மாற்றுத்திறன் நபர்களுக்கான மாவட்டம் மட்ட வழிகாட்டல் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.02.2026) காலை 09:30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையுரையாற்றுகையில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுக் கொண்டதுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்று ஆற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் காணப்படுவதாக பதிவில் இருப்பதாகவும், அவர்களுக்கான தேவைகள் மற்றும் வசதிகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும், பிரதேச மட்டத்தில் இது தொடர்பாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், பிரதேச மட்டத்தில் நடாத்தப்படும் வழிகாட்டல் கூட்டங்களில் இனங்காணப்படும் சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மாவட்ட மட்டத்தில் துறை சார் அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பித்து அதற்கான தீர்வுகள் வழங்கப்படுவதற்காக இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறன் நபர்களுக்கான வாக்குரிமை தொடர்பாகவும் விழிப்புணர்வு நடைபெற இருப்பதாகவும் இவர்கள் உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் போது அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் காணப்படுவதாகவும், மாற்று ஆற்றல் உடையவர்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியமாக காணப்படுவதாகவும், அதன் வகிபாகம் சரியாக மேற்கொள்ளப்படும் போது அதன் செயற்பாடுகள் சிறப்பாக அமையும் எனவும், உரிமைகளை பாதுகாக்க அனைவரும் முன் நின்று செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மாற்றுத்திறன் நபர்களுக்கான மாவட்ட மட்ட வழிகாட்டல் குழுவின் கட்டமைப்புகள், மாற்றுத்திறன் நபர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதில் "PAVE யாழ்ப்பாண இளைஞர்கள் அமைப்பு" முன்னெடுத்த செயற்பாடுகள் மற்றும் தந்திரோபாய பரிந்துரைகள், மாற்றுத்திறன் நபர்களின் வாக்குரிமையை பாதுகாப்பதில் தேர்தல் ஆணைக்குழுவின் வகிபாகம், பிரதேச மட்டத்தில் மாற்றுத்திறன் நபர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் திரு. இ.சசீலன் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் ,வடமாகண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் திருமதி ஹி.நித்தியா, இலங்கை தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் நிகழ்ச்சி திட்ட அலுவலர் செல்வி அனோஜிதா சிவாஸ்கரன், மற்றும் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தி.உமாசங்கர் மற்றும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ச சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. சு.வரதபாஸ்கரன் மாவட்ட உதவி கல்வி பணிப்பாளர்கள் மாவட்ட பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாற்றுத்திறன் நபர்களுக்கான சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகள் இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6