விவசாயத் தொகைமதிப்பு நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான (Tablet Technical Officers) ஒரு நாள் பயிற்சி நெறி மாவட்ட புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வித்தியானந்தனேசன் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் (04.09.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், விவசாயத் தொகைமதிப்புடன் தொடர்புடைய இப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், எந்தவொரு அபிவிருத்தித் திட்டமிடலுக்கும் தரவு இன்றியமையாதது எனவும், நம்பகமான தரவுகள் இல்லாமல் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், தரவுகள் பொதுவாக இரண்டு பிரதான வழிகளில் சேகரிக்கப்படுகின்றன எனவும், அவற்றில் முதல்நிலைத் தரவு என்பது களத்திற்குச் சென்று நேரடியாக சேகரிக்கப்படும் தரவுகளையும், இரண்டாம்நிலைத் தரவு என்பது ஏற்கனவே காணப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவுகளிலிருந்து பெறப்படும் தரவுகளையும் குறிக்கின்றன எனவும் அவர் விளக்கினார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளை வழங்கும் பிரதான நிறுவனமாக புள்ளிவிபரத் திணைக்களம் காணப்படுவதால், சேகரிக்கப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை, நம்பகமானவை மற்றும் உறுதிப்படுத்தப்பட்டவை என்பதனை உறுதி செய்வது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
விவசாயத் துறை தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தற்போதைய சூழலில் சில சவால்களை ஏற்படுத்தக்கூடும் எனவும், எனினும் காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப முறைகளுக்கு நாம் பழகிக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். இன்று நாம் சேகரிக்கும் ஒவ்வொரு தரவும் எதிர்கால சந்ததியினருக்குப் பயனளிக்கக்கூடிய பெறுமதிமிக்க வளமாகும். எனவே, தரவு சேகரிப்புப் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். இப்பயிற்சி நெறியில் 58 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டன.






