வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக
கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.
1990ஆம் ஆண்டு இடம்பெயர்வை எதிர்கொண்ட வலிகாமம் வடக்கு மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருந்த கலை மற்றும் பண்பாட்டு மரபுகள், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இன்றுவரை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருவது பாராட்டுக்குரிய விடயம் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், தாயகத்தை விட்டு பிரிந்து வாழ்ந்த காலங்களிலும் தமது கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து வந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைவதாகக் குறிப்பிட்டார். மேலும், கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கௌரவிப்பது அவர்களின் கலைப்பயணத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், இளம் தலைமுறையினரையும் கலைத்துறையில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மாகாணத்தின் நிதி ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இத்தகைய பண்பாட்டு விழாக்கள் கிராம மட்டத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், தமிழர் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கலை ஆற்றுகைகளுடன் ஆரம்பமான விழா !
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, பிரதேசத்தின் பல்வேறு கலை ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் துர்கையம்மன் ஆலய தலைவாசல் இராஜகோபுர முன்றலில் இருந்து விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு நடைபெற்றதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மங்கல இசையினை திரு. இ. ஞானசம்மந்தர், திரு. த. உதயசங்கர் மற்றும் குழுவினரின் கலை ஆற்றுகை இடம்பெற்றது.mஅதனைத் தொடர்ந்து பன்னாலை ஆசிரியர் திரு. நி. பாபுதரன் அவர்களால் அரங்கத் திறப்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து தெல்லிப்பழை கலாசார மத்திய கலைக்குழுவினர் (அளவெட்டி தெற்கு) வழங்கிய வரவேற்பு நடனம் சிறப்பாக இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, உதவிப் பிரதேச செயலாளர் திரு. செ. நிசான் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்வுகள்
பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதேசத்தின் பாரம்பரிய கலைகளையும், கலைஞர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதேச மட்ட கலைமன்றப் போட்டியில் முதலிடம் பெற்ற “சோலைக்குயில்” அவைக்காற்றுக் களத்தினர், விழிசிட்டி வழங்கிய கிராமிய இசை நிகழ்வினை நடாத்தினர். அதனைத் தொடர்ந்து “வாத்தியப்பிருந்தா” எனும் இசை நிகழ்வை வலிகாமம் வடக்கு பிரதேச அணிசெய் வாத்தியக் கலைஞர்கள் வழங்கினர். மேலும், பிரதேச மட்ட கலைமன்றப் போட்டியில் முதலிடம் பெற்ற ஆரோகணா அரங்கக் கல்லூரி கலைக்குழுவினர் – தஞ்சிட்டி, அளவெட்டி வடக்கு ஆகியோரின் சிறப்புக் கலை நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து மாவை பொதுச்சேவைக் கழக கலைக்குழுவினர், பளை வீமன்காமம் வடக்கு வழங்கிய பாரம்பரிய ஒயிலாட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இவ்வாறு பிரதேசத்தின் பல்வேறு கலை வடிவங்களை ஒரே அரங்கில் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
கலைஞர்கள் கௌரவிப்பு :
“கலைச்சுடர் விருது” வழங்கி வைப்பு
பண்பாட்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிரதேசத்தின் கலைத்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டிற்கான பிரதேச “கலைச்சுடர் விருதுகளும்” வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி, ஒப்பனைக் கலையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவரும் அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த திரு. ஐயாத்துரை பத்மதாஸ் அவர்களுக்கு “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. வாத்தியக்கலையில், குறிப்பாக ஆர்மோனியம் இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் மல்லாகம் கிழக்கைச் சேர்ந்த திரு. சிவநாதன் றஜீவன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், வயலின் வாத்தியக் கலையில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அளவெட்டி தெற்கைச் சேர்ந்த திருமதி நிக்ஸ்சனா கோகிலரூபன் அவர்களுக்கும் “கலைச்சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. கலைத்துறையில் தமது நீண்டகாலப் பணியினூடாக பிரதேசத்தின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் பங்களிப்பாற்றி வரும் கலைஞர்களை அடையாளப்படுத்தி கௌரவிக்கும் இந்நிகழ்வு, கலைஞர்களுக்கு மேலும் ஊக்கத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் அமைந்தது. கலைமன்ற மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசில்கள் இதனுடன், பிரதேச மட்ட கலைமன்றப் போட்டிகள் மற்றும் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வின் நிறைவாக, தெல்லிப்பழை கலாசார உத்தியோகத்தர் திரு. த. அமலதாஸ் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, நிகழ்வின் சிறப்பையும் சிறப்புறச் செய்தனர்.
 
 
 1 2 3 4 5 6 7 11 9 13 18