நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.22.46 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நெடுந்தீவில் விளையாட்டு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை உரிய முறையில் பயன்படுத்தி, திட்டமிடப்பட்ட பணிகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் நிறைவேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு அபிவிருத்திப் பணிகளுக்காக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் ரூ.22.46 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இவ்விடயத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரட்ணாயக்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே ஆகியோர் விசேட அக்கறையுடன் செயற்பட்டு, இந்த நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொடுப்பதில் பங்களிப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த நிதியின் மூலம் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார். கிடைக்கப்பெற்றுள்ள நிதியை உரிய காலத்திற்குள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் திட்டமொன்றை அனைத்து தரப்பினரும் இணைந்து தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, இவ்வாண்டு நெடுந்தீவுக்கு பல்வேறு துறைகளின் ஊடாக பெருமளவான நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகவும், குளிரூட்டப்பட்ட பயணிகள் படகுக்காக சுமார் ரூ.235 மில்லியன், கிராமப்புற வீதிகளுக்காக ரூ.40 மில்லியன், சமூக சக்தி அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.32 மில்லியன், வீடமைப்புத் திட்டத்திற்காக ரூ.34.60 மில்லியன், கடற்றொழில் அமைச்சின் திட்டங்களுக்கு ரூ.3 மில்லியன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக மொத்தமாக சுமார் ரூ.408 மில்லியன் நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்தினால் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள நிதி ஒதுக்கீடுகளை உரிய முறையில் பயன்படுத்தி, நெடுந்தீவு மக்களின் அவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அதிகபட்சமான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள விளையாட்டு மைதானம் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், நெடுந்தீவில் இயங்கும் அனைத்து விளையாட்டுக் கழகங்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் பெருமளவு நிதி முதலீடு செய்யப்படும் இவ் அபிவிருத்திப் பணியின் முழுமையான பயன் நெடுந்தீவின் முழுச் சமூகத்திற்குகிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நெடுந்தீவு மக்களிடையே கரப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு காணப்படும் ஆர்வத்தை கருத்திற்கொண்டு, பொருத்தமான இடத்தில் தரமான விளையாட்டு மைதானத்தினை அபிவுருத்தி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது .இதன் மூலம் விளையாட்டு மைதானத்திற்குத் தேவையான மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பான சூழலில் விளையாட்டில் ஈடுபடக்கூடிய நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். நெடுந்தீவுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் உரிய காலத்திற்குள் பயனுள்ள அபிவிருத்திப் பணிகளாக மாற்றப்பட வேண்டும். இதற்காக பிரதேச செயலகம், பாடசாலை நிர்வாகம், மாகாண அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என். பிரபாகர், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. லெனின் அறிவழகன், மாகாண கல்வித் திணைக்கள பொறியியலாளர் திருமதி எஸ். சரன்ஜா, பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். இராஜசீலன், நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபர் திரு. ஐ. தயாபரன், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






