பால்நிலைசார் வன்முறைக்கெதிரான செயற்பாட்டு குழுவின் மூன்றாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திரு மா.முரளி அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (13.11.2025 ) நண்பகல் 12 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பெண்களுக்கெதிரான பால்நிலைசார் வன்முறைகளால் பாதிப்புக்குள்ளானவர்களது பிரதேச செயலக ரீதியாக தரவுகள் அவற்றுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக ரீதியாக நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், மற்றும் SGBV செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக செயல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், 2026 ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளுக்கான ஒதுக்கீடுகள் பற்றாக்குறையாக கணப்படுமென கருதினால் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமென ஆலோசனை வழங்கினார். மேலும் போதைப்பொருள் பாவனை மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பாக கிராம மட்டங்களில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக தற்போதுள்ள அரசாங்கம் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அச் சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் பொலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார். இக் கலந்துரையாடலில் பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள்,பொலீஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடக்கு மாகாண விவசாயம் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழு இணைத்தலைவருமான திரு. எஸ். சிவசிறீ ஆகியோரின் இணைத் தலைமையிலும் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (13.12.2025) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் நிரந்தர உப குழுக்களாக திட்டமிடல் குழு, உணவுப் பாதுகாப்பு குழு மற்றும் விலைநிர்ணய குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் சுற்றுநிருபத்தின் பிரகாரம் அரசாங்க அதிபர் மற்றும் அந்தந்த மாகாணங்களின் விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகியன காணப்படுவதாகவும் தெரிவித்ததார். மேலும், அதனடிப்படையில் உணவுப்பாதுகாப்பு குழுவின் நோக்கங்களாக மாவட்டத்திலுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உணவு உற்பத்திகளை விநியோகித்தலை உறுதிப்படுத்தல், சந்தைப்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அணுகல் வசதிகளை விருத்தி செய்தல், சுத்தமான தண்ணீரை வழங்கல், சுகாதாரம், போசாக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவுகளுக்கான அணுகல் மற்றும் போஷாக்கு கல்வியை உறுதி செய்தல், காலநிலை மாற்றம், அனர்த்தங்கள்,பொருளாதார நெருக்கடிகளின் போது உணவு உற்பத்தி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் திட்டங்களை தயாரித்தல்,செயற்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறை தெளிவாக காட்டப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இதன்மூலம் ஒருவரின் போஷாக்கான, பாதுகாப்பான நச்சற்ற உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவிலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படல் மூலம் எமது மாவட்டத்தின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமென இணைத்தலைமை உரையில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.மேலும் இக் கூட்டத்தில் கருத்துதெரிவித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. எஸ். சிவசிறீ அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவை மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளாக காணப்படுகிறது. அந்த வகையில் இம் மூன்று பொருளாதார நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்கும் போது உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமென தெரிவித்தார். மேலும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு உற்பத்தி தரவுகள் மிக அவசியமாவதாகவும் அவற்றை சேகரித்து நிரைப்படுத்தல் அவசியமானதென தெரிவித்தார். எனினும் இவ் தரவு சேகரிப்பு நடவடிக்கைக்காக தேவையான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் இந் நடவடிக்கைகளை அடுத்த வருடத்தில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்ததுடன் இந் நடவடிக்கைகளுக்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து விவசாய குழுக் கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் பின்வரும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
1.விவசாய உணவு உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது, யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 13,765 ஹெக்டயர் காணிகளில் 12,580 ஹெக்டயர் நிலப்பரப்புக்கள் விவசாய செய்கையை மேற்கொள்ளக் கூடிய வகையில் உள்ளமையினால் இந்த காணிகளில் சிறுதானிய செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், இவ்வாறு சிறுதானிய செய்கையினை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கால்நடை மற்றும் இயற்கையை காரணம் காட்டி செய்கை மேற்கொள்வதை நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வேலணை மற்றும் ஊர்காவற்துறை போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் காட்டு மாடுகள் அதிகம் விளை நிலங்களை அளிப்பதாகவும், சண்டிலிப்பாய், கரவெட்டி, தென்மராட்சி போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் கட்டாக்காலி மாடுகளின் விளைநிலங்களை அழிப்பதாகவும் விவசாயிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டு அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
2.உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு உரிய மாவட்ட செயலாளர் ஊடாக அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கி திட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வளர்ப்பு மாடுகளுக்கு இலக்கத் தகடுகள் கட்டாயம் குத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
