யாழ். மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(19.05.2026) மு.ப 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச மற்றும் பாரம்பரியமாக வைத்தியம் செய்பவர்களாக பதிவு செய்யப்பட்ட 90 சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் கடமையாற்றுவதாகவும், நெடுந்தீவில் நிரந்தரமாக வைத்தியர் இல்லை எனவும், மருதங்கேணியில் ஒருவரும், காரைநகரில் ஒருவரும், அதேவேளை நல்லூர் பிரதேச செயலக பிரிவில் அதிகபட்சமாக அரச பாரம்பரிய வைத்தியர்களாக 27 வைத்தியர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சித்த ஆயுர்வேத வைத்திய முறைகள் மீதான உலகளாவிய நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் நாட்டிற்கு வருகை தரும் நிலை அதிகரித்துள்ளது எனவும், மேலும் சங்கீதம், பரதநாட்டியம் உட்பட்ட கலைகளில் நாம் கொடிகட்டிப் பறந்ததாகவும், தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் இக் கலைகளில் ஆர்வம் காட்டி கலைகளை வளர்த்துவருவதாகவும், புலம்பெயர்ந்த மக்கள் தமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் கலைகளில் காட்டிவரும் அக்கறை மகிழ்ச்சியளிப்பதாகவும்தெரிவித்தார். மேலும், சித்த ஆயுர்வேதம் நீண்டகாலத்தில் நோய்களை குணப்படுத்தும் என்றாலும், உள்ளார்ந்த ரீதியாக ஆர்வத்தோடு மக்கள் மருத்துவ சேவையினை நாடுவதாகவும் தெரிவித்ததுடன், 12 பிரதேச செயலகங்களில் பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படுவது மகிழ்ச்சியான விடயம் எனவும், யாப்பில் சங்கத்தின் நோக்கம், கடமைகள் விபரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபை” அமைப்பதன் நோக்கமானது நமது பாரம்பரிய மருத்துவ மரபையும், மக்களின் ஆரோக்கிய பாதுகாப்பையும், இயற்கை சார்ந்த வாழ்வியலையும் காக்கும் ஒரு பொறுப்புணர்வான சமூக முயற்சியாக காணப்படுகின்றது. மேலும், சுதேச மருத்துவம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனைக் காக்கும் பாரம்பரிய அறிவுக் களஞ்சியமாக இருக்கின்றது. இயற்கை மூலிகைகள், உணவு ஒழுங்கு, உடல் சமநிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னிறுத்தும் இந்த மருத்துவ முறை, இன்று உலகளவில் மீண்டும் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட மட்டத்தில் ஒரு பாதுகாப்புச் சபையை அமைப்பது மூலம் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.
1.ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாத்தல்.
2.தரமான சிகிச்சை சேவைகளை ஊக்குவித்தல்.
3.பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல்.
4.போலியான மற்றும் தரமற்ற மருந்துகள் குறித்து கண்காணித்தல்.
5.மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற முக்கிய பணிகளை ஒருங்கிணைத்தல்.
6.இந்த சபை அரச உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கிடையே ஒரு பாலமாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவும்.
இறுதியாக மாவட்டச் சபையின் தலைவராக கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் பா.பிரபாகரன் அவர்களும், செயலாளராக டாக்டர் இ. தில்லைவாசன் அவர்களும், பொருளாளராக டாக்டர் இ.கஜன் அவர்களும், உப தலைவராக டாக்டர் T.சபேசன் அவர்களும் மற்றும் 12 நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் K.நடேசராஜன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, சுதேச மருத்துவ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.செ.சுகுணன், பிரதேச செயலாளர்கள், பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை வைத்தியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.






