அரச சேவையிலிருந்து இளைப்பாறும் விவசாயப் பணிப்பாளர் திருமதி. பாலகெளரி பவலீஸ்வரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க . சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.04.2026) பி.ப 2.30 மணிக்கு யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது திருமதி. பாலகெளரி பவலீஸ்வரன் அவர்கள், 1996ஆம் ஆண்டு இலங்கை விவசாய சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தராக இணைந்ததுடன் அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளராக 2024.11.20 லிருந்து 2025.08.31 வரை மாவட்ட பதில் விவசாய பணிப்பாளராகவும், 2025.08.01 லிருந்து 2026.04.28 ஆம் திகதிவரை மாவட்ட விவசாய பணிப்பாளராகவும் கடமையாற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டதுடன், தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது.
இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டச் செயலக விவசாயத்துறை செயற்பாடுகளை அடையாளம் காண மிகவும் சிறப்பாக செயற்பட்டவர் என்பதுடன், சகல உத்தியோகத்தர்களுடன் சகஜமாகவும் அமைதியாகவும் பழகும் உத்தியோகத்தராகவும் விளங்கினார். மேலும், முதலில் மாவட்ட செயலத்தில் பதில்கடமை விவசாய பணிப்பாளராகவும் பின்னர் நிரந்தர விவசாய பணிப்பாளராகவும் பணியாற்றியதுடன் அமைதியாகவும் துறை சார்ந்த விடயங்களை துணிச்சலாக கையாளும் திறமை கொண்டவர் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாய குழு கூட்டத்திலே விவசாயிகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு துல்லியமாக விடை கூறக்கூடியவராகவும் அதற்கான அறிவு கொண்டவராகவும் செயற்பட்டதுடன், பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான செயற்பாடுகளை ஒத்துழைப்பு வழங்கியதுடன் அவருடைய விவசாயத் துறை உத்தியோகத்தர்களும் பக்க துணையாக இருந்து ஒருங்கிணைந்து செயற்பட்டதாகவும், விவசாயம் சார்ந்த விடயங்களை வெளியிடுவதற்கு சிறப்பாக கடமையாற்றியதாகவும் அவருடைய ஓய்வு நிலை சிறப்பாக அமைய, வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. எம். வித்தியானந்தநேசன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சமுர்த்தி பனிப்பாளர் திரு. போ ஸ்ரீ வர்ணன், சமுர்த்தி கணக்காளர் திரு. இ. முருகதாஸ், பிரதி பதிவாளர் நாயகம் திரு. பிரபாகர், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் திருமதி.பாலகெளரி பவலீஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதியாக விவசாய பணிப்பாளர் திருமதி.பாலகெளரி பவலீஸ்வரன் தமது ஏற்புரையில், இன்றைய பிரிவு உபசார விழாவிற்கு கௌரவித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் முதலில் கிளிநொச்சியில் கடுமையான போர்ச்சூழலில் மூன்று வருடங்கள் கடமையாற்றியதாகவும், பின்னர் திருநெல்வேலி விவசாய திணைக்களத்தில் பயிர் காப்பாளராக மாகாண மட்டத்திலே தனித்து நின்று முழு விவசாயிகளின் பிரச்சனைகளை கையாண்ட ஒருவராகவும் தான் செயற்பட்டதாகவும், மாவட்டச் செயலகத்திலே 17 மாதங்கள் மாவட்ட விவசாய பணிப்பாளராகவும் கடமையாக்கியதாகவும் தெரிவித்தார். மேலும் சகல வழிகளிலும் மாவட்ட பணிப்பாளராக கடமையாற்ற ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்க அதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் விவசாயத்துறை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அரசாங்க அதிபரின் சிறந்த தலைமையின் கீழ் மக்களுக்கு வினைத்திறனாக சேவையை ஆற்றி வருவதாகவும், அச் சேவை மென் மேலும் மக்களுக்கு சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், இன்றைய நிகழ்விற்கு வாழ்த்துரைகள் வழங்கிய உத்தியோகத்தர்களுக்கும் நிகழ்வில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினையும் விவசாய பணிப்பாளர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 78 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 24 25 26 27 28 29 30 31 32 33 34