அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நாட்டின் தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களில் தேசிய சுனாமி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (05.11.2025) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள யா/வட இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வானது தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களான காலி, களுத்துறை,யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுனாமி அனர்த்தம் அல்லது தாக்கம் ஏற்பட்டால் எவ்வாறு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான ஒத்திகையாகவும், விழிப்புணர்வாகவும் இந் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைப் போல், இன்னும் ஒரு தடவை உயிர் இழப்புக்கள் ஏற்படாவண்ணம் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என்பதற்கான நிகழ்வாக இது அமைந்துள்ளதாகவும், அந்தவகையில் இன்றைய நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பருத்தித்துறை பிரதேச செயகத்தினர், செஞ்சிலுவைச் சங்கத்தினர், சுகாதார பணிமனையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு தமது நன்றியினையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்த ஒத்திகையின் போது வெளியிடப்படும் தகவல்கள், அறிவித்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெறும் ஒத்திகைச் செயற்பாடுகளாக இருந்ததோடுஇந்த ஒத்திகை நிகழ்வானது, உண்மையான சுனாமி எச்சரிக்கை நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பரிசோதித்து, தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக அமைந்திருந்தது. இவ் ஒத்திகை நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு T. N. சூரியராஜா, உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, முப்படைகளின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அனர்த்த முகாமைதுவ பிரிவு உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்,செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ,அரச்சார்பற்ற நிறுவனத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.






