மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை பதிவு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. மூன்றாம் நிலை தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை பதிவு செய்தல் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளாக அரசாங்க அதிபரால் அவர்களால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.மூன்றாம் நிலை தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை டிசம்பர் 10 ஆம் திகதிக்குள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும், டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் விரிவுரையாளர்களை நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாளும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
2.மூன்றாம் நிலை தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் NVQ Level 03 மற்றும் NVQ Level 04 கற்கைநெறிகளை ஆரம்பித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதற்கு அமைய, எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
3.ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யாது தொழிற்கல்வி நடாத்தி வரும் நிறுவனங்கள் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட பிரதம கணக்காளர், தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், , மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவரத்தில் ஏற்பட்ட இடர்பாட்டால் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு கடமைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (26.11.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், நெடுந்தீவுக்கு கடல் பிராயணம் மூலம் சென்று கடமைகள் ஆற்றும் உத்தியோகத்தர்களைப் பாராட்டுவதாகவும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் ஒரு வருடம் மட்டும் கடமையாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கு அமைவாக, அக் கடமைகளை ஏற்று சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் சேவைகளை குறிப்பிட்டதுடன், காலநிலை சீராகிய பின்னர் கடல் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும்,நெடுந்தீவில் உள்ள மக்களுக்கு பல இடர்பாடுகளுக்கு மத்தியில் அங்கு சென்று உத்தியோகத்தர்கள் கடமையாற்றிவருவதனை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, உத்தியோகத்தர்களுக்கு இடர்பாடுகள் இருந்தால், அதனை தீர்த்து வைப்பதன் மூலம் உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக சேவையாற்ற வழி ஏற்படுவதால் நெடுந்தீவு மக்கள் நல்ல சேவையினை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, உத்தியோகத்தர்களின் இடர்பாடுகளை அல்லது பிரச்சனைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் மற்றும் நெடுந்தீவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், உள்ளூராட்சி மன்ற கெளரவ தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமூகத்தோடு அண்ணியொன்னியமாக செயற்பட்டு மக்களுக்கு இடர் முகாமைத்துவ சேவைகளை வழங்கியவர்கள் என்ற ரீதியில், வெள்ள அனர்த்த நிலைமைகளில் மட்டுமல்லாமல் வேறு இடர் நிலைமைகளிலும் மக்களோடு இணைந்து பணியாற்றியவர்களாக உள்ளதுடன் இது தொடர்பான தெளிவினை கொண்டவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், அனர்த்த நிலைமைகளின் போது மக்களின் உண்மையான தேவைகளை இனங்கண்டு அதற்கேற்ற வகையில் அனர்த்த முகாமைத்துவ சேவைகளை வழங்குபவர்களாக இருப்பதுடன், அனர்த்தம்
இடம்பெறுவதற்கான இடங்களை முன்கூட்டியே இனங்கண்டு வைத்திருப்பதன் ஊடாக அனர்த்த நிலைமைகளில் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகளை வழங்குவதற்கு இலகுவாக காணப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்குபவர்களுக்கு 03 நாள் சமைத்த உணவு வழங்கப்படும் எனவும், அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளின் தெளிவூட்டல்களையும் இச் செயலமர்வில் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதுடன், அனர்த்த நிலைமைகளின் போது மாவட்டச் செயலகத்துடன் பிரதேச செயலகம், பிரதேச சபைகள் உள்ளடங்களாக துறைசார்ந்த திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளை வினைத்திறனாக செயற்பட முடியும் எனவும், தொடர்புடைய திணைக்களங்களுக்கிடையில் நல்ல உறவு இருத்தல் வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்து, கெளரவ உறுப்பினர்கள் தமதுக்குரிய பிரிவுகளில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருப்பின் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு எவ்வேளையிலும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், கெளரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடிலில் ஈடுபட்டு, அவர்களால் முன்வைக்கப்பட்ட அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்புடைய நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபை உள்ளிட்ட திணைக்களங்களுடன் இணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். இச் செயலமர்வில்அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளரால் மேலதிக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் மற்றும் நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் ஆகியோரும் பங்குபற்றி கருத்துக்களை வழங்கினார்கள். இச் செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் கெளரவ தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்.

