2025 ஆம் ஆண்டின் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு “நூற்றாண்டு கண்ட இலங்கை சிரேஷ்ட பிரஜைகளுக்கு வாழ்த்துக்கள்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற 100 வயதிற்கு மேற்பட்ட 17 சிரேஷ்ட பிரஜைகளில் நேற்று முன்தினம் (04.11.2025) வேலணை பிரதேச செயலக பிரிவின் நயினாதீவு தெற்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 104 வயதினையுடைய திருமதி சின்னத்துரை தங்கம்மா மற்றும் 103 வயதினையுடைய திருமதி ஐயாத்துரை சிவக்கொழுந்து என்பவர்களின் இல்லங்களுக்கு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வேலணைப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேரடியாக அவர்கள் இல்லங்கள் சென்று சென்று கெளரவிக்கப்பட்டார்கள். இதேவேளை சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் நவாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 105 வயதினையுடைய திருமதி சண்முகம் பூமணி என்பவரும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவின் சுண்டிக்குளி தெற்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 102 வயதினையுடைய திருமதி அருளானந்தம் செபமாலை என்பவரும் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்கனவே கெளரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5
7அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நாட்டின் தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களில் தேசிய சுனாமி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (05.11.2025) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள யா/வட இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வானது தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களான காலி, களுத்துறை,யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுனாமி அனர்த்தம் அல்லது தாக்கம் ஏற்பட்டால் எவ்வாறு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான ஒத்திகையாகவும், விழிப்புணர்வாகவும் இந் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைப் போல், இன்னும் ஒரு தடவை உயிர் இழப்புக்கள் ஏற்படாவண்ணம் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என்பதற்கான நிகழ்வாக இது அமைந்துள்ளதாகவும், அந்தவகையில் இன்றைய நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பருத்தித்துறை பிரதேச செயகத்தினர், செஞ்சிலுவைச் சங்கத்தினர், சுகாதார பணிமனையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு தமது நன்றியினையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்த ஒத்திகையின் போது வெளியிடப்படும் தகவல்கள், அறிவித்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெறும் ஒத்திகைச் செயற்பாடுகளாக இருந்ததோடு
இந்த ஒத்திகை நிகழ்வானது, உண்மையான சுனாமி எச்சரிக்கை நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பரிசோதித்து, தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக அமைந்திருந்தது. இவ் ஒத்திகை நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு T. N. சூரியராஜா, உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, முப்படைகளின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அனர்த்த முகாமைதுவ பிரிவு உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்,செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ,அரச்சார்பற்ற நிறுவனத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
 
 
6 7 8 9 10 11 12 13 15 16 17 21 23 24 25
3யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சாவகச்சேரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (04.11.2025) சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், நகர சபையின் தவிசாளர் கௌரவ வ. ஸ்ரீபிரகாஸ், சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ பொ. குகதாசன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது. இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்,காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை (Cataract) இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், இந் நிகழ்வில் சக்கரநாற்காலி, செவிப்புலனற்றவர்களுக்கான கருவிகள், மூக்கு கண்ணாடி என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொதுமக்களுக்குஇலவசமாக வழங்கப்பட்டதுடன், உறுமய திட்டத்தின் கீ‌ழ் இலவச காணிப்பத்திரமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு F. C. சத்தியசோதி மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 14 15 20 17 22 24 26 27
 
யாழ்ப்பாண மாவட்டதில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.11.2025) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், கடந்த வருட திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டிய போது குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், பிரதேச செயலாளர்கள் தமது பிரதேச செயலகத்திற்குரிய அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுமாறும் கோரினார். மேலும், இவ்வாண்டுக்குரிய தி்ட்டங்களை சரியாக நிறைவேற்றி முடிப்பதன் ஊடாக அடுத்த வருட அபிவிருத்தித் திட்டங்களுக்கு கூடுதலான நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், அந் நிதியை மீண்டும் மக்களுக்கு பயன்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். மேலும் இம் முறை அரச ஊழியர் சம்பளம் அதிகரிப்பு, ஆளணி பற்றாக்குறை என்பவற்றை நிறைவேற்றுவதுடன், அமைச்சரவை கூட்டத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாகவும், மேலும் கல்விச் சீர்திருத்தத்தில் கூடுதலான மாற்றங்களை கொண்டு வர வேண்டி உள்ளதாகவும், காணி தொடர்பான பிரச்சனை, போதைப் பொருள் பாவனை, ஏனைய சமூக விரோத பிரச்சினைகள் தொடர்பாகவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், மாணவ சமூகத்தை பாதிப்புக்குள்ளாகும் போதைப் பொருள் பாவனையினை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக, பிரதேச செயலாளர்கள் கிராம மட்டங்களில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி அதற்குரிய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், கூட்டத்திற்கு வருகைதந்த கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் கொள்வனவு நடைமுறைகளினால் காலதாமதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலையில் காணப்படுவதனால் குறிக்கப்பட்ட கால அவகாசம் கொள்வனவு நடைமுறைகளுக்காக தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது மிகப்பெரிய சவால்களை தீவகப் பிரதேசங்கள் எதிர்கொள்வதாகவும், அரச அதிகாரிகள் என்ற ரீதியில் நாங்கள் அனைவரும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் 99% வீதமான உத்தியோகத்தர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் எமக்கு எல்லோருக்கும் கூடுதலான அக்கறையும் பொறுப்பும் இருப்பதாகவும், நாம் அனைவரும் இயன்றளவு இத் திட்டங்களை மிக விரைவாக டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் கூறினார். மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திடம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களுக்கான முன்மொழிவுகளை சாத்தியப்பாடுகளுடன் தயார்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், எதிர்வரும் பருவப்பெயற்சி காலத்தில் ஏற்படும் மழை வீழ்ச்சியினால் சவால்கள் காணப்பட்டாலும் உரிய வேலைத்திட்டங்களை நாம் உரிய காலத்தில் நிறைவேற்ற அனைவரினதும் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார். யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மாவட்ட அபிவிருத்தித்திட்டம், கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார கிராமிய அபிவிருத்தித்திட்டம், வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தித்திட்டம் ஆகிய திட்டங்களின் முடிவுறுத்திய,முடிவுறத்தாத திட்டங்கள் தொடர்பாக கௌரவ அமைச்சர் தலைமையில் ஆராயப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், கட்டடங்கள் திணைக்கள பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 16 17 18 1920 22 23 26 26 27 28
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமை யாளர்களுக்கான மொழிப் பயிற்சி நெறியானது - அரசகரும மொழிகள் திணைக்களமும் மற்றும் மாவட்ட சமுர்த்தி திணைக்களம் இணைந்து மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. சிறிவர்ணன் தலைமையில் இன்றைய தினம் (01.11.2025) காலை 09.00 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இவ் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டதுடன், மொழிப் பயிற்சி நெறிகளின் அவசியம், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நடைபெறுகின்ற மொழிப் பயிற்சி நெறிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மொழிப் பயிற்சி நெறிகள் எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்கள் தெரிவித்தார். இவ் ஆரம்ப நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலாளர் திரு. தயாரூபன், மாவட்ட சமுர்த்தித் திணைக்கள கணக்காளர் திரு. முருகதாஸ், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. ந.உமாநாத் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்கள வளவாளர் திருமதி சி. யோகராணி என பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 6