தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் திரு. டயா லங்காபுர அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. கே. டி. எஸ். ருவன்சந்திரா, ஆணையாளர்களான சட்டத்தரணி திருமதி கிசாலி பின்ரோ ஜெயவர்த்தன, சட்டத்தரணி திரு.ஜெகத் லியன ஆராட்சி, திரு. மொகமட் நஹியா ஆகியோர் கலந்து கொண்டனர். இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள், செயலர்வுக்கு வருகைதந்த ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் பொது மக்களால் கோரப்படும் தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடப்பாடுகள்இருப்பதாகவும், பொதுமக்களுக்கு தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அதிகமுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய செயலமர்வானது தகவல் உத்தியோகத்தர்களுக்கு மேலும் வலுப்படுத்தும் செயற்பாடாக அமையவுள்ளதாகவும் எனத் தெரிவித்தார். இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் அவர்கள், இன்றைய செயலமர்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தகவல் உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்களால் கோரப்படும் தகவல்களை வழங்குவது கடப்பாடாகும் எனவும், தகவல் வழங்கப்படாத நிலையில் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு முன்வைக்கப்படுவதாகவும், தினமும் 30 தொடக்கம் 35 வரையான முறைப்பாடுகள் பரிசீலிக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற தூர இடங்கள் உள்ள முறைப்பாட்டாளர்களின் விண்ணப்பங்கள் நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் அவர்களுடன் மேலதிக பரிசீலனைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், பொது மக்களின் முறைப்பாட்டில் அனேகமானவை தனிப்பட்ட விடயங்களே முன்வைக்கப்படுவதாகவும், பொதுவான விடயங்கள் குறைவாகவே உள்ளன எனவும், தகவல் உத்தியோகத்தர்கள் உரிய தகவல்களை வழங்கினால் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வருவது குறைவாக இருக்கும் எனத் தெரிவித்து, இன்றைய செயலமர்வில் வழங்கும் மேலதிக அறிவுறுத்தல்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். இச் செயலமர்வில் தகவல் உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சபையின் திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தகவல் விடயப் பரப்பு உத்தியோகத்தர்களான மாவட்டச் செயலக, பிரதேச செயலக, வடமாகாண பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இவ்வாண்டுக்கான காலாண்டு கூட்டமானது இது என்றும், மாவட்ட மாதாந்த , காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்தவ கூட்டமானது சீரான முறையில் நடைபெறுவதாகவும், கவனக்குறை காரணமாகவே சில தவறுகள் இடம் பெறுவதாகவும், நிதி நிர்வாக நடைமுறைகளை சரியான முறையில் கொண்டு செல்வதும் அதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதுமே இக்கூட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். மேலும், தவறுகள் ஏற்பட்டால் அதற்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு திணைக்களத் தலைவரை சார்ந்தது எனவும், பிரதேச செயலக உள்ளக கணக்காய்வுச் செயற்பாடுகளை சரியான பொறிமுறையூடாக பின்பற்றுவதன் மூலம் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கு பல மில்லியன் ரூபா ஒதுக்கீடுகள் கிடைக்கப்பட்டுவருவதாகவும், அண்மையில் கூட ரூபா 170.00 மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட அபிவிருத்திக்கு விரைவாக செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. பிரபாகரன், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி என். பொன்ராணி ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஸ்குமார், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கான வட மாகாண மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இலங்கை மனேஜ்மன்ட் க்ளப் (The Management Club of Sri Lanka) தலைவர் திரு. ஐ. யூ. ராஜபசஷ மற்றும் தேசிய தொழிற் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) தலைவர் திரு. லக்ஷ்மன் அபயசேகர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் (17.11.2025)காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் உள்ளிட்ட திணைக்களங்களின் ஆதரவுடன் இலங்கை மனேஜ்மன்ட் க்ளப் - (The Management Club of Sri Lanka) நடத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடாக இது அமைந்துள்ளதாகவும், இக் கலந்துரையாடலுக்கு வருகை தந்துள்ள இலங்கை மனேஜ்மன்ட் க்ளப் (The Management Club of Sri Lanka) தலைவர் திரு. ஐ. யூ. ராஜபசஷ மற்றும் தேசிய தொழிற் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) தலைவர் திரு. லக்ஷ்மன் அபயசேகர உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், வடக்கு மாகாண 05 மாவட்டங்களின் உள்ளடக்கி உள்நாட்டு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்த்து, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக இது அமையவுள்ளதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாத்துறை, பனைவளத் துறை போன்றவை தொடர்பாகவுள்ள வாய்ப்புக்களை அரசாங்க அதிபர் வருகை தந்தவர்களுடன் விரிவாக ஆராய்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, இலங்கை மனேஜ்மன்ட் க்ளபின் தலைவர் திரு. டிபால் அபயசேகரா, உதவித் தலைவர் திருமதி சாந்தி பகீரதன், மாவட்ட இணைப்பாளர் திரு. எஸ். அனுராகவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது வேலணை பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கைலாசபிள்ளை சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது. இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், வாகன புகைப் பரிசோதனை, காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், தென்னங்கன்றுகள், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ் நடமாடும் சேவையில் வேலணை உதவி பிரதேச செயலாளர் திரு. கணேசமூர்த்தி பாா்த்தீபன் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விவசாய தொகைமதிப்பில் ஈடுபடவுள்ள பலகை கணிப்பொறியினை கையாளவுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான (Tablet Technical Officers) ஒரு நாள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.11.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இவ் பயிற்சி நெறியினை ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், குடிசன தொகைமதிப்பு செயற்பட்டில் குறிப்பிடப்பட்ட காலத்தில் தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டமும் புள்ளிவிபர தரவுகளை இற்றைப்படுத்தியதில் முதன்மை வகித்தமைக்காக மகிழ்ச்சி அடைந்ததாகவும், அந்த வகையில் இப் பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மாவட்ட புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், புள்ளிவிபர மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தார். மேலும், தொகைமதிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத தரவுகள் என வகைப்படுத்தி இவ் வருடத்தை விவசாயம் சார்ந்த தொகைமதிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அந்தவகையில் டிசெம்பர் மாதம் தொடக்கம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரையும் விவசாயம் சார்ந்த புள்ளிவிபரத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும், சரியான தீர்மானங்களை எடுத்து தரவுகளையும் தகவல்களையும் இற்றைப்படுத்த வேண்டும் எனவும், இவ் விவசாயம் சார்ந்த புள்ளிவிபரம் 10 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதால் - இத் தரவுகள் தேசிய ரீதியாக மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு செய்வதால் வகை மற்றும் தொகை ரீதியான இவ் விபரங்கள் உரிய காலத்தில் அல்லது அதற்கு முன்னர் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுமென வும் அரசாங்க அதிபர் தெரிவித்து, இச் செயற்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்ள அனைவரது ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இவ் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம். வித்தியானந்தநேசன் அவர்கள், தொகைமதிப்பு புள்ளி விவர திணைக்கள மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






