யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கவிதை பயிலரங்கம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2026) காலை 9.00மணிக்கு மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், எமது பண்பாட்டுக் கலைகளைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில் மாவட்டச் செயலகம் தொடர்ச்சியாக கலைத்துறை சார்ந்த மூத்த கலைஞர்களின் பங்களிப்புடன் இளம் கலைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பயிலரங்குகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத் தீர்மானம் கலாசார உத்தியோகத்தர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அரச பணிகளில் ஈடுபட்டிருக்கும் நாம், கலைத்துறை வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே இப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும், கவிஞர் இ.த. ஜெயசீலன் அவர்களும் வளவாளர்களாகப் பங்கேற்றமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். அதேவேளை, கலைத்துறையில் ஆர்வமுள்ள மூத்தோர், இளைஞர்கள், யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டிருப்பது இந் நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இவ்வாறான பயிலரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பை அனைவரிடமும் அரசாங்க அதிபர் வேண்டிக் கொண்டார். இப் பயிலரங்கை சிறப்பாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கிய வன்னி மண் நற்பணி மன்றத்திற்கும், நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
கவிஞர்களையும் படைப்பாக்கத் திறன்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இக் கவிதைப் பயிலரங்கில் இளம் கலைஞர்கள், கவிதை ஆர்வலர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 60 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப் பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக கவிஞர் சோ. பத்மநாதன் மற்றும் கவிஞர் இ.த. ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்று, மரபுக் கவிதை மற்றும் நவீனக் கவிதை தொடர்பான தெளிவான விளக்கங்களுடன் பயிற்சிகளை வழங்கினர். மேலும், கவிதை எழுதும் நுட்பங்கள், கவிதை வாசிக்கும் முறைகள், படைப்பாக்கத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல்களும் செயன்முறைப் பயிற்சிகளும் இடம்பெற்றன. பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் வளவாளர்கள் பயிலரங்கை உயிரோட்டமிக்க வகையில் முன்னெடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கி. மாலினி அனுசரணை வழங்கிய வன்னி மண் நற்பணி மன்றத்தின் உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8