சமூக சக்தி - பன்முக வறுமை ஒழிப்புத் திட்டம் சனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலுடன், கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பன்முக வறுமை ஒழிப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (2026.06.02) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அந்தவகையில் "பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் (2026.06.02) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களினால் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் 02.00 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், தெரிவு செய்யப்பட்ட "வருமானம் குறைந்த 10 குடும்பங்களை இணைத்து காளான் வளர்ப்பு கருத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது .
இந் நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றபட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கலவிளக்கேற்றபட்டு இறைவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன், சமூக நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் குறித்த சிறப்புரையினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் நிகழ்த்தினார். மேலும், குறித்த நிகழ்ச்சித் திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகள் தெரிவிற்கான சான்றிதழ்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டபட்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேவேளை யாழ் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளிலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுவருகின்றதுடன், இவ் பன்முக வறுமை ஒழிப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டுக்கு ரூபா 651.96 மில்லியன் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி, மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ.சுரேந்திரநாதன், மானிப்பாய் கிழக்கு பிரஜா சக்தி குழுவின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான திரு.ஞானரூபன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






