உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, இணைப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (02.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் இம் முறை 517 வாக்களிப்பு நிலையங்களில் 243 வட்டாரங்கள் உள்ளடக்கியவகையில் - 1 மாநகரசபையிலும், 3 நகர சபைகளிலும், 13 பிரதேச சபைகளிலும் மொத்ததமாக 17 உள்ளூர் அதிகார சபைகளிலும், 498,140 வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், 6320 அரச உத்தியோகத்தர்களும், 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
மேலும், தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வட்டார நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், நியமிக்கப்பட்டுள்ள்ளதாகவும், தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு, வட்டாரங்களுக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இணைத் தொடர்பை ஏற்படுத்தும் பொறுப்பும் இணைப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குரிய செயற்பாடாகவும் உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களுக்குரிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்து, நடைபெறவுள்ள தேர்தலில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக, பொறுப்பாக நியமிக்கப்பட்ட இணைப்பு தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. பொ. தயானந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.