3 இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கபபட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், யாழ் மாவட்டத்திற்கென்று விசேட காப்புறுதி நிபந்தனைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்படது. மேலும் சம்பந்தப்பட்ட கமநல அபிவிருத்தி திணைக்களங்களையும் விவசாயிகளையும் அழைத்து இது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
4.விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது விவசாயிகள் காலநிலை கருத்தில் கொண்டு விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திட்டமிட்டலை மேற்கொள்ள வேண்டும் என்றும் , சந்தைகளில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கடைகளின் ஒப்பந்தங்களை இரத்து செய்து வியாபாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதுடன் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பாகவும், யாழ் மாவட்டத்தில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், பயன்படுத்தப்படாத காணிகளை எவ்வாறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அதனை வேறு எந்த விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தலாம் என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், பாதீனிய கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் , உரமானியம் வழங்கல் தொடர்பாகவும், விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்தி பொருட்களுக்கு சந்தையாளர்களினால் கழிக்கப்படும் பொருட்கழிவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
5.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 9000 லீட்டர் பால் நுகர்ச்சிக்கு தேவைப்படுவதாகவும் இதில் சுமார் 6000 லீட்டர் பால் யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக நுகரப்படுவதாகவும் ஏனைய பால் வெளி மாவட்டங்களில் இருந்து பதனிடப்பட்டு கொண்டுவரப்பட்டு, நுகரப்படுவதாகவும், யாழ் மாவட்டத்தில் பால் பதனிடும் நிலையங்களை நிறுவதற்கு நடடிவ்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
6.இதேவேளை கடலுணவு உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது யாழ் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதிக்காக வழங்கப்படும் கடலுணவுகள் எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது தொடர்பாகவும், கடலுணவு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு. யாழ் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக காணப்படுவதாகவும் இதற்கு செலவிற்கு தக்க வருமானம் காணப்படாமையே காரணம் என்றும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட த்தில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக பிரத்தியேக இணைப்பாளர், மாகாண விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்தி துறைசார்ந்த திணைக்கள தலைவர்கள், விவசாய சம்மேளன பிரதிநிதிகள், மாவட்ட செயலக, பிரதேச செயலக விவசாய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளராக கடமையாற்றி சாவகச்சேரி பிரதேச செயலாளராகஇடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னாள் மாவட்ட சமுர்த்திப்பணிப்பாள திரு பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (12.11.2025) பி. ப.12.15 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நெடுந்தீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தனது செயற்பாடுகளை மிகவும் சிறப்பாக ஆற்றியதாகவும் குறிப்பிட்டதுடன், சமுர்த்தித் திணைக்களம் மிகவும் சவால்கள் நிறைந்த நிர்வாகக் கட்டமைப்பாக காணப்பட்டபோதும் சிறப்பாக தமது சேவையினை திரு.எப்.சி. சத்தியசோதி அவர்கள் ஆற்றினார் எனவும், சிறந்த உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார் எனவும் எனக்குறிப்பிட்டார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின் சுயவிபரக் கோவைகளை உறுதிப்படுத்த உறுதுணையாக செயற்பட்டார் எனவும், இத் திணைக்களத்தில் தவறுகள் ஏற்படாமல் செயற்பட வேண்டும் என்பதில் முனைப்பாக செயற்பட்டவராகவும் கணக்காய்வு அறிக்கைகளை சிறப்பாக பேணியதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், அனைவருடனும் நட்பு ரீதியாக எல்லோரோடும் ஒருங்கிணைந்து பழகும் குணம் கொண்டவராகவும் தலைமைத்துவ பண்பு கொண்டவராகவும் பிரதேச மட்டங்களிலும் சமுர்த்திக்கான வினைத்திறனான பங்களிப்பை வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்த அரசாங்க அதிபர் இவரின் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. வாழ்த்துரையினைத் தொடர்ந்து, திரு. பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்களுக்கு அரசாங்க அதிபரினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு வாழ்த்துப்பாமாலை வழங்கப்பட்டது. இறுதியாக திரு திரு பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. திரு பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்கள் 01.11.2023 ஆம் திகதி தொடக்கம் 31.08.2025 வரை மாவட்ட சமுர்திப்பணிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 01 தங்கம் மற்றும் 02 வெள்ளிப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்த மாவட்ட விளையாட்டு வீரா் திரு. செல்வராசா ரமணன் அவர்களை இன்றைய தினம் (13.11.