காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று (03.09.2026) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர் செல்வி நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரக் கிளை பிரதிப் பணிப்பாளர் திரு. மனுவேல் வித்தியானந்தநேசன் மற்றும் காரைநகர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. புவிலோகசிங்கம் அருள்நேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கௌரவ விருந்தினர்களாக கடற்கரை கரப்பந்தாட்டத்தில் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்ற செல்வி ஜெயக்குமார் கம்சிகா மற்றும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட மட்ட வீரரும் சிறந்த சுயதொழில் முயற்சியாளருமான திரு. தம்பிராசா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாணம் ஆகியன இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தோப்புக்காடு விளையாட்டுக் கழகமும் ஐயனார் விளையாட்டுக் கழகமும் விறுவிறுப்பாக மோதின. தொடர்ந்து, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணிக்கும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதித்துவ அணிக்கும் இடையில் கயிறிழுத்தல் போட்டி இடம்பெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளரின் தலைமையுரை, சிறப்பு விருந்தினர் உரை மற்றும் பிரதம விருந்தினர் உரை ஆகியன இடம்பெற்றன. இதன்போது விளையாட்டுத் துறையில் இளைஞர்களின் பங்களிப்பு, ஒற்றுமை, ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் விளையாட்டின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கு பிரதம விருந்தினர் உள்ளிட்ட விருந்தினர்களால் வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி உணர்வையும், இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கும் வகையில் இவ் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பானதொரு நிகழ்வாக அமைந்தது. இறுதியில் நன்றியுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து வருடாந்த விளையாட்டு விழா இனிதே நிறைவடைந்தது.






