9யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பஸ் தரிப்பு நிலையத்தை மீள இயக்குவதுதொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் அவர்களினதும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.ம. பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.10.2025) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபர் கூட்டத்திற்கு கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று தனது வரவேற்புரையினை தொடர்ந்து
இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்து நெடுந்தூர பேருந்து போக்குவரத்து தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தார்.அந்த கலந்துரையாடலில் மாவட்ட மட்டத்தில் அதற்கான முடிவினை எடுக்குமாறும் தெரிவித்திருந்தமையினை அடுத்து இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும் இந்த நெடுந்தூர பேருந்து போக்குவரத்து தொடர்பாக இவ் வருடம் கௌரவ ஆளுநர் தலைமையில் இரண்டு கூட்டங்கள் நடாத்தப்பட்டிருந்ததாகவும் அதற்கு முதலும் பல தடவைகள் இக் கூட்டம் நடைபெற்றதெனவும் இருந்தாலும் உடனடியான சாதகமான முடிவுகளை எட்ட முடியவில்லை எனவும் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கலந்துரையாடல் மூலம் சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வேண்டிக் கொண்டார் .
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாண நகரம் நெரிசல் மற்றும் நெருக்கடி கொண்டதாம மாறியுள்ளது. அவற்றை ஒழுங்கமைக்க சீரமைக்க வேண்டியதேவை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதற்கு அமைவாக நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவருமான க.இளங்குமரன், பொதுப்போக்குவரத்தினை மக்களின் தேவைக்காக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமென்றும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையம் தொடர்பில் தற்போது எதிர்கொள்ளப்படும் இடர்பாடுகள் தொடர்பாகவும் இதனை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடமாற்றம் செய்வதில் உள்ள சவால்கள் தொடர்பாக பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு இது தொடர்பான நேரடி கள விஜயம் மேற்கொண்டு மேலதிக தீர்மானங்கள் எட்டப்படும் என்றும் கலந்துரையாடப்பட்டது.மேலும் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர்.
இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், தனியார் போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், மாநகர சபை பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர், தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9