சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் கோப்பாய் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது கோப்பாய் பிரதேச செயலாளர் திரு. ஈ. தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (11.12.2025) மு.ப 8.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகியது. இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய எண்ணக்கருவுக்கு அமைவாக, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான சேவையினை ஒரே இடத்திலே வழங்குவதனை நோக்காக கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்குரிய சரியான சேவைகளை அல்லது சரியான ஆற்றுப்படுத்தலை வழங்கக்கூடிய ஒரு உயரிய சந்தர்ப்பமாக இவ் நடமாடும் சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான முழுமையான விவரங்களை பெற்று, உறுதிப்படுத்தி, சமர்ப்பிக்கின்ற பொறுப்பு கிராம மட்ட அலுவலர்களைச் சார்ந்திருக்கின்றது எனவும், கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பொறுப்பு அல்லது வகிபாகம் என்பது மிக பெரியது எனவும் குறிப்பாக, கிராம அலுவலர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்ந்தனவாகவே வெள்ள நிவாரணம் மற்றும் கொடுப்பனவு செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனவும் தெரிவித்தார்.மேலும், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மக்களை தேடிச் சென்று சந்தித்து, அவர்களுக்கும் சேவையாற்ற வேண்டிய கடமை உடையவர்களாக இருக்கிறார்கள் எனவும், பல உத்தியோகத்தர்கள் இக் கடமைகளைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர் எனவும், ஒரு சிலர் அவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்காதபோது, அந்த செயற்பாடுகள் ஒட்டுமொத்த பிரதேசத்தையோ அல்லது அல்லது மாவட்டத்தையோ பிரதிபலிப்பதாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தார். இப் பிரதேசத்தில் பல்வேறுபட்ட தாழ் நிலப்பரப்புகள் உள்ளன எனவும், பிரதேசத்தினுடைய பல பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கு உட்படக்கூடிய அல்லது வெள்ள ஆபத்துக்குரிய பிரதேசங்களாக இருக்கின்றன என்பதால், அவ் மக்களுக்குரிய கொடுப்பனவுகளை உரிய முறையிலே பெற்றுக்கொடுப்பதற்கு - கிராம மட்ட உத்தியோகத்தர்களின் உறுதிப்படுத்தல்கள் சரியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட தகுதியான ஒருவருக்கு அரசாங்க கொடுப்பனவு கிடைக்காமல் இருப்பதும், அதே வேளையிலே, தகுதியற்ற ஒருவருக்கு கிடைப்பதும் சமூகத்திலே அல்லது அந்த பிரதேசத்திலே பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும், அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்தின் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் கிடைப்பதற்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் அற்ற வகையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், நிவாரண மற்றும் கொடுப்பனவு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இத்தகைய நடமாடும் சேவைகள் மூலம் தேசிய ரீதியிலே கொழும்புக்கு சென்று பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை இங்கே பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஏற்பாடு இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது எனவும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவைக்குரிய தேசிய அடையாள அட்டைகள் தற்போது அந்த பிரதேச மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன எனவும், இந்த பிரதேசத்தினுடைய, இந்த மாவட்டத்தினுடைய மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் தெரிவித்ததுடன், இன்றைய இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பிரதேச செயலாளருக்கும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் தம்முடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பானசேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ)இ சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்,காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை ( Cataract ) இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், இந் நிகழ்வில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உதவி, காணி பத்திரம், நீண்ட கால படுக்கையில் உள்ளவர்களுக்கான மெத்தை, கட்டில் மற்றும் நுளம்பு வலை என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த தம்பதிகளுக்கு திருமண பதிவும் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருகே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதேச சபையின் செயலாளர் வடக்கு மாகாண சபையினுடைய ஏனைய பதவி நிலை உத்தியோகதர்கள், கிராம அலுவலர்கள், மற்றும் பிரதேச செயலகத்தினுடைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