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கெளரவிப்பு நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொன்னடை போர்த்தி மலர்மாலையிட்டு கௌரவித்தார். இவ் கெளரவிப்பு நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதபர் அவர்கள், 23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3000 விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததாகவும், அதில் இலங்கையை சேர்ந்த 250 வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததாகவும் குறிப்பிட்டு, அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு தமிழராக திரு. செல்வராசா ரமணன் பங்குபற்றி உயரம்பாய்தலில் தங்கப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்தமையுடன் முப்பாய்ச்சல் ,கோலூன்றிப்பாய்தல் போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டமை பெருமகிழ்ச்சியை அளிப்பதாகவும் அதற்காக தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும், இவ்வாறானதொரு பல்வேறு நாடுகள் பங்குபற்றியஆசியப் போட்டியில் வெற்றியீட்டுவது என்பது ஓர் கடினமான விடயம் எனவும், தான் ஒரு சர்வதேச விளையாட்டு வீரனாக இருப்பதுடன் இளம்சந்ததியினருக்கு நல்லதொரு நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சாா்ந்த பயிற்சிகளை இலவசமாக பயிற்றுவித்து வரும் விளையாட்டு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து,மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி மேன்மேலும் வெற்றிகளை பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் வீர வீராங்கனைகள் பல சவால்களை எதிர்நோக்குவதாகவும் அதற்கமைய அமைச்சரவைக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்காக ரூபா 170 மில்லியன் நிதி ஒதுக்கீடு இவ் வருடம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இக் கௌரவிப்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன் பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் ஸ்புட்னிக் விளையாட்டுக்கழக வீரர்கள் மற்றும் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் வறுமை ஒழிப்பு செயற்றிட்டங்களின் அமுலாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகளும், பிராந்திய ரீதியாக அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பான யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை மாணவர்களுடனான அறிவு சார்ந்த அனுபவ பகிர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பளர் திரு.சுரேந்திரநாதன் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (12.11.2025) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக பொருளியல் பீடத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை சுதந்திரமடைந்த (1948) காலப்பகுதிக்கு பின்னர் யாழ் மாவட்டத்தின் வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் போக்குகள் தொடர்பிலான கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக பொருளியல் பீட மாணவர்களை வரவேற்றதுடன், குறைந்த வயதில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து இந்த பொருளியல் துறைசார்ந்த கல்வியை இளம் வயதில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இதனை வினைத்திறனாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன், பொருளாதார ரீதியாக அல்லது பொருளியல் ரீதியாக இந்த கல்வியை கற்கின்ற போது வறுமையானது மிக முக்கியமான இடத்தை வகிப்பதாகவும், வறுமைச் சுட்டிகளை பலவாறு கற்றுக்கொண்டாலும் அதன் நடைமுறைகளை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும், குறிப்பாக வறுமை என்பது ஒவ்வொருத்தருடைய சமூக பொருளாதார சூழல் என்ற அடிப்படையில் மாறுபடுவதுடன் நபருக்கு நபர் வேறுபடும் தன்மை கொண்டதாகவும் காணப்படுவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியில் வறுமையானர்களாக இருந்தாலும் சில விடயங்களில் வசதிவாய்ந்தவர்களாக உள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாவும் குறிப்பிட்டார். மேலும்,
குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்த குடும்பங்களே அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் ஊடாக இன்று முன்னோக்கி வந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாகவும், அரசாங்கம் காலத்துக்குக் காலம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது எனவும், இதற்கு அரச அதிகாரிகள் புள்ளிவிபரங்களை காலத்துக்கு காலம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசாங்கத்தினால் வறுமையை ஒழிப்பதற்காக அஸ்வெசும திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் மக்களுக்கு வழங்கப்பட்ட சமுர்த்தி திட்டமானது நிவாரண திட்டமாக இருந்து தற்போது வலுவூட்டல் திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், குறிப்பாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வறுமை ஒழிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்க அலுவலர்கள் குறிப்பாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் இந்த பணிகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் அல்லது பிரதேச மட்டத்தில் அல்லது கிராம மட்டத்தில் சென்று அவதானிப்பதன் ஊடாக உண்மையாக வறுமையின் தாக்கத்தை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்கள் தனிப்பட்ட பொருளாதார ரீதியான வறுமை நிலையை ஒழிப்பதற்கு அரசாங்க சேவையை மட்டும் நம்பியிருக்காமல் தனிப்பட்ட முயற்சியை மேற்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன், யாழ் மாவட்டத்தில் வறுமையான பிரதேசம் என்று இனங்காணப்பட்டுள்ள இடத்தை சென்று பார்வையிடுவதற்கான வசதிகளை மேற்கொண்டு தருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல்துறை முன்னாள் துறைத்தலைவர் சிரேஷ்ர விரிவுரையாளர் எஸ்.எஸ். உதயகுமார், யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல்துறை முன்னாள் துறைத்தலைவர் சிரேஷ்ர விரிவுரையாளர் திருமதி கவிதா ரவிசங்கர், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாள திருமதி சுவிதா பிரதீபன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பார் திரு.எஸ் சிவகுமார் உள்ளிட்ட மாவட்ட செயலக திட்டமிடல் கிளையின் உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக பொருளியல் பீட மூன்றாம் வருட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.






