“வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்” காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (25.08.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் திரு. மகேஷ் கட்டுலந்தா ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பணிப்பாளர் சபை உறுப்பினர் திரு. T. யோகராஜா அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடற்றொழில் கெளரவ அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கெளரவ அமைச்சர், வட மாகாண கெளரவ ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் ஆகியோர் உரையாற்றினார்கள். இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 2,300 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,940 பேருக்கான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டவரின் பின்னாலும் ஒரு மனித உயிரும், ஒரு குடும்பத்தின் சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான வாழ்வும் உள்ளடங்கியுள்ளன. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்டகாலமாக சொல்லொணாத் துயரங்களையும் மனவேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். அதேவேளை, வழங்கப்படும் உதவித் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கைக்கான முழுமையான தீர்வாக அமையாது என்பதால், அவர்களின் நீண்டகாலத் தேவைகளையும் கருத்திற்கொண்டு அமைச்சு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களாக இருந்தாலும், கலந்துகொள்ள முடியாதவர்களாக இருந்தாலும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பமும் ஆழ்ந்த உணர்வுகளுடனும் சொல்லொணாத் துயரங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து, சட்டத்துறை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அவர்களுக்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிகழ்வு வெறுமனே ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வாக அமையாமல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் முக்கியமான நாளாக அமைய வேண்டும். மேலும், கௌரவ அமைச்சர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், மாவட்ட செயலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மருத்துவ முகாமில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கேற்று தங்களது மருத்துவத் தேவைகளில் சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் வாழ்வாதார மற்றும் நலத்தேவைகளில் கவனம் செலுத்துவதற்கான முக்கியமான முன்னெடுப்புகளாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், கௌரவ அமைச்சர் நேரடியாகக் கலந்துகொண்டிருப்பதும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைகின்றது எனவே, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக எமது தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேலும், வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு இன்றைய நாளில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் குடும்பங்களுக்கான பிரதிபலிப்பு அமர்வும், சிவில் சமூக அமைப்புகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் சிவில் சமூக அமைப்புகளுக்கான பிரதிபலிப்பு அமர்வும் இடம்பெற்றன. நிகழ்வின் நிறைவில் திருமதி. கிருஷாந்தி ரத்நாயக்க அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு முன்னதாக, இன்று காலை 11.00 மணிக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக மருத்துவ முகாம், குடும்ப அங்கத்தவர்களுக்கான தொழில்வழிகாட்டல்கள், உளவியல் மற்றும் போதை ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு உள்ளிட்ட நடமாடும் சேவைகள் இடம்பெற்றன. இச்சேவைகளில் சுமார் 352 குடும்பங்கள் பங்குபற்றியதுடன், 217 பேர் மருத்துவ முகாமில் பங்கேற்றினார்கள் என்பதுடன், அவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்படமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில், மதகுருமார்கள், நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. மதுமதி வசந்தகுமார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி. எழிலரசி அன்ரன் யோகநாயகம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவல யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் திரு. த. செல்வகுமார், யாழ்ப்பாண மாவட் ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு எஸ். கபிலன், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள், காணமல் ஆக்கப்பட்டோர்கள் உ றவுகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






