மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிவரும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தினை (Safe House) மேலும் வினைத்திறனுடன் இயக்குவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2026) வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிவரும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தினை தற்போதைய நிலை, அதன் சேவைகளைத் தொடர்ந்தும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள், நிர்வாக மற்றும் வளத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் இடம்பெற்றன. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையுடன் மாவட்டச் செயலக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் சேவையின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அதன் சேவைகளை இடைநிறுத்துவதற்குப் பதிலாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, மாவட்ட நிர்வாகம் மற்றும் JSAC ஆகிய மூன்று தரப்பினரும் ஒருங்கிணைந்து காப்பகத்தின் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, நிர்வாகம், நிதி முகாமைத்துவம் மற்றும் பணியாளர் தொடர்பான பொறுப்புகளைத் தெளிவாக வரையறுத்து, வெளிப்படையானதும் சட்டபூர்வமானதுமான நடைமுறைகளை உருவாக்குவதன் மூலம் இல்லத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, தகுதியுடைய பெண்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பான சூழலையும், தேவையான பராமரிப்பு மற்றும் நலன்புரிச் சேவைகளையும் வழங்குவதற்கு அரச நிர்வாகத்திற்கும் JSAC நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். மேலும், பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் சேவைகளை மேம்படுத்துவதுடன், தேவையுடைய பெண்களுக்கு பாதுகாப்பான சூழலில் உரிய பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆதரவு சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடைமுறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கி. தயாபரி, JSAC நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் திரு. என். சுகிர்தராஜ், JSAC நிறுவனத்தின் ஆளுநர் சபையின் செயலாளர் திருமதி கோசலை மதன், உப தலைவர் திரு. கே. கௌதமன், JSAC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





