இலங்கை விமானப் படையினரால் அத்தியாவசியப் பொருட்கள் அரசாங்க அதிபர் அவர்களிடம் கையளிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான இற்றைவரையான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.12.2025) மு.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வெள்ள அனர்த்த நிலைமைகள் காணப்பட்டாலும் நிதி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ச்சியாகப் பேண வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும், பேரிடர் மாவட்டங்களாக தெரிவு செய்யப்பட்ட 22 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த வருட இறுதியில் நிதி நடவடிக்கைகளை வினைத்திறனுடன் உரிய காலப்பகுதிக்குள் முடிவுறுத்த ஒருங்கிணைந்து செயற்பட்ட அனைவரும் நன்றிகளை தெரிவித்ததுடன், தொடர்ந்தும் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இக் கலந்துரையாடலில் திணைக்கள ரீதியாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிதி முன்னேற்றம் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் , மேலதிக அரசாங்க அதிபர் திரு .க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு .பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திர நாதன், பிரதம பொறியியலாளர் திரு. க.திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஒரு தொகுதி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஒரு தொகுதி அத்தியாவசிப் பொருட்கள் இன்றைய தினம் (02.12.2025) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் மாவட்ட செயகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (03.12.2025)காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அனர்த்த நிலைமைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உதவிகள் வழங்கிவருவதனையும், வெள்ள தணிப்பு நடவடிக்கைகளிலும் விரைவாக செயற்பட்டதனையும் குறிப்பிட்டார். மேலும், சரியான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் பேணுவதன் அவசியத்தினை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு உரிய நேரத்தில் அறிக்கையிடல் வேண்டும் எனவும், இதன் மூலம் வினைத்திறனாக செயற்பட முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், அனைவரையும் கூட்டுப் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், அரசாங்க அதிபரால் பின்வரும் விடயங்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்தார்.01. எமது மாவட்டத்தின் மொத்த குடும்ப எண்ணிக்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 7.9% வீதமானவர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
02.அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுத்தம் செய்வதற்கும் துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் தலா 25,000.00 வீதம் உடனடியாக வழங்குவதற்கு அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தியதற்கு அமைவாக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்து, பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்கப்படும் எனவும் சுற்றுநிருபத்திற்கு அமைய கொடுப்பனவுகளை விரைவுபடுத்துமாறு பிரதேச செயலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
03.பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தேவைப்பாடுகளை அரசாங்க அதிபர் கேட்டறிந்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தாமாகவிரும்பி மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்கப்படும் பொருட்களை தேவைக்கு ஏற்ப பங்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செல்வி வி.தர்சினி, நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் திருமதி ஆ. நளாயினி மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

அனர்த்த நிலமைகள் தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் (01.12.2025) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள இந் நேரத்தில் கட்சி, இன மத பேதமின்றி நாட்டைக் மீள கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இக்கட்டான நேரத்தில் சனாதிபதி அவர்களின் வழிகாட்டுதல்களில் அரசாங்கம் துரிதமாக செயற்பட்டுவருவதாகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கிவருவதற்கு தமது நன்றியினைத் தெரிவித்து மேன்மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவிரும்பினால் ஒரு பகுதிக்கு என்றில்லாமல் அனைத்து பிரிவுகளிலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் கிடைக்கும் வண்ணம் பதிவுகளுடன் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், பிரதேச செயலாளர்கள் தத்தமது பிரதேச செயலக ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வீதிகள், குளங்கள் மற்றும் பாலங்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டதுடன், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மீள கட்டியெழுப்பி பொருளாதார நடவடிக்கைகளை முன்கொண்டு சொல்லக்கூடிய நம்பிக்கையை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.மேலும், இவ் அனர்த்த நிலைமைகளில் சிறப்பான கடமை ஆற்றிவரும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அலுவலர்கள், அனைத்து உத்தியோகத்தர்கள் அனைவரையும் கெளரவ அமைச்சர் பாராட்டினார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், கொழும்பு செல்ல வேண்டிய நிலையிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் குறித்த கலந்துரையாடலில் பங்குகொண்டமைக்காக நன்றிகளை தெரிவித்ததுடன்,யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களை சேர்ந்த 49,191 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், மேலும், 1,710 குடும்பங்களைச் சேர்ந்த 5443 அங்கத்தவர்கள் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 10, 327 குடும்பங்களை சேர்ந்த 31,996 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், 2 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 272 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, இதுவரை வழங்கப்பட்ட உதவிகளையும், எடுத்து வரும் நடவடிக்கைகளையும் விபரித்தார். அரசசாற்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புக்கள் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவிரும்பினால், உரிய பதிவுகளின் அடிப்படையில் அதனை பிரதேச செயலக ரீதியாக தேவைக்கேற்ற வகையில் வழங்க முடியும் எனவும், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக ஒருங்கிணைப்புக்கு செயல்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார். குறுகிய கால அழைப்பின்பேரில் குறித்த கலந்துரையாடலில் நேரடியாக மற்றும் இணையவழி ஊடாக கலந்து கொண்டவர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்ததார் . மேலும், பிரதேச செயலக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் மாவட்டச் செயலகத்தால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் சமைத்த உணவுக்கான முதலாம் கட்ட நிதி விடுக்கப்படும் எனவும், மேலும் அனர்த்தத்திற்கு முன்னரும், பின்னரும் சரியான சுகாதார அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், அதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர்கள் ஊடாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களும் நிலைமைக்கேற்ற வகையில் சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார். மேலும், இவ் அனர்த்த நிலைமைகளில் ஒன்றிணைந்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன், அடுத்துவரும் நாட்களில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ச்சியாக அனைவரும் ஒன்றினைந்த வகையில் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கப் பெற்ற மற்றும் கிடைக்க இருக்கின்ற உதவிகளை மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிட வேண்டுமென தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்காக குழந்தைகளுக்கான பிஸ்கட் வகைகள், பால்மா, துவாய், படுக்கை விரிப்புகள், பாய் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார நப்பின்கள் அதிகம் தேவைப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரசசார்பற்ற நிறுவன பிரதிநிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் குறித்த பொருட்களை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக கலந்துகொண்ட சுகாதார பணிப்பாளர் திரு. ஆ.கேதீஸ்வரன் அவர்கள் அனர்த்த நிலைமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் காணப்படின் உடனடியாக அரசாங்க வைத்திய சாலைகளை நாடுமாறும், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் வெள்ள நீரில் அதிகம் நடமாடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தல் வழங்கியவுடன், டெங்கு காய்ச்சல் தற்போது அதிகரித்து வருவதாகவும் அதற்காக புகையூட்டல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்ததார். இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக சகல பிரதேச செயலாளர்கள் பங்குபற்றியதுடன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வை. தர்சினி, அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் திரு ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் திருமதி ஆ. நளாயினி, அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புக்களுடனான பிரதிநிதிகள், ஆகியோர் பங்குபற்றினார்கள்.








