2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யல பருவகால) நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக,நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் ( 31.08.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், 2026 யல பருவகாலத்திற்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலைக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் இருப்புகளைத் துரிதமாகக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதிமேதகு சனாதிபதி அவர்களினதும் அமைச்சரவையினதும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, விவசாயிகள் தமது அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் நெல் மற்றும் அரிசி விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஒத்துழைப்புடன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், மாவட்டச் செயலகங்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தரவாத விலையின்படி, தரமான சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டுநெல் கிலோகிராம் ஒன்றுக்கு 120 ரூபாவும், சம்பா நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 130 ரூபாவும் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இத்திட்டத்தில் பங்கேற்கும் தகுதியுடைய சிறு மற்றும் நடுத்தர அளவிலான பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ஆலைகளை இயக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், தமது மாவட்டச் செயலகங்களில் பதிவு செய்து கொண்டு, அரசாங்கத்தினால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக தகுதியுடைய பங்கேற்பாளர்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை வட்டியில்லாத சலுகை நிதி வழங்கப்படுவதுடன், கொள்வனவு செய்யப்படும் நெல்லை உரிய காலத்திற்குள் அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பது பங்கேற்பாளர்களின் முக்கிய பொறுப்பாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டில், அதிமேதகு சனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், மாவட்ட மட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நெல் உற்பத்தி நிலைமையைப் பொறுத்தவரையில், இத்திட்டத்தின் கீழ் பாரியளவில் நெல் கொள்வனவு செய்வதற்கான உற்பத்தி அளவு குறைவாகவே காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். எனினும், நெல் உற்பத்தி அதிகமாக உள்ள மாவட்டங்களில் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தலில் காணப்படும் சிரமங்களைத் தீர்க்கும் வகையில், உற்பத்தி பகுதிகளையும் கொள்வனவு செய்யக்கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலைகளையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி குறைவாக இருந்தாலும், இத்திட்டத்தின் மூலம் நெல் உற்பத்தியாளர்களுக்கு உரிய சந்தை வாய்ப்பும் நியாயமான விலையும் கிடைப்பதுடன், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் கொள்வனவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் போதியளவு நெல் கொள்வனவு செய்யக்கூடிய உற்பத்தி காணப்படுவதாக, அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். எனவே, நெல் உற்பத்தியாளர்கள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் பொறுப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள், கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதுடன், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள், அதாவது சுமார் 240 நாட்களுக்குள் பெறப்பட்ட நிதியை மீளச் செலுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தை விவசாயிகளின் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து திட்டத்தைச் சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, திட்டத்தின் நோக்கம், நடைமுறைகள், நிதி தொடர்பான பொறுப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடமைகள் தொடர்பான விளக்கக்காட்சி வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடலில் கலந்துகொண்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களது நிறுவனங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் திட்டத்தில் பங்கேற்பது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.






