சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்க அதிபர் வேண்டுகோள்"பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்" எனும் தொனிப் பொருளில் - உலக சுற்றாடல் தினத்தின் மாவட்ட நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். பி. தவகிருபா அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.07.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் திரு எஸ். சிவகரன் அவர்களும், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் அவர்களும், மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. கே. ஜே. பிரட்லீ அவர்களும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை யின் வட மாகாண பணிப்பாளர் திரு. ஆர். மகேஷ் யல்ரொட்டா அவர்களும், வேல்ட் விஷன் திட்ட முகாமையாளர் திரு. இ. பிரகாஷ் குமார் அவர்களும், வேல்ட் விஷன் தொழில்நுட்ப நிபுணர் திரு. நிமால் பிரேமதிலக அவர்களும் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் தமதுரையில், சுற்றாடல் பாதுகாப்புத் தினம் போன்ற தினங்களை கொண்டாடுவதன் நோக்கம் நாம் அதனை பின்பற்றுவதில்லை என்பதனை நினைவுபடுத்தவேயாகும் எனவும், நவீன உலகில் அபரிதமான பொலித்தீன் பாவனையானது எமது சுற்றுச்சூழலை பாதித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பாடசாலைகளில் மாணவர்களுக்கு திண்மக்கழிவு முறைமையினை பழக்கப்படுத்த வேண்டும் எனவும், விழிப்புணர்வு செயற்பாடுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்து, சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டியதுடன், சுற்றாடலைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் மரக்கன்றுகளும் அரசாங்க அதிபர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.மேலும், விழிப்புணர்வு நாடகம், மாணவர்களின் பேச்சு மற்றும் மாணவர்களின் விவாத நிகழ்வும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.







