யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக்கழக பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நலன்புரிக் கழகத் தலைவரும் மாவட்ட புள்ளி விபரத்திணைக்ககள பிரதிப்பணிப்பாளருமான திரு. எம். வித்தியானந்தனேசன் தலைமையில் இன்றையதினம் மு. ப. 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கடந்தகால பொதுக்கூட்ட அறிக்கையும், செயற்பாட்டு அறிக்கையும் நலன்புரிக்கழக செயலாளர் திருமதி. கி. தயாபரி அவர்களால் வாசிக்கப்பட்டு, அறிக்கைகள் பொதுச் சபையினால் ஏற்கப்பட்டது. கடந்தகால நலன்புரிக்கழக பொருளாளர் அறிக்கை பொருளாளர் திரு. உ. சுமன் அவர்களால் வாசிக்கப்பட்டு, அறிக்கைய பொதுச் சபையினால் ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போஷகர் உரை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் போஷகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 2025 ஜூன் 18ஆம் திகதி முதல் இன்றுவரை மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

மாவட்டச் செயலக ஊழியர்களின் நலன்புரியை முன்னிறுத்திச் செயற்படும் நலன்புரிச் சங்கமானது, அரச அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொறுப்புமிக்க அமைப்பு என்ற வகையில், மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாவட்ட செயலகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் வரலாற்றை நினைவுகூரும் வகையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் குறித்த நினைவு முத்திரை வெளியிடப்பட்டமை அனைவருக்கும் பெருமைக்குரிய விடயமாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்தப் பணி உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை மிகச் சிறப்பாக முன்னெடுத்த 2025–2026ஆம் ஆண்டுக்கான நலன்புரிச் சங்க செயற்குழுவினருக்கு, சங்கத்தின் போஷகர் என்ற வகையில் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார். மேலும், இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மருதங்கேணியில் சிறப்பாக நடத்தப்பட்டமைக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன், ஆடிப்பிறப்பு, இரத்ததான நிகழ்வு, வெசாக், நவராத்திரி, ஒளிவிழா உள்ளிட்ட வழமையான நிகழ்வுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், அடுத்த ஆண்டில் இப்தார் நிகழ்வையும் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

25 வருட கால சேவையை நிறைவு செய்த ஊழியர்களையும், பரீட்சைகளில் சிறப்பாகச் சித்தியடைந்த ஊழியர்களின் பிள்ளைகளையும், தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த உத்தியோகத்த ர்களையும் கௌரவிக்கும் பணியையும் தொடர்ச்சியாக நலன்புரிச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். உற்பத்தித்திறன் பயிற்சியின் ஊடாக ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பும் பணிப்பொறுப்பும் வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு காலகட்டத்தில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் உத்தியோகத்தர்களின் வருகை 38 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், தற்போது அது 92 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை அனைவரினதும் கூட்டு உழைப்பின் பெறுபேறாகும் எனத் தெரிவித்தார். இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து பேணுவதுடன், பொதுமக்களுக்கு சிறந்ததும் வினைத்திறனானதுமான சேவையை வழங்கும் நோக்கில் அனைவரும் மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இறுதியாக, கடந்த செயற்குழுவினரின் அர்ப்பணிப்பான பணிகளுக்கு நன்றியைத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிதாகப் பொறுப்பேற்கும் செயற்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். புதிய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் :

தலைவர்

திரு. வெ.றதீஸ் (கணக்காளர்)

செயலாளர்

திரு. க.கருணாகரன் ( மாவட்ட இணைப்பாளர், மனித வள அபிவிருத்தி )

உப தலைவர்

திரு. பா. ஜெயகரன் (மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி)

உப செயலாளர்

திரு. ரி.டி.ஜி.பிராங்கிளின் (இணைப்பாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு )

பொருளாளர்

திரு. இ. முருகதாஸ் (சமுர்த்திக் கணக்காளர்)

உதவிப் பொருளாளர் திருமதி.ரஜனி ( அபிவிருத்தி உத்தியோகத்தர், கணக்குகிளை)

நலன்புரிச் சேவைகள் செயலாளர்

திரு. தி. கணேஸ்வரன் (முகாமைத்துவ உதவியாளர் - திட்டமிடல்கிளை )

விளையாட்டுச் செயலாளர்

திரு. எஸ். பிரசாத்

(மாவட்ட இணைப்பாளர், உற்பத்தி திறன் பிரிவு)

கணக்காய்வாளர்

திரு. எஸ். ரமேஸ்

(பிரதம உள்ளக கணக்காய்வாளர்)

உறுப்பினர்களாக : திருமதி. துளசி, திரு. சஞ்சுதன், திரு. கோகுலன், திருமதி.

சுலோசனா,திரு. சுரேஷ்குமார், திரு. அருள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இப் பொதுக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

1 2 3 4 5 6  7 8 9 11 12 13 14 15 16 17 19