இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் "யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம், பண்பாடு, ஆளுமை" என்ற நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் (26.07.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் தலைமையில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி அவர்கள் பங்கேற்றார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், இந் நூல் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல், இலக்கியம், பண்பாடு மற்றும் ஆளுமை ஆகியவற்றை மட்டுமன்றி, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தின் ஒப்பற்ற ஆளுமையாக உலகிற்கு அடையாளப்படுத்தும் படைப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தின் ஆளுமைக்குரிய உயரிய பண்புகளைத் தன்னகத்தே கொண்டவராக பேராசிரியர் சிவலிங்கராஜா திகழ்வதாகவும், தனது எண்பதாவது வயதிலும் இத்தகைய அரிய நூலை வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்க சாதனையெனவும் தெரிவித்த அவர், பேராசிரியர் நூறாண்டுகள் நலமுடன் வாழ்ந்து தமிழுக்கும் சமூகத்திற்கும் மேலும் பல அரிய நூல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தாம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்திலிருந்தே பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களை சிறந்த ஆசிரியராகவும், தமிழ் உணர்வாளராகவும், மாணவர்களை அன்போடு வழிநடாத்தும் தந்தைபோன்ற ஆளுமையாகவும் அறிந்திருந்ததாக தெரிவித்தார். பின்னர் நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கின்ற தற்போதைய காலங்களிலும் மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேராசிரியர் வழங்கிய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் பெரும் துணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற தமிழ்மொழித் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பேராசிரியருடன் கலந்துரையாடியபோது, தமிழ்மொழியின் ஆழமும் அதன் சமூகப் பெறுமதியும் குறித்து அவர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்கள் நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரிய குறைபாடுகளில் ஒன்று வரலாறு, மொழி மற்றும் இன அடையாளம் சார்ந்த ஆவணங்களை முறையாகப் பதிவு செய்யாமையாகும் என்றும், அந்தக் குறையைப் போக்கும் பணியில் பேராசிரியர் சிவலிங்கராஜா போன்ற அறிஞர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். "யாழ்ப்பாணத்து வாழ்வியல் – இலக்கியம், பண்பாடு, ஆளுமை" நூல், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான இலக்கிய மரபு, பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஆளுமைகளை ஆவணப்படுத்தும் அரிய பொக்கிஷமாகும் என்றும், இது ஒரு நூலாக மட்டுமன்றி ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு மரபை பாதுகாக்கும் வரலாற்று ஆவணமாகவும் திகழும் என்றும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் தமிழின் வளர்ச்சிக்காக இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும், எளிமை, மனிதநேயம், பணிவு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட சிறந்த அறிஞராக அனைவரின் மதிப்பையும் பெற்றிருப்பதாகவும் அரசாங்க அதிபர் பாராட்டினார். மேலும் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் நீண்ட ஆயுளுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளை ஆற்றி, வருங்கால சந்ததிகளுக்கும் தமிழின் பெருமையை எடுத்துச் செல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வரவேற்புரையைக் கலாநிதி சி.பத்மராஜா நிகழ்த்தினார். இலங்கைத் தமிழியற் கழகத்தின் தலைவர் கலாநிதி க.இரகுபரன் நூல் வெளியீட்டுரையை வழங்கினார். மேலும் நூலின் முதற் பிரதியை இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எஸ்.பரமராஜா பெற்றுக்கொண்டார். வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் மதிப்பீட்டுரையையும், தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வாழ்த்துரையையும் வழங்கினார். இந் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






