7தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் மாவட்ட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் திரு. ஏ. எஸ். நிசாந்தன் தலைமையில் இன்றைய தினம் (20.08.2025) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு மெருகூட்டுவதாக இந் நிகழ்வு அமைந்துள்ளதாகவும், இலங்கை துடுப்பாட்டச் சங்கம் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும், சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருவதாகவும், கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் இரண்டு தடவைகள் மண்டைதீவிற்கு விஜயம் செய்து ஆராய்ந்ததாகவும், மைதானத்திற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய வசதிகளுக்கான மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார். மேலும், இவ் சர்வதேச மைதானம் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் குறிப்பிட்டதுடன், எமது மாணவர்கள் சர்வதேசம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றிவருவதாகவும், அந்த வகையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், இலங்கை 19 வயது அணியில் பரியோவான் கல்லூரி மாணவன் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரி மாணவன் ஆகாஷ் இடம் பெற்றுவருவதும் பாராட்டத்தக்க விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எமது மாணவர்கள் அதன் மூலமும் தமது திறமைகளை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும் எனவும், மாவட்டச் செயலகத்தினால் விளையாட்டு மற்றும் கல்விக்கான நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான நிதியீட்டம் மேற்கொள்ளப்படும் எனவும், அதன் மூலம் எமது மாணவர்களுக்கான தேவைப்பாடுகளை நிதியத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கிய உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் அரசாங்க அதிபரால் தேவைக்கேற்ற நிதி அனுமதிக்கப்படும் எனவும், இதன் மூலம் உடனடித் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்ய வழி ஏற்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் எமது மாணவர்கள் முன்னேற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை துடுப்பாட்டச் சங்கம் மற்றும் விளையாட்டு த்துறை அமைச்சின் அனுசரணையுடன் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றமையுடன், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ சுனில் குமார கமகே அவர்கள் கலந்து சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 17 பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலைகளுக்கான பொறுப்பாளர், பாடசாலை அதிபர்கள், துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனப் பல பேர் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15