சமுர்த்தி வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தொழிற்பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இனறையதினம் (31.10.2025) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் கௌரவ உபாலி பன்னிலகே அவர்களும் சிறப்பு விருந்தினராக அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க அவர்களும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தலைமையுரையாற்றும் போது இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி , சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயச்சந்திரமூரத்தி ரஜீவன் ஆகியோா் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனையோரையும் வரவேற்றுக்கொண்டு கிராமிய அபிவிருத்தி ,சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் என்ற மூன்று விடயங்களும் முக்கிய விடயங்களாக காணப்படுவதாகவும்,நாட்டின் அபிவிருத்தி நோக்கிய பாதையிலே சமுர்த்தித் திணைக்களம் அதனுடைய தொடர்புடைய தனது பணியினை மாவட்ட ரீதியாக ஆற்றி வருதாகவும் அந்த வகையில் சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னர் நிவாரண சேவைகள் வழங்கியுள்ளதாகவும் தற்போது அத் திட்டம் சமூக வலுவூட்டல் செயற்திட்டமாக மாற்றம் அடைந்து 915 பேர் இத்திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் பெற தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் வேலணை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு வாழ்வாதார சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் நிதியுதவியினை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்காக பயிற்சிகளை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் அந்தவகையில் ஹைடெக் லங்கா(High Tec Lanka )நிறுவனத்தின் மூலம் பயிற்சியினை நிறைவு செய்த 27 பயிற்சியாளர்களுக்கு சான்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா். மேலும் இதற்கு மேலதிகமாக மாவட்டத்தில் பல்வேறுபட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும் சுற்றுலா முகாமைத்துவம் தொடர்பாக 120 பேருக்கு பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இச் செயற்திட்டத்தில் முன்னெடுப்பதில் சமுர்த்தி திணைக்களம் முனைப்பான சேவையினை வழங்கி வருவதாகவும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களை அவர்கள் இருந்த நிலையிலிருந்து இத்திட்டங்கள் மேம்பாடடைய செய்துள்ளதாகவும் தேசிய ரீதியில் சமூக வலுவூட்டல் திட்டத்தில் யாழ்பாண மாவட்டம் இரண்டாவது நிலையிலும் புகைத்தலுக்கு எதிரான கொடி தின நிதி சேகரிப்பில் யாழ்ப்பாண மாவட்டம் முதன்மை நிலையிலும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டதாகவும் இதற்கு முன்னின்று உழைத்த சமுரத்திப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இத்துடன் சமுர்த்தித் திணைக்கள செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக சமூக வலுவூட்டல் அமைச்சர் கருத்து தெரிவித்தபோது உலகவங்கி மற்றும் ஆசிய விருத்தி வங்கியின் ஆதரவில் 2000 பேரை உள்ளடக்கிய முதல்நாள் நிகழ்வு எனவும் வலு சக்தி அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 915 குடும்பங்கள் வருமானம் குறைந்த குடும்பங்களாக இனங் காணப்பட்டுள்ளன எனவும் அவ் வருமானம் குறைந்த குடும்பங்கள் சமூக ரீதியில் வலுப்படுத்தலே இதன் நோக்கமெனவும் வருமானம் குறைந்த குடும்பங்களை அணுகி வருமானத்தை உயர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுய தொழிலை விருத்தி செய்ய நிதிகளை வழங்கியுள்ளதாகவும் இந்த வருடம் 137 மில்லியன் செலவழிக்கவுள்ளதாகவும் இது பெரிய முதலீடாக காணப்படுவதாகவும் நிதியினை உத்தியோகத்தர்களின் உதவியுடன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மனித வளத்தை வளர்த்துக் கொள்வதுடன் இளையோா் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கௌரவ அமைச்சர் தெரிவித்தாா் .அத்துடன் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் ஏனையோருக்கு சுற்றுலா பயணம்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான கற்கை நெறியை வழங்கவுள்ளதாகவும் அதன் மூலம் வெளிநாட்டிற்கு சென்று குடும்பங்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் வலுசக்தி திட்டங்களை அதிகரிக்க உள்ளதாகவும் கிராமிய வறுமை ஒழிப்பதற்கான விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பெருந்தொகையான நிதி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதெனவும்அடுத்த ஆண்டிலும் அதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்து "அழகான நாடு வளமான வாழ்க்கை"என்ற இந்த இலக்கிய அடைய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.இந் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வலுவூட்டல் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் வேலணை பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 30 பேருக்கு தலா 150000 ரூபா பெறுமதியான நிதிமானியம் வழங்கி வைத்ததுடன் இளைஞர் யுவதிகளை பயிற்சியளித்து வேலை வாய்ப்பினை உருவாக்குதல் செயற்திட்டத்தின் கீழ் உயர்தொழில் நுட்ப நிறுவனத்தில் பயிற்சியினை நிறைவு செய்த 27 பேருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சி.