அரச திணைக்களங்களுக்கிடையிலான பூப்பந்தாட்டச் சுற்று தொடரில் யாழ்.மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடம். வடமாகாண ரீதியில் அரச திணைக்களங்களுக்கு இடையில் நடைபெற்ற பூப்பந்தாட்டச் (Badminton) சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 16.08.2026 அன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியும் கல்வித் திணைக்கள அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கல்வித் திணைக்கள அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. இதன்போது, சிறப்பாகப் போட்டியிட்ட யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டியது. இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (21.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், தாம் பெற்ற வெற்றிக் கிண்ணத்தை அரசாங்க அதிபர் முன்னிலையில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது அணியினரின் சாதனையைப் பாராட்டிய அரசாங்க அதிபர், எதிர்காலத்திலும் இவ்வாறான போட்டித் தொடர்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துத் தெரிவித்தார். இப்போட்டித் தொடரை வலிகாமம் மேற்கு பிரதேச சபையும், வாழ்வோதயம் (மாற்றத்திற்கான சமூக அமைப்பு – CFFC) அமைப்பும் இணைந்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.






