பால்நிலைசார் வன்முறைக்கெதிரான செயற்பாட்டு குழுவின் மூன்றாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திரு மா.முரளி அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (13.11.2025 ) நண்பகல் 12 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பெண்களுக்கெதிரான பால்நிலைசார் வன்முறைகளால் பாதிப்புக்குள்ளானவர்களது பிரதேச செயலக ரீதியாக தரவுகள் அவற்றுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக ரீதியாக நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், மற்றும் SGBV செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக செயல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், 2026 ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளுக்கான ஒதுக்கீடுகள் பற்றாக்குறையாக கணப்படுமென கருதினால் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமென ஆலோசனை வழங்கினார். மேலும் போதைப்பொருள் பாவனை மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பாக கிராம மட்டங்களில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக தற்போதுள்ள அரசாங்கம் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அச் சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் பொலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார். இக் கலந்துரையாடலில் பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள்,பொலீஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






