யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், கெளரவ விருந்தினராக திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோசெப் யோன்சன் ராஜ்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் (திருமறை கலாமன்றம்), மங்கல இசை, கிராமியப் பாடல், இஸ்லாமிய நடனம், இசைச்சங்கமம், நாட்டிய அர்ப்பணம் நடனம் (கிழவன்காடு கலாமன்றம், யாழ்ப்பாணம்), வாத்திய பிருந்தா (கீதவாகினி இசைக் கல்லூரி, கொழும்புத்துறை), வட மோடி நாட்டுக்கூத்து (யாழ்ப்பாண பிரதேச மழலைக் கலைஞர்கள்) என்பன சிறப்பாக நடைபெற்றது.
மூத்த கலைஞர்களுக்கான " யாழ் ரத்தினா விருது" மற்றும் இளங்கலைஞர்களுக்கான "கலைத்திறன் விருது" என்பன அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டதுடன், "யாழ் பாடி" கலாசார மலர் வெளியீடும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.





