ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் வாசனை திரவியங்கள் தொடர்பான செயற்பாட்டு தொழில்நுட்பம் (spice processing technology) தொடர்பான பயிற்சி நெறி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(10.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், ஒவ்வொருவரும் இந்த நிலையின் ஆரம்ப கட்டத்தை பின்னோக்கி பார்ப்பீர்களாக இருந்தால் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்துள்ளீர்கள் என்பதை உங்களால் உணர முடியும் என்றும், இவ்வாறான தொழில் சுயமுயற்சியாளர்களுக்கு அரசாங்க அதிபர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்த துறையில் தொழிலுக்குரிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது எனவும் உற்பத்தி செயற்பாட்டின் போது பொருள்களுக்கான பொதி இடல் தொடர்பிலும் பல்வேறு நுட்பங்களை பயிற்சி மற்றும் அனுபவங்களூடாக பெற்றுள்ளதாகவும், இவ்வாறு பொதியிடல் மற்றும் பொருளின் தரம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொருளின் தரம் சரியாக இருக்குமே ஆனால் பொருளின் கேள்வியை அதிகரிக்க முடியும் என்றும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொண்டால் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு உற்பத்தி தொடர்பான இலகுவான தொழில்நுட்பங்களை கண்டறிந்து அந்த தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப உற்பத்திகளை மேற்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தொழில்துறையில் தொடர்ந்து நிலைத்திருந்து வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதியின் கருப்பொருளாக காணப்படும் வாசனை திரவியங்களே இன்று பேசுபொருளாக காணப்படுகிற நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பாரம்பரியமாக காணப்படும் அவ் வாசனை திரவியங்களை மீள கட்டியேழுப்புவதற்கான பயிற்சி நெறியாக இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை எவ்வாறு கட்டி எழுப்பலாம்,அதன் முக்கியத்துவத்தை எவ்வாறு மீள ஒழுங்கு செய்யலாம் வாசனை திரவியங்களை தெரிவு செய்தல் மற்றும் பதப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடக்கு மாகாண உதவி பணிப்பாளரும் மாகாண பிராந்தி இணைப்பாளருமான திரு க.கனோஜன், வளவாளராக தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் பொறுப்பதிகாரி நா.சோமநாத் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிறு தொழில், நடுத்தர முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 5 6 7 8