சமுர்த்தி வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தொழிற்பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இனறையதினம் (31.10.2025) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் கௌரவ உபாலி பன்னிலகே அவர்களும் சிறப்பு விருந்தினராக அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க அவர்களும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தலைமையுரையாற்றும் போது இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி , சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயச்சந்திரமூரத்தி ரஜீவன் ஆகியோா் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனையோரையும் வரவேற்றுக்கொண்டு கிராமிய அபிவிருத்தி ,சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் என்ற மூன்று விடயங்களும் முக்கிய விடயங்களாக காணப்படுவதாகவும்,நாட்டின் அபிவிருத்தி நோக்கிய பாதையிலே சமுர்த்தித் திணைக்களம் அதனுடைய தொடர்புடைய தனது பணியினை மாவட்ட ரீதியாக ஆற்றி வருதாகவும் அந்த வகையில் சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னர் நிவாரண சேவைகள் வழங்கியுள்ளதாகவும் தற்போது அத் திட்டம் சமூக வலுவூட்டல் செயற்திட்டமாக மாற்றம் அடைந்து 915 பேர் இத்திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் பெற தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் வேலணை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு வாழ்வாதார சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் நிதியுதவியினை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்காக பயிற்சிகளை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் அந்தவகையில் ஹைடெக் லங்கா(High Tec Lanka )நிறுவனத்தின் மூலம் பயிற்சியினை நிறைவு செய்த 27 பயிற்சியாளர்களுக்கு சான்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா். மேலும் இதற்கு மேலதிகமாக மாவட்டத்தில் பல்வேறுபட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும் சுற்றுலா முகாமைத்துவம் தொடர்பாக 120 பேருக்கு பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இச் செயற்திட்டத்தில் முன்னெடுப்பதில் சமுர்த்தி திணைக்களம் முனைப்பான சேவையினை வழங்கி வருவதாகவும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களை அவர்கள் இருந்த நிலையிலிருந்து இத்திட்டங்கள் மேம்பாடடைய செய்துள்ளதாகவும் தேசிய ரீதியில் சமூக வலுவூட்டல் திட்டத்தில் யாழ்பாண மாவட்டம் இரண்டாவது நிலையிலும் புகைத்தலுக்கு எதிரான கொடி தின நிதி சேகரிப்பில் யாழ்ப்பாண மாவட்டம் முதன்மை நிலையிலும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டதாகவும் இதற்கு முன்னின்று உழைத்த சமுரத்திப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இத்துடன் சமுர்த்தித் திணைக்கள செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிராமியஅபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக சமூக வலுவூட்டல் அமைச்சர் கருத்து தெரிவித்தபோது உலகவங்கி மற்றும் ஆசிய விருத்தி வங்கியின் ஆதரவில் 2000 பேரை உள்ளடக்கிய முதல்நாள் நிகழ்வு எனவும் வலு சக்தி அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 915 குடும்பங்கள் வருமானம் குறைந்த குடும்பங்களாக இனங் காணப்பட்டுள்ளன எனவும் அவ் வருமானம் குறைந்த குடும்பங்கள் சமூக ரீதியில் வலுப்படுத்தலே இதன் நோக்கமெனவும் வருமானம் குறைந்த குடும்பங்களை அணுகி வருமானத்தை உயர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுய தொழிலை விருத்தி செய்ய நிதிகளை வழங்கியுள்ளதாகவும் இந்த வருடம் 137 மில்லியன் செலவழிக்கவுள்ளதாகவும் இது பெரிய முதலீடாக காணப்படுவதாகவும் நிதியினை உத்தியோகத்தர்களின் உதவியுடன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மனித வளத்தை வளர்த்துக் கொள்வதுடன் இளையோா் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கௌரவ அமைச்சர் தெரிவித்தாா் .அத்துடன் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் ஏனையோருக்கு சுற்றுலா பயணம்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான கற்கை நெறியை வழங்கவுள்ளதாகவும் அதன் மூலம் வெளிநாட்டிற்கு சென்று குடும்பங்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் வலுசக்தி திட்டங்களை அதிகரிக்க உள்ளதாகவும் கிராமிய வறுமை ஒழிப்பதற்கான விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பெருந்தொகையான நிதி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதெனவும்அடுத்த ஆண்டிலும் அதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்து "அழகான நாடு வளமான வாழ்க்கை"என்ற இந்த இலக்கிய அடைய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.இந் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வலுவூட்டல் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் வேலணை பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 30 பேருக்கு தலா 150000 ரூபா பெறுமதியான நிதிமானியம் வழங்கி வைத்ததுடன் இளைஞர் யுவதிகளை பயிற்சியளித்து வேலை வாய்ப்பினை உருவாக்குதல் செயற்திட்டத்தின் கீழ் உயர்தொழில் நுட்ப நிறுவனத்தில் பயிற்சியினை நிறைவு செய்த 27 பேருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சி.டி களு ஆராச்சி, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் குறுநிதிப் பிரிவின் பணிப்பாளர் ,மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் , மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள்,மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வலுப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவியினை பெறும் பயனாளிகள் உயர்தொழில் நுட்ப நிறுவனத்தில் பயிற்சியினை நிறைவு செய்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