மாவட்டச் செயலகத்துடன்தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து மாணவர்கள் மத்தியில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் தேசிய ரீதியாக மாணவ முதல்வர்களை பயிற்றுவிக்கும் மாவட்ட மட்ட மாணவர் தூதுவர் நிகழ்ச்சித்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் பாடசாலை விடுமுறைக் காலமாக இருந்த போதும் குறித்த மாணவர் தூதுவர் நிகழ்ச்சித்திட்டத்திற்காக வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இந் நிகழ்ச்சித் திட்டமானது பாடசாலை மட்டத்திலிருந்து தற்போது பல்கலைக்கழகம் வரை செயற்படுத்தப்படுகிறது எனவும், மாணவர் தூதுவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இந் நிகழ்ச்சித் திட்டமானது மாணவர்களின் செயற்பாடுகள் அவர்களை எவ்வாறு ஆற்றுப்படுத்தலாம் அதன் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், மாணவ பருவம் என ஆரம்பிக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்று முழுமையாக மாற்றமடைந்துள்ளதாகவும், எனவே இந்த பல்வேறுபட்ட சமூக மாற்றத்திற்கு உட்பட்டு மாணவர்களை வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பாடசாலை நிர்வாக கட்டமைப்புக்கு உட்பட்டு ஆசிரியர்கள் செயற்பட வேண்டுமெனவும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கான செயற்பாடும் சமூகத்திற்கு மிகவும் வேண்டப்பட்டதெனவும் முன்னைய காலங்களை விட ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பரிமாணங்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் ஒவ்வொரு பிள்ளையும் சமூகமயமாக்கலின் பொருட்டு முன்பள்ளியிலிருந்து ஆரம்பித்து பாடசாலையுடன் இணைகிறது எனவும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களை ஆற்றுப்படுத்துவதில் மிகப் பெரிய சவாலாக உள்ளதாகவும், அறிவு, திறன், மற்றும் மனப்பாங்கு என்ற விடயங்களில் தற்போது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான தேவை உள்ளது எனவும், கடந்த காலங்களை விட தற்போது மாணவர்களின் மனப்பாங்கில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், அந்த வகையில் மாற்றம் என்பது ஏற்பட வேண்டிய ஓன்றுதான் ஆனால் அந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியமானதென அரசாங்க அதிபர் தெரிவித்து இச் செயற்பாட்டை அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.மேலும், இப் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் இதனை சரியான முறையில் பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதுடன், குறித்த இவ் தூதுவர் நிகழ்ச்சி திட்டத்தை அனைத்து பாடசாலைகளிலும் குறித்த ஒரு தரத்திற்கு மேல் செயற்படுத்த வேண்டுமென தெரிவித்தார். மேலும் மாணவர்களை தண்டிப்பதில் தற்போது சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால், பிள்ளைகளை சரியாக வழியில் ஆற்றுப்படுத்த வேண்டுமெனவும், மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் தேவைகள் ஏதும் இருப்பின் பாடசாலை அதிபர் மூலமாக கோரிக்கை முன்வைக்கும் போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் மாவட்ட செயலகம் தனது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க முடியுமென அரசாங்க அதிபர் தெரிவித்தார்.இந் நிகழ்வில் வளவாளர்களாக யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் திரு செ. பிரணவன், சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு இ. ரவிராஜ், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை வெளியிடை சேவை இணைப்பாளர் திருமதி ய.சியாமினி, மாவட்ட மனிதவள உத்தியோகத்தர் திரு ஸ்ரீபவன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். மாணவர் தூதுவர் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொண்ட 82 பாடசாலைகளின் அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட மாணவர் தலைவர் ஆகியோருக்கு அரசாங்க அதிபரால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு இ. செந்தூரன் நன்றியுரை வழங்கினார். இவ் செயலமர்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாண வலயம், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாணவர் முதல்வர் சபை பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ முதல்வர்கள் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை சார் வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது "அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம் - Stop Digital Violence" எனும் தொனிப்பொருளின் கீழ் துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (24.11.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கு யாழ் சமூக செயற்பாட்டு மையம் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி திரு. ந. சுகிர்தராஜ் அவர்களால், வழங்கப்பட்டு, அரசாங்க அதிபர் அவர்களின் தொடக்கவுரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு குரல் கொடுக்கும் முகமாக இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இச் செயற்றிட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திருமதி கி. தயாபரி மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) நிறுவன த்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






