தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன் "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்க்கான அங்குரார்ப்பன நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் நாளைய தினம்( 16.01.2026) பிற்பகல் 02.00 மணிக்கு யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
1
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் சங்கமம் - 2026' நிகழ்வு, இன்று(15.01. 2026) வியாழக்கிழமை மானிப்பாய் மருதடி ஆலய முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆலயச் சூழலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல்களைப் பார்வையிட்டவாறு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் அவர் கலந்து கொண்டதோடு அதன் பின்னர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் தமிழ் மக்களின் தனித்துவமான கலை, கலாசாரங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பொதுமக்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7
"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்பாடு - விற்கின்ற அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் "அகன்று செல்" எனும் தொனிப் பொருளினையும், முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் 1818 இனையும் உள்ளடக்கிய வகையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டும் ஆரம்ப நிகழ்வினை இன்றைய தினம் (14.01.2026)மாவட்டச் செயலகம் வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கௌரவ ரவி செனவிரட்ன, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றி விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை (Sticker) முச்சக்கர வண்டிகளில் ஒட்டினார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 109 11 1012 12 13
"போதை இல்லாத நாடு மகிழ்ச்சியான நாளை" என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களது தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால அவர்களது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (2026.01.14) ஆந் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மதகுருமார்கள், வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு ரவி செனவிரத்ன, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றினார்கள். இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்பாடு நிகழ்ச்சித்திட்டன் கீழ் மாவட்ட செயற்பாட்டுக் குழுக்களை ஸ்தாபித்தல் கூட்டத்திற்கு வருகை தந்த மதத் தலைவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால, வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், இத் திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்றிட்டத்தை முன்னெடுக்க அனைவரும் ஒன்றுகூடி உள்ளதாகவும், முழு நாடுமே ஒன்றான திட்டமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு அதன் முதற்கட்ட செயற்றிட்டமாக மாவட்ட செயற்குழு தாபிக்கப்படுவதாகவும், பிரதேச, மாகாண மற்றும் தேசிய மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்ற வாக்கிற்கு இணங்க சிறுவர்களை இளைய சந்ததியினரையும் ஆரோக்கியமான நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான தேவை காணப்படுவதாகவும், அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவை செயற்படுத்த மாவட்ட மட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும், இத் திட்டத்தின் செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வு அதிமேதகு சனாதிபதி தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்து போதைப்பொருள் பாவனையை ஒழித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தை போதையிலிருந்து பாதுகாப்பதற்கான பாரிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும், ஊடகங்களும் அதற்கான பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், போதைப் பொருளை எவ்வாறாயினும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளதாகவும், இத் திட்டத்தை முன்னெடுப்பதிலுள்ள சவால்களை எதிர்கொண்டுவருவதாகவும், பாடசாலை மாணவர்களிடம் பரவியுள்ள போதைப் பொருளினையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். மேலும், போதைக்கு அடிமையாகும் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும், போதைப் பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர் எனவும், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்களிப்புடன் இந்த போதை ஒழிப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது எனவும், போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், இதற்கு அனைத்து அதிகாரிகளதும் பொது மக்களின் பங்களிப்பும் தேவை என்றும், இது தொடர்பான ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றும் தெரிவித்து, போதைக்கு எதிரான செயற்பாட்டிற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக்கொண்டார். இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இச் செயற்பாட்டிற்கான ஆலோசனை களையும், கோரிக்கைகளையும் பொதுமக்கள் பாதுகாப்பு கெளரவ அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு முன்வைத்தார்கள்.
இக் கூட்டத்தில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாண கடற்படைத் தளபதி, விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரி, பாதுகாப்பு படைகளின் அதிகாரி, பிரதிப் பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14
 
8 முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேசத்தில் நடைபெறவுள்ள முதியோருக்கான மருத்துவ முகாம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.01.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், ஒரு குழந்தை பிறந்தது முதல் முதியவராகும் வரை அரசாங்கம் பல உத்தியோகத்தர்களை நியமித்து சேவையாற்றி வருவதாகவும், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்ட நடமாடும் சேவைகளை மேற்கொண்டதன் மூலமாக, கிராமிய மக்களுக்கு இவ் நடமாடும் சேவை தேவைப்பாடுடையதாக காணப்படுவதாகவும், 60 வயதினை பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு சுகாதாரப் பிரிவானது சமுதாய அமைப்புகளின் பங்குபற்றலின் மூலம் பொருளாதார, உடல் மற்றும் உளவியல் ரீதியில் நலிவுற்ற முதியோர் சமுதாயத்தினருக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உயர் தரத்திலான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இவ் மருத்துவ முகாம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாககவும் தெரிவித்தார். மேலும், இவ் நடமாடும் சேவை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், முதலாம் நாள் படுக்கையில் உள்ள முதியவர்கள் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்த்து ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்குதல் எனவும், இரண்டாம் நாள் நிகழ்வாக பொது மண்டபத்தில் மருத்துவ முகாம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இவ் மருத்துவ முகாம் நெல்லியடி மத்திய கல்லூரியில் பெப்ரவரி 6 ,7 ஆம் திகதிகளில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், இவ் நடமாடும் சேவையில் தொற்றா நோய்கள், கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் மற்றும் எலும்பியல் மருத்துவம் போன்ற மருத்துவ பரிசோதனைகள் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் நடமாடும் சேவையில் பங்குபற்றவுள்ள மருத்துவர்கள் தாதியர்கள் உதவியாளர்கள் எண்ணிக்கைகள், மருந்தகத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள், வாகன ஒழுங்குகள் மற்றும் முதியோர் சங்கம் மற்றும் கிராமிய சங்கங்களின் பங்களிப்புகளை பெற்றுக் கொள்ளல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் போன்றன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.பிரிந்திகா, பிரதேச வைத்திய அதிகாரி திரு வி. கமலநாதன், தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி திரு. இளங்கோ ஞானியார், வைத்தியர் எஸ். குணநாதன் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிநிதி வைத்தியர் வி. சண்முகராஜா கரவெட்டி பிரதேச செயலாளர், கரவெட்டி கிராம அபிவிருத்தி சங்க தலைவர், பிரதேச மட்ட முதியோர் சங்க தலைவர், மாவட்ட, பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8