யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (14.09.2026) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. “மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும்!” – அரசாங்க அதிபர் இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவுத் துறையில் நீண்ட வரலாற்றையும் பெருமையையும் கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, நெருக்கடியான காலங்களிலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி முக்கிய பங்காற்றியுள்ளன. தற்போதைய போட்டிமிக்க சூழலில், கூட்டுறவுச் சங்கங்கள் காலத்திற்கேற்ப தங்களது வணிக உத்திகள் மற்றும் சேவை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும். ‘Coop City’ என்ற வலுவான அடையாளத்தை உருவாக்கி, ஒரே கூரையின் கீழ் மளிகை, மருந்து, எரிபொருள், டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குவதுடன், இளைஞர்களை தொழில்நுட்பத்துடன் இணைத்து கூட்டுறவுத் துறையை நவீனப்படுத்த வேண்டும். தனியார் துறையை விட குறைந்த விலையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதும், மக்களுக்கு தேவையான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் கூட்டுறவுத் துறையின் முக்கிய பலமாகும். சேவை ஒரு கடமை என்ற அடிப்படையில் மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும். பழமையான சிறந்த அனுபவங்களைப் பாதுகாத்துக்கொண்டு, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, மக்களை மையப்படுத்திய சேவைகளை முன்னெடுப்பதன் மூலமே கூட்டுறவுத் துறையை எதிர்காலத்திற்கு வலுவாகக் கொண்டு செல்ல முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். கூட்டுறவு அமைப்புக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான ஆராய்வு! இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு அமைப்புக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை! குறிப்பாக, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினால் உலர் உணவுப் பொருட்களை அரச சார்பற்ற நிறுவனங்கள், வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசணைத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்குவதற்கான கொடுப்பனவுகளை முன்னுரிமைப்படுத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எரிபொருள் விநியோகத்தில் அளவு வேறுபாடுகள்! குறித்து பரிசோதனை கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடைமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பெற்றோலிய பவுசர்களில் நிரப்பப்பட்டு அனுப்பப்படும் எரிபொருளின் அளவுகளில் வேறுபாடுகள் காணப்படுவதாக பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைவாக, எரிபொருள் நிரப்பப்படும் பவுசர்களின் தரம், கொள்ளளவு மற்றும் நிரப்பப்படும் எரிபொருளின் அளவு ஆகியவற்றை உரிய முறையில் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிறை மற்றும் அளவைகள் உத்தியோகத்தரிடம் அரசாங்க அதிபர் அறிவுறுத்தினார். கூட்டுறவுக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நடவடிக்கை!






