யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் கடந்த ஜூன் 29ஆம் திகதி யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நியமிக்கப்பட்டார். அவர் முன்னதாக கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற மேதகு ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்குப் பின்னர், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மேதகு பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் பொறுப்பேற்றார். புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பை முன்னிட்டு யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் சிறப்பு சமய நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், துறவிகள், மறைமாவட்டப் பிரதிநிதிகள், வட மாகாண கெளரவ ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பெருமளவான இறைமக்கள் கலந்துகொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14
யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் (25.08.2026) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார். இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார். இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கருணாநாதன் இளங்குமரன் மற்றும் வைத்தியர் கெளரவ எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 2 3 4 5 6 7 9 10 11 12 15 16 17

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் இன்று (22.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், கௌரவ பிரதமர் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு வருகை தந்து விருந்தினர் பதிவேட்டில் கையொப்பமிட்டார். இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் கௌரவ பிரதமர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

1 3 4 5 7

“வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்” காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (25.08.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் திரு. மகேஷ் கட்டுலந்தா ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பணிப்பாளர் சபை உறுப்பினர் திரு. T. யோகராஜா அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடற்றொழில் கெளரவ அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கெளரவ அமைச்சர், வட மாகாண கெளரவ ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் ஆகியோர் உரையாற்றினார்கள். இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 2,300 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,940 பேருக்கான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டவரின் பின்னாலும் ஒரு மனித உயிரும், ஒரு குடும்பத்தின் சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான வாழ்வும் உள்ளடங்கியுள்ளன. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்டகாலமாக சொல்லொணாத் துயரங்களையும் மனவேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். அதேவேளை, வழங்கப்படும் உதவித் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கைக்கான முழுமையான தீர்வாக அமையாது என்பதால், அவர்களின் நீண்டகாலத் தேவைகளையும் கருத்திற்கொண்டு அமைச்சு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களாக இருந்தாலும், கலந்துகொள்ள முடியாதவர்களாக இருந்தாலும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பமும் ஆழ்ந்த உணர்வுகளுடனும் சொல்லொணாத் துயரங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து, சட்டத்துறை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அவர்களுக்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிகழ்வு வெறுமனே ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வாக அமையாமல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் முக்கியமான நாளாக அமைய வேண்டும். மேலும், கௌரவ அமைச்சர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், மாவட்ட செயலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மருத்துவ முகாமில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கேற்று தங்களது மருத்துவத் தேவைகளில் சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் வாழ்வாதார மற்றும் நலத்தேவைகளில் கவனம் செலுத்துவதற்கான முக்கியமான முன்னெடுப்புகளாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், கௌரவ அமைச்சர் நேரடியாகக் கலந்துகொண்டிருப்பதும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைகின்றது எனவே, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக எமது தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேலும், வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு இன்றைய நாளில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் குடும்பங்களுக்கான பிரதிபலிப்பு அமர்வும், சிவில் சமூக அமைப்புகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் சிவில் சமூக அமைப்புகளுக்கான பிரதிபலிப்பு அமர்வும் இடம்பெற்றன. நிகழ்வின் நிறைவில் திருமதி. கிருஷாந்தி ரத்நாயக்க அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு முன்னதாக, இன்று காலை 11.00 மணிக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக மருத்துவ முகாம், குடும்ப அங்கத்தவர்களுக்கான தொழில்வழிகாட்டல்கள், உளவியல் மற்றும் போதை ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு உள்ளிட்ட நடமாடும் சேவைகள் இடம்பெற்றன. இச்சேவைகளில் சுமார் 352 குடும்பங்கள் பங்குபற்றியதுடன், 217 பேர் மருத்துவ முகாமில் பங்கேற்றினார்கள் என்பதுடன், அவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்படமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில், மதகுருமார்கள், நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. மதுமதி வசந்தகுமார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி. எழிலரசி அன்ரன் யோகநாயகம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவல யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் திரு. த. செல்வகுமார், யாழ்ப்பாண மாவட் ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு எஸ். கபிலன், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள், காணமல் ஆக்கப்பட்டோர்கள் உ றவுகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 37 39 40 41 42

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் இன்று(22.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 2.00மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன் மற்றும் கௌரவ சுகத் வசந்த டி சில்வா ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்வின் வரவேற்புரையை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நிகழ்த்தினார். இதன் போது, இந் நிகழ்விற்கு வருகை தந்துள்ள கௌரவ பிரதமர், கௌரவ கடற்றொழில் அமைச்சர், கௌரவ ஆளுநர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அன்புடன் வரவேற்றதுடன்,

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சனாதிபதி நிதியத்தினால் இத்தகைய சிறப்பான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதும், அதன் இரண்டாவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுவதும் இந் நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்களாகும். குறிப்பாக, நாட்டின் கௌரவ பிரதமர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது மேலும் சிறப்புக்குரிய விடயமாகும். உண்மையில், பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இவ்வுதவித் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், அதிமேதகு சனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் அவர்களின் கல்வி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பிலும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்தார். மேலும், இத் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான திரு. ஜி.ஜி.எஸ்.சி. ரோஷன்க கமகே விளக்கமளித்தார். தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவருமான கௌரவ சுகத் வசந்த டி சில்வா, அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோர் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் விசேட உரையாற்றினார். நிகழ்வில் கௌரவ பிரதமர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று, ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் நலன்களை விசாரித்ததுடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிதியுதவிகளையும் வழங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 68 பேரும், வவுனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 பேரும், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 76 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் மாணவி ஒருவரால் நன்றியுரை ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே.கனகேஸ்வரன், வடமாகாண கல்வி, கலாச்சார விவகாரங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் திரு.எம்.பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ.அட்புதராஜா, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச்.பி. சிறிவர்தன, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ்.கபிலன், ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், வடக்கு மாகாண மாவட்டங்களின் மேலதிக அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1 2 3 4 8 9 10 11 12 13 21 24 25 26 27 28 30 31 33 40 39 45 48