யாழ்ப்பாணம் தபால் திணைக்களத்திற்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ். மாவட்ட செயலக கணக்காளர் திரு. அழகராஜா நிர்மல் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.04.2026) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. திரு. அ. நிர்மல் அவர்கள், 2014 ஆம் ஆண்டு கணக்காளர் சேவையில் இணைந்துடன் அதன் தொடர்ச்சியாக 04.09.2019 ஆம் திகதி தொடக்கம் 17.04.2026 வரை யாழ். மாவட்டச் செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டதுடன், தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது. இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டச் செயலக நிதி செயற்பாடுகளில் மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெற்றவராக வினைத்திறனாக செயற்பட்டவர் என்பதுடன், சகல உத்தியோகத்தர்களுடன் சகஜமாக பழகும் உத்தியோகத்தராகவும் கணக்காளர் திரு. நிர்மல் அவர்கள் விளங்கினார்.
மேலும், இதற்கு மேலதிகமாக மாவட்ட செயலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் குறிப்பாக நலன்புரி சங்கத்தின் தலைவராக இருந்து சிறப்பாக செயற்பட்டவர் எனவும் குறிப்பிட்டார். மேலும், மாவட்டச் செயலகத்தின் அவசர அவசிய செயற்பாடுகளுக்கான நிதி ஏற்பாடுகள் விடயத்தில் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிவந்தவர் என்பதுடன், நிதியாண்டிற்குரிய கொடுப்பனவுகளை சரியான உறுதிப்பாடுகளுடன் காலதாமதமின்றி வழங்கி மாவட்டச் செயலகத்தின் விரைவான செயற்பாடுகளுக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கியவர் எனத் தெரிவித்தார். மேலும், வெலிஓயா, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியதுடன், மாவட்டச் செயலகத்தில் 07 ஆண்டுகள் சிறப்பாக கடமையாற்றியவர் எனவும், தாம் கடமையாற்றிய திணைக்களங்களில் நட்பு ரீதியாக எல்லோரோடும் பழகி தமது செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்தார் என பாராட்டு வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், விரைவில் கணக்காளர் சேவையின் தரம் ஒன்றிற்கு பதவியுயர்வு பெறவுள்ளதாகவும் இவரின் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. எம். வித்தியானந்தநேசன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சமுர்த்தி கணக்காளர் திரு. இ. முருகதாஸ், பிரதி பதிவாளர் நாயகம் திரு. பிரபாகர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ். சிவகுமாரன், மொழிபெயர்ப்பாளர் திருமதி பி. நித்தியகலா, நிர்வாக உத்தியோகத்தர் திரு. கி. பொ. தனபால உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. கணக்காளர் திரு. அ. நிர்மல் அவர்களின் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய காலப்பகுதிக்கான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் கணக்காளர் திரு. அ. நிர்மல் அவர்கள் பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதியாக கணக்காளர் தமது ஏற்புரையில், மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றுவது ஒரு பொன்னான அரிய வாய்ப்பு எனவும், மாவட்டச் செயலகம் தமது உயர்விற்கும், அனுபவத்திற்கும் பல நல்ல தொடர்புகளுக்கும் வழிவகுத்தது எனவும், எமது அரசாங்கம் அதிபர் அவர்கள் உத்தியோகத்தர்களை சிறப்பாக ஒன்றிணைத்து நல்ல பொறிமுறையினை உருவாக்கி செயற்படுகின்றார் எனவும், நிகழ்வுகளை நடாத்துவதில் அரசாங்க அதிபர் தனிக் கலையினை பெற்றுள்ளார் எனவும் குறிப்பிட்டதுடன், அண்மையில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் பங்குபற்றிய "முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு" அரசாங்க அதிபரால் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டதாகவும் - தாம் அரசாங்க அதிபருடன் பணியாற்றியதன் மூலம் சிறப்பான வழிகாட்டுதல்களையும், அனுபவங்களையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் நடவடிக்கைகள், வெள்ள, அனர்த்த நிலைமைகள்நலன்புரிக் கழகத்தின் செயற்பாடுகள் போன்றவற்றில் தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்கு பக்கபலமாகவிருந்து வழிகாட்டிய அரசாங்க அதிபர் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், இன்றைய நிகழ்விற்கு வாழ்த்துரைகள் வழங்கிய உத்தியோகத்தர்களுக்கும் நிகழ்வில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினையும் கணக்காளர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






