ஒவ்வொரு வருடமும் மே மாதம் 23ஆம் திகதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை இவ் இளைஞர் தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாடாளவியரீதியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும்(Youth Club) இணைந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இந்நிலையில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், "முழு நாடும் ஒன்றாக" என்னும் தொனிப் பொருளின் கீழ், 'Say No' என்ற எண்ணக்கருவுடன் விழிப்புணர்வு நடைபவனி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(23.05.2026) நடைபெற்றது. யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி, வைத்தியசாலை வீதி ஊடாக பயணித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. விழிப்புணர்வு நடைபவனிக்கு முன்னதாக, போதைப் பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் முகமாக, போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகம், முனியப்பர் ஆலய வளாகத்தில் அரங்கேற்றப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியில், எமது மாவட்டத்தில் இருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்போம், இளைஞர், யுவதிகள் அனைவரும் ஒன்றுதிரள்வோம், எமது இளம் சந்ததியினரை போதையில் இருந்து பாதுகாப்போம், அழகான தேசத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டனர். நாட்டின் சகல பாகங்களிலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், வீதி நாடகங்கள், பேனர்கள் மற்றும் பல வினைத்திறன் மிக்க அம்சங்களுடன் இளைஞர், யுவதிகள் நடைபவணியாகவும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனப் பேரணிகளாகவும் சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க்கும் வகையில் விழிப்புணர்வு நடைபவனி மற்றும் பேரணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியில்,கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் வடக்கு மாகாண இணைப்பாளரும், யாழ். மாநகர சபையின் உறுப்பினருமாகிய கெளரவ சுந்தரமூர்த்தி கபிலன், யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திரு. தங்கமுத்து சத்தியமூர்த்தி, , யாழ்ப்பாண பிரதேச செயலாளர், இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10