யாழ்ப்பாண மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.06.2025) மு.ப 11.00 மணிக்கு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீள செயற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது எனவும், அதற்கமைவாக வர்த்தகர்களுடன் இன்றைய கலந்துரையாடலை நடத்ததுவதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மத்திய பொருளாதார மத்திய நிலையத்தை மீள செயற்படுத்துவதற்கு வேண்டிய பூரண ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிப்பது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து விவசாயம் மற்றும் பழ வகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கும் ஏனைய இடங்களுக்கும் அனுப்பிவைத்தல் மற்றும் வெளி மாவட்ட உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்திற்கு எடுத்துவந்து சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய நிர்வாகக் குழுவும் மீளமைக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலுக்கு முன்பதாக பொருளாதார மத்திய நிலையத்தினை கெளரவ அமைச்சர் அவர்கள் கெளரவ ஆளுநர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், துறைசார் அதிகாரிகள் மற்றும் கடையினை வாடகைக்கு எடுத்த குத்தகைக்காரர்கள் சகிதம் பார்வையிட்டனர்.
இக் கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச செயலாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளா், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர்.






