போதைப் பொருள் அச்சுறுத்தலை தோற்கடிக்கும் "முழு நாடுமே ஒன்றாக " தேசிய அங்குரார்பண நிகழ்வு - நிகழ்நிலை மூலமாக சமநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிக்கும் "முழு நாடுமே ஒன்றாக " தேசிய அங்குரார்பண நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025 ) காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையின் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலின் ஆழத்தையும் கருத்தில் கொண்டு "முழு நாடுமே ஒன்றாக" என்ற தொனிப்பொருளில் முழு நாட்டையும் ஒண்றிணைத்த வகையிலான இந்த தேசிய திட்டம் நிகழ்நிலை மூலமாக சமநேரத்தில் சகல மாவட்ட ங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நிகழ்நிலை மூலமான சமநேரத்தில் நடைபெற்றது. கௌரவ ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற "அகன்று செல்" போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பங்களிக்கும் பொறுப்பொன்றாக அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாண உறுதி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறுவர், பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறைகளால் (SGBA) பாதிப்புக்குள்ளான சேவை நாடிகளுக்கான அவசர சேவை வழங்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (30.10.2025 ) YMCA மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் பெண்கள் தொடர்பான பால்நிலைசார் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இவ்வன்முறை செயற்பாடுகளை இலகுவாக வெளிக்கொணர்வதற்காக கிராம மட்டத்தில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதன் மூலமாக வன்முறைகளை வெளிக்கொணர வேண்டுமெனவும், அத்துடன் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் அவசர சேவை வழங்குதல் தொடர்பான இப்பயிற்சி பட்டறை மூலமாக வன்முறைகளை இலகுவாக கையாளக்கூடிய திறனை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இப் பயிற்ச்சி பட்டறை இன்றும் (30.10.2025) நாளையும் (31.10.2025) ஆகிய இரு தினங்களும் முழுநேர பயிற்சியாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிலிருந்து பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி விசாகா விக்கிரம ஆராச்சி, திருமதி டேவிகா நாகவத்தா, திருமதி ஜனகா பல்லப்பிடடியா, வளவாளராக வைத்தியர் கரிச்சந்திரா ஜகண்டவல, மொழிபெயர்ப்பாளர் திருமதி ஜெனி கிளிநொச்சி மாவட்ட, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், யாழ் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,உளவளத்துணை உத்தியோகத்தர்,பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியத்துவத்தின் செயற்பாடுகள் பிள்ளைகளின் முழுமையான நன்மை நோக்கியதாக ஆரோக்கியமான முறையில் அமையப்பெற்றால் பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஆசிரியர்களை தம் மனதிலே நிலையான இடத்தில் வைத்திருப்பார்கள் - அரசாங்க அதிபர் தெரிவிப்புசிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களை விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு. ஆர். லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025) காலை 8.30 மணிக்கு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வின் தொடக்க நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாஙக அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது தேசிய கல்வியியல் கல்லூரி மிகச் சிறப்பான வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டு பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கி சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருப்பதாகவும், அந்த வகையில் பீடாதிபதி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்பான காத்திரமான பங்களிப்பினாலேயே நல்ல தலைவர்களை சமூகத்துக்கு உருவாகிக் கொண்டிருப்பதாகவும், பாராட்டியதுடன், இவ் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலமாக முன்னாள் ஸ்தாபகர் திருவாளர் கமலநாதன் ஆசிரியர் அவர்களை தான் கற்ற ஆசியராக நினைவு கூறுவதற்காக சந்தர்ப்பத்தை இந் நிகழ்வு அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு பிள்ளையினுடைய சமூக மாயமாக்கல் செயற்பாடானது குறிப்பாக முன் பள்ளியிலேயே ஆரம்பிப்பதாகவும் குடும்ப சூழலில் இருந்து வெளிவந்து முதலில் ஆரம்பமாவது முன்பள்ளியிலும் ஆரம்பிப்பதாகவும் பின்னர் பாடசாலையில் மீளுருவாகி சமூகமாக்கல் செயற்பாடு தொடர்சியாக நடைபெற்று சமூகத்தில் ஆசியர்களாக உருவாகி காணப்படுவதாகவும் அத்தகைய சிறப்பான பணியினை ஆற்றுபவர்காளாக ஆசிரியர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பயிற்சி பெற்றிருந்தாலும் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி கற்பிக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் ஆசிரியத்துவத்தின் செயற்பாடு பிள்ளையின் நன்மை நோக்கியதாக அமைய வேண்டும் எனவும் அத்தகைய செயல்பாடுகளை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதன் ஊடாக பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஆசிரியர்களை தம் மனதிலே இருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, இவ் விழிப்புணர்வு பயிற்சியின் பயனை முழுமையாக பெற்று பயன் பெறுமாறும் கேட்டுக் கொண்டார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்க முறையான "சிக் ஷா "ஒழுக்க பயிற்சி கைந்நூல் " வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாட சாலை மாணவர்களின் நலன்களை அடையாளம் காணுதலும் கையாளுதலும் தொடர்பாக அம்பன் வைத்தியசாலை வைத்தியர் எஸ்.சிவசுதன் மற்றும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் கட்டுக்காவல் சட்டங்களை தெளிவுத்துதல்" யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் திரு. ஐ. கனகராஜ் அவர்களும் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்கள். இந் நிகழ்வில் உப பீடாதிபதி திரு. த.தனபாலன், தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


உலக உணவு தினத்தினை முன்னிட்டு - கரித்தாஸ் - கீயூடெக் நிறுவனத்தினால் இரசாயன பாவனையற்ற வீட்டுத் தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இன்றைய தினம் (30.10.2025)காலை 09.30 மணிக்கு நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி அ. அன்ரோ டெனிசியஸ் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணம் புனித மாட்டீன் குருமடத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் விற்பனையினை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ விருந்தினராக அருட்பணி ப. ஜோ. ஜெயரட்ணம் அவருகளும், சிறப்பு விருந்தினராக பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி அ. சிறிரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.மேலும் இந் நிகழ்வில் மதகுருமார்கள், திட்ட இணைப்பாளர் திருமதி லலிதா விக்டர், உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. வி. தயாபரன், கரித்தாஸ் - கியூடெக் நிறுவன உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு தனியார் ஹொட்டலில் 29.10.2025 ஆம் திகதி நடைபெற்றது. அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில்ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், தொழில்துறை அமைச்சகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆதரவுடன்
மனேஜ்மன்ட் க்ளப் - இலங்கை (The Management Club of Sri Lanka) நடத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று முன்னாயத்த கலந்துரையாடலும் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டார். மேலும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள், அனுசரணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






