யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடங்களான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.08.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சர் கெளரவ பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண அவர்கள் அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்துவதனை சவாலாக ஏற்றுச் செயற்படுத்துமாறு கூறியதை குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், திட்டங்களை முழுமையாக இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க வினைத்திறனாக செயற்படுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், இலங்கை நிர்வாக மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டம் அதிக கவனம் ஈர்க்கப்படுவதாக கெளரவ அமைச்சர் தெரிவித்துள்ளதால் அனைவரும் ஒன்றிணைந்து குழுவாகச் செயற்பட அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டதுடன், இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம், வீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டு, உரிய காலத்தில் வினைத்திறனாக நிறைவேற்றி முடிக்க அரசாங்க அதிபரால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட , பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.