டி களு ஆராச்சி, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் குறுநிதிப் பிரிவின் பணிப்பாளர் ,மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் , மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள்,மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வலுப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவியினை பெறும் பயனாளிகள் உயர்தொழில் நுட்ப நிறுவனத்தில் பயிற்சியினை நிறைவு செய்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் நிலையான விவசாய மேம்பாட்டை உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர் ஸ்தானிகராலயம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடா உயர் ஸ்தானிகர் கெளரவ இசபெல் மார்ட்டின் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (31.10.2025)காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் விவசாய துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறிப்பாக களஞ்சிய வசதி குறைபாடுகள், போக்குவரத்து வசதியீனங்கள்,வடக்கு மாகாண விவசாய துறைசார் நிறுவன கொள்கைகள்,அவற்றிற்கிடையிலான இடைவெளிகள்,விவசாய உற்பத்திகளை புதிய பரிமாணத்துடன் எவ்வாறு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள், நீண்ட காலத்தை நோக்கிய முதலீடுகள், கனடா நாட்டுக்கு விவசாய உற்பத்தி ஏற்றுமதிகள் மற்றும் விவசாய துறையில் நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் துறைசார்ந்த அதிகாரிகளால் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், விவசாய கொள்கைகள், திறன் மேம்பாடு மற்றும் கனேடிய நிபுணத்துவம் மற்றும் கூட்டாண்மை உள்ளிட்ட மூலோபாய முதலீடுகள் வடக்கு மாகாணத்தை உள்ளடக்கிய காலநிலை மாற்றங்களின் போது விவசாய மேம்பாட்டை எவ்வாறு முன்னெடுத்தல் என்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் ,வடக்கு மாகாண சபை விவசாய துறைசாந்த திணைக்கள தலைவர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைசாந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள், இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான கனடா உயர் ஸ்தானிகர அதிகாரிகள், பனை அபிவிருத்தி சபை திணைக்கள தலைவர்கள், world vision அமைப்பின் அதிகாரிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

கனடா உயர் ஸ்தானிகர் கெளரவ இசபெல் மார்ட்டின் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(31.10.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே , கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

வி
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையிலும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜெயச்சந்திரமூரத்தி ரஜீவன், கௌரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (31.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச விசேட தேவையுடையோருக்கான தினத்தை கொண்டாடுவதற்காக வருகைதந்துள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகளை வரவேற்றுக் கொண்டதுடன், கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி நடாத்தப்பட்ட சர்வதேச விசேட தேவையுடையோருக்கான தினம் தொடர்பான கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அது தொடர்பான மேலதிக முடிவுகளை எடுப்பதற்கான இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கௌரவ அமைச்சர் அவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்வடைவதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதோடு ஏனைய மாவட்ட ங்களுடன் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களின் பங்குபற்றலுடனும்விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு நடைபெறவுள்ள இடம், அழைக்கப்படுவோர் எண்ணிக்கை, விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள், மாற்றுவலுவுள்ளோா் சைகை மொழி , பதாகைகள் காட்சிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் கௌரவ அமைச்சர் அவர்களுடன் விரிவாக கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் திரு.மேனகா கேரத், திருமதி.நளிகா பியசேன, பணிப்பாளர் ஜெயமாலி விக்கிரமாராட்சி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு சி.டி களு ஆராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மாவட்ட செயலக பதவிநிலைஉத்தியோகத்தர்கள், அமைச்சின் உயர் அதிகாாரிகள் , மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ,கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கியூமெடிக்கா நிறுவன அனுசரணையில் வேலணை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணி வழங்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் 30.10.2025 ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு, பாடசாலை நிர்வாகத்தினரால் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் அவர்களினால் 30.10.2025 ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக" என்ற தொனிப்பொருளில் முழு நாட்டையும் ஒண்றிணைத்த வகையிலான போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கியிருந்தார். மேலும் நிகழ்வில் சிறப்பான நாட்டிய ஆற்றுகையை வெளிப்படுத்திய மாணவிக்கு அரச அதிபர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந் நிகழ்வில் வேலணை மத்திய கல்லூரி, உப அதிபர், ஆசியர்கள், கியூமெடிக்கா மாவட்ட இணைப்பாளர்,வேலணை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






