யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் 11874 குடும்பங்களை சேர்ந்த 38005 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1554 குடும்பங்களைச் சேர்ந்த 4916 அங்கத்தவர்கள் 53 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. 7438 குடும்பங்களை சேர்ந்த 23341 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 262 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
 
 
1 2 3 4 5
சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (30.11.2025) மு. ப. 11.00 மணிக்கு இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பிரதேச செயலாளர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், மேன்மேலும் துரிதமான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக மேலதிக ஒருங்கிணைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் துரித நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கவனத்திற்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கலுக்காக - தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக - சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
1 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 03 நாட்களுக்கு சமைத்த உணவு பிரதேச செயலாளர் ஒழுங்கமைப்பில் வழங்க முடியும்.
மேலதிக நாட்களுக்கு வழங்க வேண்டியிருப்பின் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேலும் 04 நாட்களுக்கு வழங்க முடியும் எனவும், அதற்கு மேலும் 07 நாட்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படின் அமைச்சின் செயலாளர் அனுமதி பெற்று வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
2 சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருக்காமல் அவர்களுடைய வீடுகள் அல்லது நண்பர்கள் ,உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவு வழங்கலாம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேற்படி அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீரான உணவு விநியோகத்தில் வினைத்திறனான ஒத்துழைப்பினை வழங்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
3.அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் பிரதேச செயலாளர்கள் மூலமே பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஏற்கனவே பிரதேச செயலகங்களுக்கு அவசர தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட தறப்பாள், நுளம்பு வலைகள், மடிக்கும் கட்டில்கள் வழங்கப்பட்டதற்கு மேலதிகமான தேவைப்பாடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு தாம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றதும் பிரதேச செயலகங்களின் தேவைக்கு ஏற்ப மேலும் பங்கிட்டு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி பிரதேச செயலாளர்கள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபங்கள், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இது தொடர்பான திருத்தப்பட்ட கடிதங்கள் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு உரிய தெளிவூட்டல்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித இடையூறும் அற்ற வகையில் சமைத்த உணவு வழங்குமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் அவர்களும் பங்குபற்றியதுடன், நேரடியாக இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வை. தர்சினி, அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் திரு ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் திருமதி ஆ. நளாயினி ஆகியோர் பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 4 5 6
அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (26.11.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகமுடியாது எனவும், அடுத்த ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தற்போது உடனடியாக வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.மேலும், பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவ் நிலையத்திற்கு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் போது பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலக 0212117117 இலக்க தொலைபேசிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவ் இலக்கத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பதிலளிப்பார் எனவும் அவர் பதிலளிக்காது தவறுதலாக தவறும்பட்சத்தில் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அத் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து வடிகால்கள் சீர் செய்ய வேண்டிய கோரிக்கைகள் அதிகம் கிடைக்கப்பெறுவதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் முப்படையினர் உதவி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து அனைவரின் பூரண ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் வைத்து அரசாங்க அதிபரினால் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகவே நிதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட அலுவலர் திருமதி. ஆ. நளாயினி, உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
1 2
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களை சேர்ந்த 7513 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுகளில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 390 அங்கத்தவர்கள் 12 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. 1580 குடும்பங்களை சேர்ந்த 4993 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 01வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்தான சகல படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவுரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிராம சேவையாளரின், பிரதேச செயலாளரின்; உதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
1 2 3 4
விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.11.2025) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொடர்ந்து பிரதேச செயலக ரீதியாக விதாதா நிதி ஊடாக நடைபெற்ற செயற்திட்டங்கள், உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வுகள், அடுத்த வருடத்திற்கான திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் மற்றும் விதாதா வள நிலையங்களுக்கு தேவையான கணணி தேவைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாவட்ட விதாதா உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6