகளுக்கு திருமண பதிவும் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருகே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதேச சபையின் செயலாளர் வடக்கு மாகாண சபையினுடைய ஏனைய பதவி நிலை உத்தியோகதர்கள், கிராம அலுவலர்கள், மற்றும் பிரதேச செயலகத்தினுடைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் B. லியனஹமகே அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.12.2025) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, கடல்வழியால் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணி விடுவிப்பு, வட தாரகை கப்பல் திருத்தம், எழுதாரகை கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், கடற்கரை தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு பொறிமுறை, கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் :1.இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும், கடற்படை தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், அத்துமீறலை கட்டுப்படுத்த பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் வடபிராந்திய கடற்படைத் தளபதி தெரிவித்ததுடன், கடல்வழியாக கடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
2.கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
3.குறிகட்டுவான் இறங்கு துறையின் மூலம் இலகுவான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற மாவட்டச் செயலகம், கடற்படை, பிரதேச செயலகம் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன ஒன்றிணைந்து செயற்படுவது எனவும் பொருத்தமாகவிருக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
4.நயினாதீவு உள்ளிட்ட தீவுப்பகுதிக்கான செல்லும் படகுகளின் தரச்சான்றிதழ் இல்லை என அரசாங்க அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள பெரும் நிதி செலவு படகுகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாத நிலையிருப்பதால் பாதிகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கடிதம் எழுதி ஒழுங்கான முறைக்கு கொண்டுவர அமைச்சின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
5.கடல் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்ட போது இன்றைய தினம் நெடுந்தீவில் துரதிஷ்டமாக ஏற்பட்ட இறப்பு தொடர்பாக கருத்து பரிமாறப்பட்டு அகவலை தெரிவிக்கப்பட்டது.
6.மயிலிட்டி இறங்குதுறையிலிருக்கும் அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
7.எழுதாரகை படகை திருத்தி கொடுக்கப்படும் பட்சத்தில் அதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேடுக்க கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்ட போது அதனைத் திருத்த பாரிய நிதி செலவு ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக் கொடுப்பனவு மற்றும் ரூபா 25000.00 கொடுப்பனவு தொடர்பான முன்னேற்ற நிலமைகள் தொடர்பாக இன்றைய தினம் (09.12.2025) பி.ப 3.00 மணிக்கு பிரதேச செயலாளர்களுடன் நிகழ் நிலை ஊடாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் விடயங்களும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
1.யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டும்.2.வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் வரவு செலவு திட்ட சுற்றறிக்கை 08/2025 என்பவற்றின் பிரகாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கு போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரகாரம் கொடுப்பனவினை வழங்கல். 4.குறித்த கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைக்கு அமைய, கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் உரிய படிவத்தினை நிரப்பிய பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு கிராம மட்ட அலுவலர்களோ பிரதேச செயலாளர்கள்களோ காலநீடிப்பனை மேற்கொள்ள வேண்டியதில்லை. 5.வீட்டு உரிமை இல்லாதவர்களுக்கும் தற்போது வசிக்கும் பிரிவுக்குரிய குடும்ப பதிவு அட்டை இல்லாதவர்களுக்கும் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பொருத்தமான உறுதிப்படுத்தலுடன் கொடுப்பனவு வழங்கலாம். 6.வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபா 25000.00 கொடுப்பனவு மற்றும் உலர் உணவுகள் வழங்குதலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் முதலாம் கட்ட பெயர்ப் பட்டியலை நாளை முதல் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்தல். 7.தகுதியானவர்களின் பட்டியல்களை காட்சிப்படுத்திய பின்னர் காலதாமதம் இன்றி உரிய வங்கி கணக்கிற்கு விரைவாக வைப்பிலிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
என அரசாங்க அதிபர் அறிவுறுத்தியதுடன், மேலும், ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இக் கலந்துரையாடலில் நேரடியாக மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் திருமதி ஆ. நளாயினி மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய ரீதியாக வருடம் தோறும் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு மாவட்டச் செயலகத்தின்ஒழுங்கமைப்பில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுடன் தொடர்புடைய உடல் அசைவுகள் மற்றும் யோகா தொடர்பான பயிற்சி நெறி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (10.12.2025) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் தமதுரையில், மக்களுக்கான உணவு விநியோக செயற்பாடுகளில் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தர உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இப் பயிற்சி தொடர்பான போதிய அறிவு, விருப்பம் காணப்பட்டாலும் அதனை செய்ய முடியாத சமூகப் பழக்க வழக்கத்திற்கு நாம் ஆட்கொண்டுள்ளதாகவும், மேலைத்தேய நாடுகளில் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், நாம் அவ்வாறு செய்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், முன்பு உணவே மருந்தாகவும் தற்போது மருந்தே உணவாகவும் காணப்படுவதாகவும், உணவு கட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாகவும், உடற்பருமனை குறைத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
வாழ்வாதாரத்துக்கு முக்கியமான உடல் அசைவுகள் மற்றும் யோகா பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் எரோபிக் விளையாட்டுடன் கூடிய உடல் அசைவுகள் மற்றும் விளையாட்டு உடற்பயிற்சி ஈடுபடும்போது உட்கொள்ள வேண்டிய உணவுகள் தொடர்பாகவும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உடுப்பிட்டி மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு. கனகரத்தினம் கனகராஜா யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் பேராசிரியர் சி. சபாஆனந்த் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட விளையாட்டு துறை இணைப்பாளர், விளையாட்டு துறை சார் உத்தியோகத்தர்களும் மற்றும் மாவட்ட செயல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களைச் சார்ந்த பிரதேச மகளிர் விவாகார குழுக்களின் சம்மேளத்தின் அங்கத்தவர்களுக்கு அவர்களது வாழ்வாதார செயற்பாட்டை ஊக்குவிக்குமுகமாக சுழற்சி முறையின் வட்டியில்லா கடன் வழங்குவதற்காக ஒரு பிரதேச செயலக பிரிவிற்கு தலா 200000.00 வீதம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் இன்றைய தினம் (09.12.2025) காலை 10.00 மணிக்கு காசோலை வழங்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், சுழற்சி முறையிலான கடன் திட்டத்தில் ஒரு பயனாளிக்கான கடன் தொகையினை ரூபா 20000.00 இருந்து ரூபா 50000.00 வரை வழங்க பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், இச் செயற்பாட்டை முன்னெடுக்கும் சம்மேளனத்திற்கும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி .கி .தயாபரி, யாழ்ப்பாண பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .பி. கமலலோஜினிதேவி, சண்டிலிப்பாய் உளவளத்துணை உதவியாளர் திருமதி .ச. மேரி பிறீமா, யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவாகார குழுக்களின் சம்மேளன தலைவர் திருமதி நி. மதனரூபி, சம்மேளனத்தின் செயலாளர் திருமதி சி. விஷாலினி, பொருளாளர் திருமதி அ. சர்மிளா மற்றும் சம்மேளன அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.






